Monday, January 17, 2011

ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் !!??

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது.


ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக் காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள் சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.

முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது..

ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"

ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின் வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.

வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன் பறந்தான்.

அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம் கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும் ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ / இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.

ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை கொண்டிருக்கும்.

Wednesday, January 12, 2011

பொங்கல் வாழ்த்துகள் !!

காடு வளர்த்து கழனி திருத்தி
அணை எடுத்து புனல் தேக்கி
உழவு செய்து களை நீக்கி
பயிர் நடுத்து மானுடத்தின் பசிபோக்கி
கலை வளர்த்து கொடை கொடுத்து
அச்சம் தவிர்த்து வீரம் வார்த்து

இயற்கை துதித்து கால்நடை போற்றி
சுற்றம் அழைத்து சுகித்திருக்கும் ஓரினம் - அது
உலகத்தின் தொன்மையினம் தமிழராம்
அவர்தம் மொழி தமிழாம்
அவர்போற்றும் பண்டிகை பொங்கலாம்!!

பொங்கல் பண்டிகை என்பது திருவிழா என்பதையும் மீறி தமிழர்கள் என்ற இனத்தையும், அந்த இனப் பேசும் தொன்மையான மொழியையும், அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்தும் நன்நாள்.தமிழர்களின் சுய அடையாளத்தை உணர்த்தும் பொன்நாள்.அந்நாளை மகிழ்வுடன் நினைவு கூறுங்கள்!!

தோழர்கள் அனைவருக்குன் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

Monday, January 3, 2011

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை
நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை

குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம் 
கற்பு பற்றி கொண்டிருக்கும்  வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு.

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
 கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)

 கரண் - உடம்பு
 கொளற்குரி - பெறுவதற்குரிய
 கிழவன் - உரியவன்;தலைவன்   
 கொடைக்குரி - கொடுத்தற்குரிய
 கிழத்தி - உரியவள்;தலைவி

கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும், பெண்ணைப் பெற்றோர்  பெண்ணைக் கொடுப்பதுமாகும். 

கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...
கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும்  தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும்  கருதப் பெறுவர்.

ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும்  இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.


களவு:
"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
 பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
 ஆங்கநால் வகையினும் அடைந்த  சார்போடு
 மறையென மொழிதல் மறையோர் ஆறே"

காமப் புணர்ச்சியும் - மனம் ஒத்த இருவர் தாமே கூடி புணர்வது(பெற்றோர்கள் சம்மதமின்றி).இதை இயற்கைப் புணர்ச்சி எனவும் கூறுவர்.  

இடந்தலைப் படலும் - இயற்கைப் புணர்ச்சி கொண்ட தலைவன் தலைவி மீண்டும் அவ்விடத்தே சென்று கூடுதல் 

பாங்கோடு தழாலும் - (பாங்கன்:தோழன்) தோழனை தலைவியிடம் தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

தோழியிற் புணர்வுமென்று - தலைவியின் தோழி வழியே தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

..ஆக களவை நான்கு வகைபடுத்துகின்றனர்

"உளமலி காதல் களவு எனப்படுவது
 ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
 யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப"  (களவியல் நூற்பா -1)

கொடுப்போரும், பெறுவோரும்  இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.

ஞானக்கூத்தன் களவு பற்றி இவ்வாறு கூறுகிறார் 
"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"