Friday, October 18, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 4

  
அதிகமாக ஊடல், கூடல் பற்றியே எழுதியாச்சு. இன்றைக்கு ஒரு மாறுதலாக வீரத்தை பற்றி எழுதலாம். 

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்கச் சொல்வோம் உலகுக்கு !!

இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!

இரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித் தாமரையை பறிப்போம் !!

இருவர் படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள் நரம்புகளை முறுக்கேரச் செய்யும்.

பழங்காலப் போர்க்களங்களில் போர் தொடங்குவதற்கு முன் பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு, கரடிகை, திண்டி போன்ற கருவிகளை ஒன்று சேர்த்து இசைக்கச் செய்வர். இந்த இசையைக் கேட்டு வீரர்களின் நரம்பு முறுக்கேறி, போர் வெறி பிறக்குமாம். மனிதர்களுக்கே இப்படியெனில் யானைகளுக்கு கேட்கவா வேண்டும்

இந்த முத்தொள்ளயிரப் பாடலி கொஞ்சம் கவனியுங்கள். 

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது
செங்கண் மாக்கோதை சினவெம் களியானை
திங்கள்மேல் நீட்டும் தன் கை

கொடிய போர்க்களம். வீரம் கொண்ட மன்னர்களின் விரிந்த வெண்தாமரை போன்ற வெண்கொற்றக் குடையை சேரனுடைய பட்டத்து யானை பிடுங்கி எறிந்து நொறுங்கச் செய்கிறது. சினம் சினம்!! பிடித்து எறிந்தும் அதன் கோபம் ஆறவில்லை. சினமிக்க அந்த யானை வானில் தெரியும் வெண் நிலவை பகை மன்னனின் வெண்கொற்றக் குடை   என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய தன துதிக்கையை நீட்டுகிறதாம் !! என்ன கற்பனை !!Monday, October 14, 2013

உணர்ச்சிப்போலி


கோபம்கொண்டு குமைந்தபோதும்
துரோகம்கண்டு துவண்டபோதும்

வறுமைகொண்டு வாடியபோதும்
வெறுமைகொண்டு ஓடியபோதும்

நறவுண்டு களித்தபோதும்
உறவுகண்டு புளித்தபோதும்

வாடைதழுவி உறைந்தபோதும்
பேடைதழுவி கறைந்தபோதும்

புலவிநீண்டு தீய்ந்தபோதும்
கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில்

இருப்பை உணர்த்திய நிழலே
மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !!

இரத்தம் கெட்டு சத்தம் கெட்டு
எயிறு கெட்டு வயிறு கெட்டு
வாசம் கெட்டு சுவாசம் கெட்டு
இதயம் கெட்டு இதழ் கெட்டு
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
உருவம் கெட்டு பருவம் கெட்டு

அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த
உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?

Sunday, October 13, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 3


நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது  உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது

விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி,
இடை தழுவி
இமை மூடி
இதழ் ஒற்றி
இன்பம் துய்க்காமல்
இன்னும் ஏன் ஊடலோ?

மஞ்சத்தில் துஞ்ச ...
நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.
கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

அந்த முத்தொள்ளாயிரப்  பாடல் இதுதான்

யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாற விளக்கம்:

நான் பொய்க்கோபம் கொண்டு ஊடினால் அவன் என் பொய்க்கோபம் தீர்க்க தக்க சமாதனம் கூறி ஊடலைப் போக்க முன்வருவான். ஆனால் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊடலைத் தொடருவேன். இதனைக் கண்ட அவன் பிறகு என்னோடு ஊடல் கொள்ளுவான். நான் அவனைத் தேற்ற முற்படுவேன். ஆனால் அவன் அதற்க்குச் செவி சாய்க்க மாட்டான். இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !!

******************************************************************
 வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

அருமையான இந்தப் பாடல் வரிகள் சொல்லும் செய்திகள் ஆயிரம்.. ..

வேரும் இல்லாமல் விதையும் இல்லாமல் விண் தூவுகின்ற மழையும் இல்லாமல் பூந்தோட்டம் பூக்குமா !!??
ஆம். காதல் என்ற பூந்தோட்டம் பூக்கும். அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாமே சாத்தியம்... மண்ணும் மாமலையும் விண்ணும் பொன்னும் பொருளும் எதுவுமே இவர்களுக்கு பொருட்டே இல்லை. ஈதல் இரத்தல் இந்த இரண்டிலும் இன்பம் இங்கு மட்டுமே.

அன்னையும் கோல்கொண்டு அழைக்கும் அயலாரும்
என்னையும் அழியும் சொல் சொல்லுவார் - உள்நிலையை
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண் தேர் வளவன் திறத்து

தாயாரும் என்னை தடி கொண்டு அடிக்கிறாள். ஊராரும்  என் உள்ளம் வருந்த பழி கூறுகிறார்கள். ஆனால் அவனை நான் பார்த்தது கூட இல்லை. எல்லாம் எதனால்?? அவன் பின்னே என் மனம் சென்றதனால் !!  தன நிலைமையை ஒரு அருமையான உவமையால் விளக்குகிறாள்.

தென்னை மரத்தில் தேங்காய் குரும்பையாக வளர்கின்ற போதே தேரை நோய் பற்றிக் கொள்ளும்.அதனால் தேங்காய் வளர்ச்சி குன்றும். இங்கு தேரை தேங்காயை உண்பதில்லை. ஆனால் உலகத்தார் தேரை உண்ட தேங்காய் என்று ஒதுக்கி தள்ளுவர். பாவம் தேரை தேங்காய் திண்ணாமலேயே தின்றதாக பழி ஏற்கிறது. என் நிலையும் அப்படித்தான் .

திரும்பவும் அந்தப்  பாடல் வரிகளை ஒரு முறை வாசியுங்கள் ..

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

Thursday, October 3, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 2

வாடைக் காற்றே!! காதலர்களை வாட்டுவதல்தான் உனக்கு வாடை என்ற பெயரோ !!??

மாலை மயங்கி மன்மதன் தன் மலரம்புகளை எய்யும் வாடை வீசும் மார்கழி மாதம்.  பால்நிலவு தன் பட்டுப் பாதங்களை பூமியில் மெல்ல பரப்பும் காலம் காட்டில் வாழும் காடைகளும் தன் பேடைகளுடன் சுகித்திருக்க இவளோ தனிமையில் !! காதல் நினைவுகள் கனலாக கொதிக்க குளிர் வாடையும் கொடும் அனலைச்  சொரிகிறது!!

காதலன் தழுவிய எண்ணங்களை தழுவுவதால் அவள் காதல் வேட்கை கட்டுக்கடங்காமல் பெருகுகிறது. மோகம் என்னும் தாகம் பருகாமல் அடங்காது.. என்ன செய்வது?? கட்டுக் காவலும் அதிகம்...அதனால் வந்து விடாதே என்று காதலனை எச்சரிக்கிறாள்!!  

தமிழில் வேட்கை என்ற வரத்தை ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. ஒன்றின் மேல் கொண்ட ஆசை(காதல், விடுதலை...எதுவானாலும் சரி) அதை அடையும் வரை அதன் மேல் உள்ள விருப்பு குன்றிமணி அளவும் கூட குறையாமல் அதே வேகத்துடன் இருப்பது.

பாடல் இதுதான்

நாம நெடுவேல் நலங்கிள்ளி சேணாட்டுத்
தாமரையும் நீலமும் தைவந்து - யாமத்து
வண்டொன்று வந்தது வாரால் பனிவாடாய்
பண்டுஅன்று பட்டினம் காப்பு
குளிர்ந்த சோழ வளநாட்டில் உள்ள தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தழுவி வருடி மொய்த்து தேன் உண்ண வண்டு ஒன்று வந்தது.  வண்டு ஒன்று வந்ததே என்று வாடையே நீ இப்போது வந்து விடாதே !! அப்போது காவல் இல்லை இப்போது எங்கும் கட்டுக் காவல் என்று தலைவி கூறுகிறாள்.இதன் உள் அர்த்தம் என்னவெனில், கட்டுக் காவல் மிகுதியாகி விட்டது தலைவனே இப்போது வந்து விடாதே !!