Tuesday, December 28, 2010

வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மையா?? மென்மையா??

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி மருதனார் என்ற சங்க காலப் புலவர் புறநானுற்று பாடல் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார் 
 
"துடியன் பாணன் பறையன் கடம்பன் 
இந்நான்கல்லது குடியுமிலவே” 
 
துடியன்  - துடி என்னும் தோல் கருவியை இசைக்கும் குடியினர்
பாணர்   - சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று  கலைகளையும்  செய்யவல்ல மற்றும் அவற்றையே தொழிலாக  கொண்ட ஒரு குடியினர்
பறையன் - கிளர்ந்தெழும் உடல் அசைவுகளை உருவாக்கும் இசையை இசைக்கும் மற்றும் பறை மூலம் தகவல் சொல்லும் ஒரு குடியினர்
கடம்பன் - கடம்பு மரத்தைச் சின்னமாகக் கொண்ட அரச குடியினர்
 
துடியன்,பாணன்,பறையன் மற்றும் கடம்பன் என்ற நான்கு குடிகளும் உயர்ந்த குடிகள் என்கிறார். ஆனால் இன்று இக்குடிகளுள் பறையர் என்ற குடியைத் தவிர மற்ற குடிகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுவும் இன்று தாழ்ந்த குடிகளாக பறையர்கள்  கருதப்படுகிறார்கள். 
 
மற்றைய மூன்று குடிகளும் முற்றிலும் அழிந்து போனார்களா? அல்லது அழிக்கப்பட்டர்களா ? அல்லது வேறு குடிகளாக திரிந்து போனார்களா? அப்படியே திரிந்து போனாலும் அதற்க்கான தெளிவான வரலாற்று எச்சங்கள் எதுவுமில்லையே? இவை மட்டுமின்றி நாகர், வேளிர், மாயர், இயக்கர்...இன்னும் பிற குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றது.இவர்கள் என்ன ஆனார்கள்? ஈராயிரம் ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?  
 
ஆனால் ஆயிரக்கணக்கான  ஆண்டுகளுக்குப் பின்னும் ஆரியர்கள் பெருத்த மாற்றமின்றி இன்று வரையிலும் தனித்துவத்தை பேணுவது எப்படி? பார்ப்பனர்கள் போர் புரிந்தார்கள் என்று எங்குமில்லையே? 
 
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மை குணம் கொண்ட குடிகளா???  மென்மை குணம் கொண்ட குடிகளா??? இங்கும் "தகுதியானவை தப்பிப் பிழைக்கும்" என்கிற டார்வின் கோட்பாடு செல்லுமோ??!!

Friday, November 26, 2010

கடை திறமினோ

 "இத்துயில் மெய்த்துயிலே என்றுகுறித்து இளைஞோர்
இது புலவிக்கு மருந்தென மனம்வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிறவா மடவீர் கடைதிற மின்திறன்"

துயில் - ‍தூக்கம்
கடைகள் திறமினோ - கதவுகளைத் திறவுங்கள்
புலவி - ஊடல் - காதலில் செய்யும் பொய்க்கோபம்
கூர்நயனக் - பொய் உறக்கம் கொள்கின்ற கண்

தலைவன் கலிங்கத்துப் போரில் கலந்து திரும்பி வீடு வர காலம் தாழ்த்ததினால் தலைவி கோபம் கொண்டு அவனோடு ஊடல் கொள்கிறாள். தலைவன் அவள் ஊடல் நீக்க வழி தெரியாமல் தவித்து மதி மயங்கும் மாலை நேரத்தில் வீடு செல்கிறான். அப்பொழுது தலைவி தூங்கி கொண்டிருப்பது போல் நடிக்கிறாள். தலைவி துயில் கொள்கிறாள் அவள் ஊடல் நீக்க இதுதான் சரியான தருணம் என நினைத்து அவள் மெல்லிய பாதங்களை வலி நீங்குமாறு பற்றுகிறான்.காலைப் பிடித்தாயிற்று இனி என்ன கூடல் தானே? தலைவியும் மனமிரங்கி ஊடல் நீங்கி தலைவனுடன் கூடல் கொண்டால் என்பது பொருள்.

இந்த பாட்டில் அப்படி என்ன வில்லங்கம் இருக்குனு கேக்குறீங்க?
//இது புலவிக்கு மருந்தென மனம் வைத்தடியிற் கைத்தலம் வைத்தலுமே//
அடியில் கைத்தலம் வைத்தலுமே - இதற்க்கு வேறு அர்த்தமும் உண்டு

 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
"சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்
பனிமொழி யவர்கடை திறமினோ"

சுரிகுழல் - நெளிந்த கூந்தல்
பரிபுர - சிலம்புகள் அணிந்த நிர்த்த பதம் வைத்து நடனஞ் செய்கின்ற
பனிமொழி - குளிர்ந்த மொழி - இனிய மொழி

நீண்ட நெடிய நெளிந்த கூந்தல் அசைவுற, தூக்கம் கலைந்து எழும் அழகிய மயில் போல சிலம்புகள் அணிந்த மெல்லிய பாதத்தில் சின்ன அடி வைத்து நடனஞ் செய்கின்ற போது எழும் ஒலியைப் போல குரலைக் கொண்ட இனிய மொழியை பேசுபவளே கதவை திறவாயா?? கலிங்கத்துப் பரணி புகழ் கேட்க...

கூந்தல் அசைவதும்,சிலம்பொலி எழுவதும்,இனிய மொழி பேசுவதும் கலவிப் போர் புரியுங்கால் மகளிரின் இயல்பாக கூறப்படுகிறது.
 
-------------------------------------------------------------------------------------------------------------------


"சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ் அலைசெய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ"

ஓர் அழகிய காலை நேரம் வஞ்சி ஒருத்தி மஞ்சத்திலிருந்து துயில் எழுகிறாள். அவள் தூங்கும்பொழுது சுருண்டு நெளிந்த கூந்தல் அவிழ்ந்து, வெண்ணிற உடலோடு கூடிய ஆடை கலைந்து கிடக்கிறது. எழுந்தவள் ஒரு கையால் அவிழ்ந்து நின்ற கூந்தலைத் தாங்கினாள், மற்றொரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையை பற்றினாள். அப்படியே இரண்டடி எடுத்து வைக்கிறாள்.. அக்காலை நேரத்திலும் அவள் முகம் நிலவென் மலர்ந்து நிற்கிறது...உறக்கத்திலும் கூட அவள் முகமலர்ச்சி....

இவைதான் சொற்களின் ஓவியமோ!!!

Tuesday, October 19, 2010

உயிர் கொல்கிறாய் !!

காதல்மொழி பேசாமல்

கரம் தீண்டாமல்

இடை தழுவாமல்

இதழ் பருகாமல்



கண்ணாலே கள்வெறி ஏத்தி

செவ்வரி விழிவழியே

உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!

க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணி - நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்

க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணியில் ம‌ற்றுமொரு சுவைமிக்க‌பாட‌ல்

“நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்

நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு

அக்கானகத்தே உயிர்பறிப்பீர்”


காஞ்சிக்கும்(பழமையான தமிழ் நகரம்) வடமலைக்கும்(இம‌ய‌ம‌லைக்கும்) ந‌டுவே வேட‌னை விட்டு, அக்காட்டிலே அவனது உயிரை ப‌றிப்பீராக(கொல்லுவீராக). இது வெளிப்ப‌டையான் அர்த்த‌ம்.


இதில் மறைந்திருக்கும் பொருள் என்னவெனில்,"ந‌ல்ல‌அணிக‌ல‌ன் ம‌ற்றும் மாலை அணிந்த‌கொங்கைக‌ளுக்கும் ந‌டுவே இல்லாத‌ இட‌மாகிய‌ இடுப்பில் ம‌ன்ம‌த‌னை விட்டு, ம‌ண‌ம் பொருந்திய‌ம‌லை போன்ற‌ கொங்கைக‌ளால் அவ‌னைக் இன்பத்தில் தோய்த்து எடுப்பீராக(கொல்லுவீராக)"

நக்காஞ்சி‍- மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
வடமலை - மாலை அணிந்த‌கொங்கைக‌ள்(மார்புக‌ள்)
நடுவில் - ந‌டுவுஇல் - ந‌டுஇட‌ம் அல்லாத‌
வெளி - இடுப்பு
வேடனை - வேள்த‌னை - ம‌ன்ம‌த‌னை
அக்கானகத்தே - கான்ந‌க‌த்து - ம‌ண‌ம் பொருந்திய‌ம‌லை போன்ற‌ கொங்கைக‌ளால்

Saturday, September 4, 2010

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த

"காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ"

ஏதேச்சையாக இந்தப் கலிங்கத்துப் பரணி பாட‌லை ப‌டிக்க‌ நேர்ந்த‌து. மிக‌வும் ர‌சிக்க‌ வைத்த‌து. நீங்க‌ளும் பாருங்க‌ளேன்.

காஞ்சியை ஆண்ட குலோத்துங்க‌ச் சோழ‌ன் காஞ்சியில் இருந்து கொண்டு க‌லிங்க‌ம் மீது போர் தொடுக்க‌ ஆணையிட‌, அவ‌ன் ஆணையால் சோழப்படைகள் கலிங்கத்தை அழித்தனவாம். மேம்போக்காகப் பார்த்தால் இதுதான் பொருள். ஆனால் இதற்க்கு இன்னொரு பொருளும் கூறலாம்.


காஞ்சி -  மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
கலிங்கம் - உடை

புணர்ச்சிக்(கலவி) காலத்தில் இடையில் அணிந்த ஆபரணம் அப்படியே இருக்க, இடையணிந்த உடை மட்டும் உலைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். கொஞ்சம் வில்லங்கமாத்தான் இருக்கு...

Monday, August 2, 2010

உதிரத்தில் கலந்த உறவே...

என் உயிரே! 
          உயிர்தரும் உதிரமே!

என் இதயமே!
          இதயமேந்தும் துடிப்பே!

என் விழியே!
         விழிகாக்கும் இமையே!

என் குரலே!
          குரல்கொடுக்கும் ஒலியே!

என் வினையே!
          வினைதூண்டும் சிந்தையே!

என் உருவே!
          உருவார்க்கும் கருவே!

என் வாசமே!
          வாசம்உணரும் சுவாசமே!

என் கனவே!
          கனவைத்தாங்கும் கற்பனையே!

என் உணர்வே!
          உணர்வைத்தழுவும் உடலே!


--------------------------------------------------------------------------------------------------------

இவள்..!!



கார்வண்ண முகிலோ!
பால்வண்ண துகிலோ!

கவிபாடும் குயிலோ!
தோகைவிரித்தாடும் மயிலோ!

அணைதாவும் புனலோ!
நதிமேவும் நாணலோ!

இயற்கைசூடும் எழிலோ!
நதிகூடும் கடலோ!

வெம்மைநீக்கும் நிழலோ
வாடைபோக்கும் தனலோ

பிறைதாங்கிய‌ நுதலோ
பூவாங்கிய குழலோ

கார்கால சாரலோ!
இள்வேனிற் தென்றலோ!


தமிழ் எண்களின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரி வடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சி துறையின் சுவடிகளில் கண்டால் இன்றைய 1,2,3,4,5,6,7,8,9,0 ஆகியவை தமிழ் எழுத்துக்களே என்பதை அறியலாம்.

இந்த தமிழ் எண்களை தமிழகத்துடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்த அராபியர்கள் கொண்டு போயினர்.அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்று கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்.அவர்களுக்கு கிடைத்த அன்றைய வடிவமே இன்றைய எண் வடிவம்.

இன்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அராபி எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு இந்த எண்களின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்று கூறுகின்றனர்.அரபி எண்கள் என்றும்,இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறி கூறப்படும் எண்கள் பழைய தமிழ் எண்களே என்பது மேலே உள்ள படத்தை நோக்கின் உணரப்படும்

Source : Dinamani.com