Tuesday, October 30, 2012

திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 1

சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்றுக்கண் . கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அதை தொட்டுச் செல்லாமல் இருக்க முடிந்ததில்லை. சங்க இலக்கிய வரிகள் என்னென்ன திரைப்பட பாடல்களில் வந்துள்ளது என்பதை பற்றி ஒரு சிறிய அலசல்.

சங்க இலக்கியம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இருவர் படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல் தான். அதில் வரும்  

"அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா"
 - அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நெற்றியில் நீர்த் திவலைகள் முத்துப் போல் உருள கொற்றவனுக்கு உரித்தான சுனையில் நீரடியவள் நீயா?. (பொய்கை என்றால் இயற்கை நீர் நிலை : சுனை. குளமன்று) 

இந்த வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சில்லிடும் உணர்வு. இந்தப் பாடலில் வரும் மிகப் பிரசித்தி பெற்ற வரிகள்  "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" புறநானூற்றில் நூற்றுப் பன்னிரண்டாம் பட்டிலிருந்து எடுத்தாண்ட வரிகள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான் பாரியின் மகள் பாடியதாக வரும். புறநானூற்றில் சோகத்தை சொன்ன அதே வரிகள் ..இருவர் படத்தில் காதலை சொல்லும்... அதே பாடலில் "யாயும் ஞாயும்  யார் ஆகியரோ" எனத் தொடங்கும் வரிகள் ஒரு அருமையான குறுந்தொகைப் பாடல் 

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும்  யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன? 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமா ? என கவலை கொண்ட காதலியை தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இது தான். உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தை பெற்று பிரிக்க முடியாதது போல  போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன.

அடுத்த முறை வேறு ஒரு பாடலை காணலாம்...






Monday, October 29, 2012

கனாக்களோடும் வினாக்களோடும்

மண்ணைத் துறந்து 
மனையை விடுத்து
மனையாளைப் பிரிந்து 
மழலைகளின் மொழிமறந்து
எல்லையற்ற ஆசைகளை சுமந்து
எண்ணற்ற கனாக்களில் கரைந்து  
எதிர்கால வண்ணங்களில் நனைந்து    
பெண்மகவு இரண்டு கொண்டதால்
பின்னாளில் பொருட்ச்செலவு  மிகுமென  
போருள்தேடச் செல்கிறேன் தொலைதூரம் -அங்கு 
துணையின்றி தூக்கம் தழுவுமோ
குழந்தைகாணா   கண்கள்தாம் அயறுமோ 
சுகதுக்கங்கள் பகிர சுற்றம் கிட்டுமோ 
நட்பு பாராட்ட நண்பன்  கிடைப்பானோ 
தனிமை எனை திண்ணுமோ        
வெறுமை எனை துறத்துமோ  
அலுவல்சுமை  எனை அமிழ்த்துமோ     
கனாக்களோடும்  வினாக்களோடும்  வானவீதியில் நான் .

Wednesday, April 25, 2012

ஆதித்த கரிகாலன் கொலையும் அதன் மர்மங்களும் - II

ஒவ்வொரு முறையும் ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணங்களை பற்றி ஆராயும்பொழுது  புதுப் புது உண்மைகள் தெரிய வருகிறது. அது நான் முன்பு கொண்ட எண்ணங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. வல்லவன் எழுதியதே வரலாறு.. அதையே நாமும் நம்புகிறோம். அதையே நம் பிள்ளைகளுக்கும் சொல்கிறோம். ஆனால் உண்மை வரலாறு ஆதிக்க சக்தியினாரல் மறைத்தும் / திரித்தும் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய தேடலும், அறிந்தவற்றை உரக்கச் சொல்வதுமே எமது எண்ணம். இதுவரைக்கும் நான் தேடிய தேடல்களின் முடிவில் இருந்து நான் அறிந்து கொண்டது "கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் வரலாற்று உண்மைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை". வரலாற்று உண்மைகளை அறிய வேண்டுமெனில் அக்கற்பனையில் இருந்து மீள வேண்டும்.          

சோழ வரலாற்றில் ஆதித்த கரிகாலன் மட்டும் மர்மான முறையில் கொல்லப்படவில்லை. அவன் தாத்தாவாகிய அரிஞ்சய சோழனும், அப்பனுமாகிய சுந்தர சோழனும், மைத்துனனுமாகிய வந்தியத் தேவனும்  மர்மமான முறையிலே கொல்லப்பட்டுள்ளனர். இதன் கொலைக்கான காரணங்களைப் பார்க்குமுன் அப்போது நிலவிய சமூக சூழலை பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் சைவ மதத்திற்கும் வைணவ  மதத்திற்கும் இடையே பல மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இக்கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன. சோழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் (பாண்டியர்களும் கூட). இதன் காரணமாக வைணவ பிராமணர்கள் தொடர்ந்து சோழப் பேரரசை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். காட்டுமன்னார்குடிக் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் ஆதித்தன் கொலைக்கு சதுர்வேதி  மங்கலத்துப் பிராமணர்கள்தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தினரை இராசராசன் ஊரை விட்டு துரத்தியதாக கூறுகிறது.  இந்தக் கொலைக்கு காந்தளூர்ச் சாலை நம்பூதிரி பிராமணர்கள் தூண்டுதலே காரணம் என்று கருதி இராசராசன் காந்தளூர்ச் சாலை மீது போர் தொடுத்து சிதைத்தான் என்ற கூற்றும் உண்டு.இது எதைப் பற்றியுமே கல்கி சொல்லவில்லை(சாதிப் பாசமோ??). எது எப்படியோ இக்கொலையில் உத்தம சோழனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது மட்டம் தெளிவாகிறது.

கீழ்வரும் கேள்விகளுக்கு நான் விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் .....

1) ஆதித்த கரிகாலனும் குந்தவையும் இரட்டை பிறவிகள் என்றும்,  குந்தவை பிறக்கும்போது ஒரு கால் ஊனமாக இருந்தது என்ற குறிப்புகள் பாரசீக மொழியில் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார் என்பவரைப் பற்றி குறிப்பிடும்போது உள்ளதாக கூறுகின்றனர். 

2) ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திரனும் இலங்கைக்கு படை எடுத்துச் சென்று தோல்வியுற்றதாகவும், ஆதித்த கரிகாலன் சுந்தர சோழன் இருக்கும்பொழுதே காஞ்சியை  தனியாக ஆட்சி செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

3) உத்தம சோழன் கரிகாலனை சதியின் மூலம் கொல்வதற்கு உடந்தையாக இருந்து,  இறந்தவுடன் கலவரத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி, சுந்தர சோழனை காஞ்சியில் சிறை வைத்து, ஆதித்த கரிகாலன் இறந்த கொஞ்ச நாட்களில் அவனும் கொல்லப்பட்டான் என்று கூறப்படுகிறது.

4) "முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்                    
  தலைமகன் பிரியாத் தையல்" 
  என்ற கல்வெட்டு குறிப்புகளின் படி வானமா தேவி பால் மனம் மாறாத பெற்ற குழந்தையையும் பிரிந்து கனவனுடன் தீயில் உடன்கட்டை ஏறினால் என்று குறிக்கிறது. அந்தப் பாலகன் ராஜா ராஜா சோழன் தானா? சிறு குழந்தையை பிரிந்து அவளாக உடன் கட்டை ஏறினாளா அல்லது ஏற்றப்பட்டளா?? 

5) குந்தவை வந்திய தேவனை காதல் மனம் கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.அது நிச்சயிக்கப்பட்ட திருமணமே. திருமணம் நடந்திருந்தாலும் அவர்களுக்கு குழந்தை ஏதும் இருந்ததாக் குறிப்புகள் இல்லை காரணம் வேங்கி மன்னான வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின் நடந்த ஒரு கலவரத்தில் திருநெடுங்களத்தில் கொல்லப்பட்டனா?

6) சுந்தர சோழன் மறைவிற்குப் பின் ராஜ ராஜனும் ,குந்தவையும் யார் பாதுகாப்பின் கீழ் எங்கு வாழ்ந்தனர்?

7) உத்தம சோழனிடமிருந்து எவ்வாறு ராஜ ராஜனுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்தது? உத்தம சோழன் கொல்லப்பட்டனா? கோவில் பொறுப்புகளை நிர்வகித்த உத்தம சோழன் மகன் ஊழல் குற்றசாட்டு காரணமாக கொல்லப்பட்டான் என்ற கூற்று உண்மையா?

Monday, February 27, 2012

மதி உறை / மதில் நிரை / மருதை / மதிரை / மதுரை

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த 
ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல்  தலைநகராகும். "மதுரை" இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர்.  அவற்றைப்  பற்றிய சில ...

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின்  தலைநகரமான  மதுரை என்ற  பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர். பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப் புறங்களில்குல  தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர்  எனக் கருதுவது பொருத்தமாகும். குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும்.  ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற  வார்த்தைகளில் இருந்து  வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம். 

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். 
குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.  

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப் பட்டதாக சிலரும் கூறுவர்.  

Tuesday, January 24, 2012

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பாண்டியன் எனவும் கொள்ளலாம். "வழுதி" என்பது பாண்டியர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று.

கானப் பேரெயில் - இந்த பெயரைக் கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் பல வரலாற்று நினைவுகள் என்னை மீட்டெழுப்புகிறது. அகநானூறு, புறநானூறு, திருக்குறள் எழுதிய சங்க காலத்திலும், சோழர் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்த பொழுதும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் பொழுதும் கானப் பேரெயிலை கடக்காமல் சென்றதில்லை.
கானப் பேரெயில் = கானப் + பேர் + எயில் = கானகம் + பெரிய + மதில்;
கானப் பேரெயில் = காட்டின் நடுவே உள்ள மிகப் பெரிய அரண்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பித்து பழனி, திண்டுக்கல், அழகர்மலை, பிரான்மலை, காரைக்குடி, சாக்கோட்டை, காளையார்கோயில், கீழாநல்லிக்கோட்டை வரைக்கும் பல நூறு மைல்களுக்கு ஒரு அடர்ந்த கானகம் இருந்தது. "கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளை கொண்ட காட்டரன்" என்று புறநானுற்று பாடல் ஒன்று வர்ணிக்கிறது. அந்த காட்டு பிரதேசத்திற்கு "கானாடு" என்று பெயர். அந்த காட்டின் நடுவே இருந்த உயரமான கோட்டைக்கு கானப் பேரெயில் என்று பெயர். கானப் பேரெயில் இப்பொழுது காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கானப் பேரெயில் பற்றியும்  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பற்றியும் ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் புறநானூற்றில் பின்வருமாறு ஒரு பாடலைப் பாடியுள்ளார்

"நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க"

நிலவரை இறந்த குண்டுகண் அகழி- நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும்;
வான்தோய் வன்ன புரிசை - வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த அரண்;
மீன்பூத் தன்ன உருவ ஞாயில் - வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும்;
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை - கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும்
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் - பகைவர் நெருங்க முடியாத அரண்களால் சூழப்பெற்ற கானப்பேர் எயில்;

மேற்கண்ட பாடல் உக்கிரப் பெருவழுதி கானப்பேர் எயிலை ஆண்ட வேங்கை மார்பன் என்ற அரசனை வென்று அக்கோட்டையை கைப்பற்றியதை பற்றி கூறியதாகும்.


ராஜராஜ சோழன் இலங்கைக்கு படை எடுத்துச் சென்றபோது இக்காடுகளில் வழியாகத்தான் படைவீரர்களை அழைத்துச் சென்றான். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலிருந்து படையெடுத்த லாங்காபுரத் தண்டநாயகனின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட கோட்டையும் இதுதான். வீர பாண்டிய கட்டபொம்மன் ஒளிந்து கொண்டது இக்காடுகளில் தான், மருது பாண்டியர்கள் மறைந்திருந்து ஆங்கிலேயர்களை தாக்கியதும் இக்காடுகளில் தான். இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த காடுகளை, மருது பாண்டியர்களை போரில் வென்றவுடன் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான். காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது.

சரி விடயத்திற்கு வருவோம். உக்கிரப் பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன். போர்க்களத்தில் மிகத் துரிதமாகவும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் கொண்டதால் இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டது.  தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதக்கூடியதாக மூவேந்தர்கள் நட்பு உக்கிரப் பெருவழுதி காலத்தில் அமைந்தது. இந்த கால கட்டத்தில் மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. உக்கிரப் பெருவழுதி காலத்து சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி, சேரமான் மாரி வெண்கோ ஆகிய மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை சங்க காலத்து ஔவயார் புறநானூற்றில் பின்வருமாறு எழுதிய பாடல் மூலம் அறியலாம்.

"நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்"


உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரை தலைமைப் புலவராக அமர்த்தி தொகுக்கும் பணியை முடித்தான். உலகப் பொதுமறை திருக்குறள் இவனது அரசவையில் தான் அரங்கேற்றப்பட்டது எனபது செவி வழிச் செய்தியாகும். உக்கிரப் பெருவழுதி சிறந்த புலவனும் கூட.  நற்றினையில் "எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் " எனத் தொடங்கும் பாடலையும் அகநானூற்றில் "கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற" என்ற பாடலையும் பாடி உள்ளான் . 

 திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.

 உக்கிரப் பெருவழுதி பற்றி இறையனார் அகப்பொருள் உரையில்
"சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த
முடத்திருமாறன் முதலாக
உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப" 

கடல் கொள்ளப்பட்ட கடைச் சங்க காலத்தில் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்கள் புரவலர்களாக இருந்தனர். கடைச்சங்கத்தில் இவனே கடைசி மன்னனாக கருதப்படுகிறது.


Wednesday, December 28, 2011

கோச்செங்கட் சோழன்

கரிகாலன் போன்றே கோச்செங்கட் சோழன் என்ற கோச்செங்கணானும் வரலாறும் புராணமும் போற்றி புகழ் பாடும் புகழ்ச்சிக்கு உரியவன். பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் ஒன்றான,புலவர் பொய்கையார் படிய களவழி நாற்பது என்ற நூலின் பாட்டுடைத் தலைவன். சுபதேவ சோழனுக்கும், கமலாவதி ராணிக்கும் மகனாகப் பிறந்தவன் கோச்செங்கணான்.

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து  வந்த கோச்செங்கணான் சேரன் கணைக்கால் இரும்பொறையை போரில் வென்று அவனை சிறைப் படுத்தினான் என்பதும், அங்கு சேரன் குடிக்க நீர் கேட்டு அதைச் சிறைக் காவலன் தர மறுக்க  'குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார்' என்ற பாடலை எழுதி வைத்து விட்டு உயிர் நீத்தான் என்பதும் பாட நூல்களின் வழியாக நாம் அறிந்த ஒன்று.இந்நிகழ்ச்சிக்குப் பின் பல வரலாற்று சம்பவங்கள் பொதிந்துள்ளது என்பது நாம் அறியாத ஒன்று.

களப்பிரர் ஆதிக்கம் தமிழகத்தில் மிகுந்திருந்த நாட்களில் சமண மதம் பரவி கொல்லாமை போதிக்கப் பட்டு கொண்டிருந்தது. சிவபக்தனாகிய கோச்செங்கணான் போர்களில் அதிக நாட்டமில்லாமல் ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் சோழ நாட்டை ஆக்கிரமிக்கும் பொருட்டு போர் தொடுத்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று முறை சோழ நாட்டின் மீது போர் தொடுத்து  மூன்று முறையும் தோற்று சிறை பட்டான்.பொய்கையார் என்ற புலவரின் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதற்குப் பலனாக பொய்கையார் பாடியதே களவழி நாற்பது என்னும் பாடல் தொகுப்பு. அதற்குப் பின்னும் சேரன் அடாது செய்யவே சிறை பட்டு குடிக்க நீர் கிடைக்காமல் இறந்து போனான்.

எதிர்க்கும் அரசரின் குலத்தையே பூண்டோடு அழிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்த கோச்செங்கணான் மூன்று முறையும் பகை அரசனை மன்னித்து, அவன் நாட்டையே ஆளச் செய்த அவன் அசோகனுக்கு ஒப்பாவான்.காவிரிக் கரையோரம் எழுபது சிவ ஆலயங்களை எழுப்பி மதத்தை பரப்பியதுடன், மழை காலத்திலும் புயல் காலத்திலும் மக்கள் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தவன்.இவ் ஆலயங்களை  "யானை ஏறா மாடக் கோயில்" யானைகளாலும் தகர்க்க முடியாத மாடக் கோவில்கள் என்பார்கள். யானைப் படை கொண்ட சேரனை குதிரைப் படை கொண்டு வீழ்த்தியதாக கூறுவர்.

சோழனின் போர்க்களத்தைப் பாடும் களவழி நாற்பதிலிருந்து சில பாடல்கள்

"ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து."

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில் குருதி பெருகி வழிந்தோடியதாம். அக்குருதிச் சேற்றில் வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்களாம்.

"பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து"

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்றனர் . வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.
 

Saturday, November 5, 2011

தொய்யிற் கோலம்



‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது சங்க காலத்தில் இருந்ததுண்டு. இது ஒரு நுண்ணிய கலைத்திறன். இதற்கு தொய்யிற் கோலம் என்று பெயர்.

சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

தொய்யில் பற்றி சங்க இலக்கியங்கள் முழுவதும் கொட்டி கிடக்கிறது அவற்றுள் சில 

(கலித்தொகை)
* விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும் 
* மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை 
   - மகிழ்ச்சி தருகின்ற இனிய மொழிபேசும் என் தோழியின் தொய்யில் சூழ்ந்த இள மார்பகங்கள்

தடமெங்கும் புனல்குடையும் தையலார் தொய்யில்நிறம் (திருத்தொண்டர் புராணம்)
- பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம்

-(கம்ப இராமாயணம்) 
"செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்புற
மெய் அராகம் அழிய , துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே"

செய்ய வாய் வெளுப்ப - சிவந்த வாய் நிறம் வெளுப்புற்று வெண்மை நிறம் அடையுமாறு
கண் சிவப்புற - கண்கள் சிவப்பு நிறம் பெற
மெய் அராகம் அழிய - உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிந்து போக 
துகில் நெக - ஆடை நெகிழ
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் - தொய்யில் எழுதிய பெரிய மார்பகங்களை உடைய மங்கையர் நீரில் முழ்குவதால் 

காதலரைக் சேர்கையில் மகளிர் வாய் வெளுத்து வெண்மை நிறம் அடைதலும் ,  விழி சிவத்தலும்.,  உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிதலும்,   ஆடை நெகிழ்தலும் இயல்பாதலின் இச்செய்கைகள் பொய்கையிலும் நிகழ்தலின, பொய்கையும் காதலர் போன்றாயிற்று.