Sunday, September 14, 2008

குறுந்தொகை பாடல்கள் ( 4 -8 )


4.நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே 
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 
அமைதற் கமைந்தநங் காதலர் 
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
--- காமஞ்சேர் குளத்தார்.

நோம் - நோகும்(வருந்தும்); நோம்என் நெஞ்சே - நோகும் என் நெஞ்சே 
இமைதீய்ப் பன்ன கண்ணீர் - இமையை தீய செய்யும் (இமையை வருத்தும்) கண்ணீரை 
தாங்கி - துடைத்து 
அமைதற் கமைந்த - அவ்வளவு நெருக்கமாக இருந்த 
நங் காதலர் - நம் தலைவர் 
அமைவிலர் ஆகுதல் - மனம்பொருந்தாராய்ப் பிரிந்து இருத்தல்

இமையை வருத்தும் கண்ணீரை துடைத்து என்னுடன் நெருக்கமாக இருந்த நம் தலைவர் இப்பொழுதுமனம்பொருந்தாராய்ப் பிரிந்து இருத்தலால் வருந்தும் என் நெஞ்சம். மூன்று முறை நெஞ்சம் நோதலை திரும்பத்திரும்பக் கூறுவது ஆற்றாமை மிகுதியின் அறிவிப்பாகிறது.


5.அதுகொல் தோழி காம நோயே 
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை 
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் 
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.
-----நரிவெரூ உத்தலையார்.

அதுகொல் தோழி காம நோயே - (அதுகொல் - அத்தன்மையானதோ)அத்தன்மையானதோ தோழி காம நோய் ? 
வதி- தங்கு,குடியிரு;குருகு-நாரை; 
வதி குருகு உறங்கும் - நாரைகள் உறங்கும் இடமாகிய  
இன்னிழற் புன்னை - இன்+நிழல் புன்னை - இனிய நிழலையுடைய புன்னை மரமானது, 
உடை திரை திவலை அரும்பும் 
திரை-கடல்;திவலை-நீர்த்துளி; 
- கரையை அலைகள் மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற, 
தீம் நீர் - கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய, 
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
மெல்லம் புலம்பன் - மெல்லிய கடற்கரையையுடைய தலைவன்;பிரிந்தென- பிரிந்தானாக, 
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே 
பல இதழ் உண் கண் - பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள், 
பாடுஒல்லா - இமை பொருந்துதலைச் செய்யாவாயின;

நாரைகள் உறங்கும் இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள்மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுடைய எம் தலைவன் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என்கண்கள் காம நோயால் வாடுகிறது என் தோழியே 

6.நெய்தல் - தலைவி கூற்று
நள்ளென்று அன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
----- பதுமனார்.

நள்ளென்று அன்றே யாமம் = நள் இரவு யாமம் ஆகிவிட்டது
சொல் அவிந்து - சொற்கள் பேசப்படாமல்
முனிவு இன்று = வெறுப்பு, சினம் இல்லாமல்
நனந்தலை - அகன்ற இடத்தையுடைய ;துஞ்சு = உறங்கு;

இரவு பாதி முடிந்து விட்டது,வார்த்தைகள் பேசப்படாமல் மக்கள் அமைதியாக உள்ளனர்,வஞ்சனை நீங்கி இந்த பரந்து விரிந்த உலகமும் உறங்குகிறது.நான் மட்டும் தான் விழித்துக்கொண்டு இருக்கிறேன


7.வில்லோன் காலன கழலே தொடியோள் 
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் 
யார்கொல் அளியர் தாமே ஆரியர் 
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 
வாகை வெண்ணெற் றொலிக்கும் 
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 
---பெரும்பதுமனார்.

வில்லோன் - வில் வைத்து இருப்பவன்(வில்லையுடையவன்); காலன கழலே - காலில் கழலே;
தொடியோள் - தோடி (வளையல்) அணிந்தவள்; 
மெல்லடி மேலவும் சிலம்பே - மென்மையான பாதங்களில் சிலம்பே 
நல்லோர் யார்கொல் - நல்லோர் யார் என்று கூறுங்கள் 
அளியர் தாமே - அன்பில் முதிர்ந்தவர்களே 
ஆரியர் கயிறாடு - ஆரியர் கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது 
பறையிற் கால்பொரக் கலங்கி - பறை அடிக்கும்போது 
வாகை - வாகை (ஒரு வகை மரம்); 
வெண்ணெற் றொலிக்கும் - வெண்மையான நெற்றுக்கள் எழுப்பும் ஒலி 
வேய்பயில் - மூங்கில் காடுகள்;அழுவம் - கடல் 
முன்னி யோரே - முன்னே செல்பவர்களே...


வில் வைத்து இருப்பவன் காலில் கழல் ,வளையல் அணிந்தவள் மென்மையான பாதங்களில் சிலம்பு அணிந்து வாகைமரங்களில் காய்ந்த நெற்றுக்கள் எழும்பும் ஒலியைப் போல கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது பறை அடித்துஒலி எழுப்பும் இந்த நல்லவர்களாகிய ஆரியர்கள் யார் என்று கூறுங்கள் கடலுக்கு அருகில் உள்ள மூங்கில் காட்டைநோக்கி முன்னே செல்கிறார்களே !


8.கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 

பழன வாளை கதூஉ மூரன் 
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் 
கையும் காலும் தூக்கத் தூக்கும் 
ஆடிப் பாவை போல 
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 
----ஆலங்குடி வங்கனார்.

கழனி - வயல்;;;    ;
மாஅத்து விளைந்துகு - விளைந்த மரங்களிலிருந்து உதிரும்;
தீம்பழம் - இனிய பழம் 
கதூஉ - கவ்வும் 
எம்மிற் பெருமொழி கூறித் - என் வீட்டில் பெரிசாக பேசுவான் 
தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல  - தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும்கண்ணாடி பாவை போலமேவன செய்யுந்தன் - வேண்டியதைச் செய்வான் தன் 

புதல்வன் தாய்க்கே -

வயலோர மரங்களிலிருந்து உதிரும் இனிய பழங்களை வாளை மீன்கள் கவ்வும் ஊரை கொண்டவன் என் வீட்டில்பெரிசாக பேசுவான் தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும் கண்ணாடி பாவை போல தன் பெண்டாட்டிபேச்சை கேட்பான்.