Saturday, November 30, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 6

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…


காதல் தோய்ந்தொடும் இந்த வரிகளில் நானும் கரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்…

அரபு நட்டு பெண்கள் போல் இவள் அக்தரும் திரவியமும் அள்ளித்  தெளித்திருக்கவில்லை. மேலை நாட்டுப் பெண்கள் போல் இவள் இடை இறுக்கும் உடையும், உதட்டுச் சாயுமும் அணிந்திருக்கவில்லை. பழுப்பு நிற மேனியில் பரவியிருக்கும் மஞ்சளிலும் , சீயக்காய் தோய்ந்த கார் கூந்தலிலும், காதுமடல்களை தழுவி வழிந்தோடிய  வியர்வைத்துளிகள் படிந்த வாசத்திலும் மயங்கியிருந்த நாட்களை என்னவென்று சொல்வது!!??
தேகம் தழுவத் தேவையில்லை.. அவள் தாவணி நுணியில் பிரிந்தோடிய நூலின் உரசல் போதும்.. என் இரத்த நாளம் கொப்பளிக்க!!
பதிண்ம பருவத்தின் ஊக்கமோ அல்லது பருவ மங்கையின் தாக்கமோ தெரியவில்லை!!
ஆனாலும் அந்த நினைவுகள் என் இதயத்தின் உட்சுவர்களிலும், எலும்பு மஜ்ஜைகளிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் முல்லைச் சரங்களை முகர்ந்திருந்தாலும்… என்றோ அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த ஒற்றை மல்லிகையின் வாசத்தை தேடி என் சுவாசம் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது.

kavithai.jpg
Image Source : vayalaan.blogspot.com



ஐந்தினை எழுபதில் நான் ரசித்த சில பாடல்கள்....

காமன் தேரில் காதலன் வருவான் கனிய கனியக் காதல் மொழி கதைக்கலாம் என்று காத்திருந்து காத்திருந்து காணமல் கண்ணீர் சொரியும் இந்தக் கன்னியின் கதையைக் கேளுங்கள்..

1.கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்
முலைவற்று விட்டன்று நீர்.


Tears-eyes-16143904-500-368.jpg

பாடலின் விளக்கம்:
இரவு முழுவதும் வானம் சிறிதும் நில்லாது மழை பொழிந்து மலைக்குன்றுகளில் உள்ள அழகிய முல்லைச் செடிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன.  இரவெல்லாம் என் மார்புக் குன்றுகளின் மேல் தொடர்ந்து கண்ணீர் மழை பொழிந்தும் என் நெஞ்சின் வெம்மையும் தணியவில்லை என வாழ்வும் மலரவில்லை எனத் துயரம் ததும்பக் கூறுகிறாள் இந்த முல்லை நிலத் தலைவி.


2. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்
காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோ(டு) அலமரும் கண்.


Stream+Reflection.jpg

பாடலின் விளக்கம்:
செம்மையாகிய கதிர்களையே கொண்ட கதிரவன் தனது சீற்றமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்ட மாலைப் பொழுதிலே  பசுமையான கொடிகளையுடைய முல்லைச் செடிகள் பூத்து மணத்தை வீசுகின்றன. வண்டுகள் அந்தப் பூக்களை நாடிச் சென்று ரீங்காரமிடுகின்றன. இப்படி கார்கலத்துடன் சுழன்று தோன்றும் வானத்தைக் காண்கிறபோதேல்லாம் என் கண்களில் நீர் கோர்க்கிறது.

வேனிற்கால வெப்பம் தீர்ந்துபோய் கார்காலத்தில் நீர் தூவுகின்ற முகில்களைக் கண்டபோதும் என் காதல் வேட்கை தணிக்க  காதலன் அருகில் இல்லையே என் புலம்புகிறாள்.

3.இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்
வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை
அலையும் அலைபோயிற்(று) இன்று.


பாடலின் விளக்கம்:
(தண்+குளவி - குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள்; பொதும்பில் - சோலையில்;)
இலைகள் அடர்ந்த குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் சோலைகள் எங்கும் படர்ந்துள்ளன. அந்தச் சோலையில் கொத்துக்களாகவுள்ள காந்தள் பூக்களிடம் ஆரவாரத்துடன் வண்டுகள் சென்ற தேனை நுகர்கின்ற நாட்டினை உடைய தலைமகன் நம் வீட்டிற்க்கு வந்தான். அவன் வரவினால் நம் அன்னையின் வருத்தமானது நீங்கியது.

பூக்களிலே மல்லிகையின் வாசம் இன்ப வேட்கையை கிளர்ந்தளச் செய்யும். அதனால் தான் "மல்லிகை என் மன்னன் விரும்பும் பொன்னான மலரல்லவோ " என்று பாடினார்களோ என்னவோ ?? இந்தப் பாடலில் "அன்னை அலையும் அலைபோயிற்று"  என்று கூறப்பட்ட வரிகளால் அன்றும் அன்னையர்கள் தன் மகளிரின் திருமணம் குறித்து கவலைகளிலே இருந்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

Tuesday, November 19, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 5

தூரக்கிழக்கு கரை ஓரந்தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ
!! எம்பாட்ட கூறதோ  !!   
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! 

ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில்  பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்...

கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன்.

நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன்   வைத்திருக்கவும் புது புதிதாக  எதையாவது படைப்பதற்கும் உந்துதலாக இருக்கிறது. மனிதனின் இயக்கத்திற்கும், ஏற்றத்திருக்கும் இந்தக் கற்பனைதான் முதற் படிக்கல்.  நம்முடைய  களிப்பு, சலிப்பு, விழிப்பு எல்லாமே இந்தக் கற்பனையூடாகத்தான் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் படுகிறது . ஏன் இந்தப் பதிவை இடும்போது கூட நாளைக்கு யாரவது இதைப் படித்து மகிழக் கூடும் என்ற கற்பனையிலேயே எழுதுகிறேன்.

அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் இன்று எல்லாமே கூப்பிடு தூரம்தான். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருவரது தொடர்பு நிலை என்பது வெறும் கற்பனை தான். ஆதலால் தான் நெஞ்சுவிடு தூது, முகில்விடு தூது,  கிள்ளைவிடு தூது, விறலிவிடுதூது என எல்லாவற்றையும் தூதனுப்பி காத்திருப்பர்...

இவற்றிக்கு ஒப்பான சங்க இலக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூலகளில் ஒன்றான ஐந்திணை எழுபதிலிருந்து சில கவிநயமிக்க பாடல்களை காணலாம்.

ஆலி விருப்புற் றகவிப் புறவெல்லாம்
பீலி பரப்பி மயிலாலச் - சூலி
விரிகுவது போலுமிக் காரதிர வாவி
யுருகுவது போலு மெனக்கு


(ஆலி - மழைத்துளி;பீலி - மயில் தோகை;சூலி - கருக்கொண்டு)



மயிலினங்கள் மழைத்துளிகளை காதலுடன் கூவியழைத்துக் கொண்டு முல்லை நிலமாகிய எல்லாப் பாகங்களிலும் தன தோகைகளை விரித்து ஆடுகிறது. நீர் சுமந்த கார் வானம் முகிலைக் கிழித்து மழையைப் பொழிய காத்திருக்கிறது. அதாவது மேகம் கருக்கொண்டு, தன் குழந்தையாகிய மழையைப் பிரசவிக்க இடி இடித்து முழங்குகிறது. இந்த ஓசை காதலனை விட்டு தனித்திருக்கும் என்னை உலையிலிட்டு உருக்குவது போல உயிரை வருத்துகிறது.


2. இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப விடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.
 


அரிய கலைமான்களின் கூட்டம் மகிழ்ச்சி பொங்க காட்டிடத்தே சுற்றித் திரிகின்றன ! கொல்லைகளிலுள்ள கொடிகள் சுருண்டு கிடக்கும் முல்லையும் துளிர்க்க தொடங்கியிருக்கிறது. சிறு மாலையானது நானும் பிரிந்து போன என் காதலரும் வருந்துமாறு இடியும் முகிலும் இணைந்து வருகிறது. மாலையொன்று போதாதா என்னை வாட்ட ??!!   இடியும் முகிலும் இணைந்து வருவதேன் ?? என்னை முற்றிலும் ஒழித்து விடுவதற்கோ  என் தோழி !!

Friday, October 18, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 4

  
அதிகமாக ஊடல், கூடல் பற்றியே எழுதியாச்சு. இன்றைக்கு ஒரு மாறுதலாக வீரத்தை பற்றி எழுதலாம். 

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்கச் சொல்வோம் உலகுக்கு !!

இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!

இரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித் தாமரையை பறிப்போம் !!

இருவர் படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள் நரம்புகளை முறுக்கேரச் செய்யும்.

பழங்காலப் போர்க்களங்களில் போர் தொடங்குவதற்கு முன் பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு, கரடிகை, திண்டி போன்ற கருவிகளை ஒன்று சேர்த்து இசைக்கச் செய்வர். இந்த இசையைக் கேட்டு வீரர்களின் நரம்பு முறுக்கேறி, போர் வெறி பிறக்குமாம். மனிதர்களுக்கே இப்படியெனில் யானைகளுக்கு கேட்கவா வேண்டும்

இந்த முத்தொள்ளயிரப் பாடலி கொஞ்சம் கவனியுங்கள். 

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது
செங்கண் மாக்கோதை சினவெம் களியானை
திங்கள்மேல் நீட்டும் தன் கை

கொடிய போர்க்களம். வீரம் கொண்ட மன்னர்களின் விரிந்த வெண்தாமரை போன்ற வெண்கொற்றக் குடையை சேரனுடைய பட்டத்து யானை பிடுங்கி எறிந்து நொறுங்கச் செய்கிறது. சினம் சினம்!! பிடித்து எறிந்தும் அதன் கோபம் ஆறவில்லை. சினமிக்க அந்த யானை வானில் தெரியும் வெண் நிலவை பகை மன்னனின் வெண்கொற்றக் குடை   என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய தன துதிக்கையை நீட்டுகிறதாம் !! என்ன கற்பனை !!



Monday, October 14, 2013

உணர்ச்சிப்போலி






கோபம்கொண்டு குமைந்தபோதும்
துரோகம்கண்டு துவண்டபோதும்

வறுமைகொண்டு வாடியபோதும்
வெறுமைகொண்டு ஓடியபோதும்

நறவுண்டு களித்தபோதும்
உறவுகண்டு புளித்தபோதும்

வாடைதழுவி உறைந்தபோதும்
பேடைதழுவி கறைந்தபோதும்

புலவிநீண்டு தீய்ந்தபோதும்
கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில்

இருப்பை உணர்த்திய நிழலே
மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !!

இரத்தம் கெட்டு சத்தம் கெட்டு
எயிறு கெட்டு வயிறு கெட்டு
வாசம் கெட்டு சுவாசம் கெட்டு
இதயம் கெட்டு இதழ் கெட்டு
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
உருவம் கெட்டு பருவம் கெட்டு

அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த
உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?

Sunday, October 13, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 3


நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது  உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது

விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி,
இடை தழுவி
இமை மூடி
இதழ் ஒற்றி
இன்பம் துய்க்காமல்
இன்னும் ஏன் ஊடலோ?

மஞ்சத்தில் துஞ்ச ...
நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.
கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

அந்த முத்தொள்ளாயிரப்  பாடல் இதுதான்

யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாற



 விளக்கம்:

நான் பொய்க்கோபம் கொண்டு ஊடினால் அவன் என் பொய்க்கோபம் தீர்க்க தக்க சமாதனம் கூறி ஊடலைப் போக்க முன்வருவான். ஆனால் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊடலைத் தொடருவேன். இதனைக் கண்ட அவன் பிறகு என்னோடு ஊடல் கொள்ளுவான். நான் அவனைத் தேற்ற முற்படுவேன். ஆனால் அவன் அதற்க்குச் செவி சாய்க்க மாட்டான். இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !!

******************************************************************
 



வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

அருமையான இந்தப் பாடல் வரிகள் சொல்லும் செய்திகள் ஆயிரம்.. ..

வேரும் இல்லாமல் விதையும் இல்லாமல் விண் தூவுகின்ற மழையும் இல்லாமல் பூந்தோட்டம் பூக்குமா !!??
ஆம். காதல் என்ற பூந்தோட்டம் பூக்கும். அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாமே சாத்தியம்... மண்ணும் மாமலையும் விண்ணும் பொன்னும் பொருளும் எதுவுமே இவர்களுக்கு பொருட்டே இல்லை. ஈதல் இரத்தல் இந்த இரண்டிலும் இன்பம் இங்கு மட்டுமே.

அன்னையும் கோல்கொண்டு அழைக்கும் அயலாரும்
என்னையும் அழியும் சொல் சொல்லுவார் - உள்நிலையை
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண் தேர் வளவன் திறத்து

தாயாரும் என்னை தடி கொண்டு அடிக்கிறாள். ஊராரும்  என் உள்ளம் வருந்த பழி கூறுகிறார்கள். ஆனால் அவனை நான் பார்த்தது கூட இல்லை. எல்லாம் எதனால்?? அவன் பின்னே என் மனம் சென்றதனால் !!  தன நிலைமையை ஒரு அருமையான உவமையால் விளக்குகிறாள்.

தென்னை மரத்தில் தேங்காய் குரும்பையாக வளர்கின்ற போதே தேரை நோய் பற்றிக் கொள்ளும்.அதனால் தேங்காய் வளர்ச்சி குன்றும். இங்கு தேரை தேங்காயை உண்பதில்லை. ஆனால் உலகத்தார் தேரை உண்ட தேங்காய் என்று ஒதுக்கி தள்ளுவர். பாவம் தேரை தேங்காய் திண்ணாமலேயே தின்றதாக பழி ஏற்கிறது. என் நிலையும் அப்படித்தான் .

திரும்பவும் அந்தப்  பாடல் வரிகளை ஒரு முறை வாசியுங்கள் ..

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

Thursday, October 3, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 2

வாடைக் காற்றே!! காதலர்களை வாட்டுவதல்தான் உனக்கு வாடை என்ற பெயரோ !!??

மாலை மயங்கி மன்மதன் தன் மலரம்புகளை எய்யும் வாடை வீசும் மார்கழி மாதம்.  பால்நிலவு தன் பட்டுப் பாதங்களை பூமியில் மெல்ல பரப்பும் காலம் காட்டில் வாழும் காடைகளும் தன் பேடைகளுடன் சுகித்திருக்க இவளோ தனிமையில் !! காதல் நினைவுகள் கனலாக கொதிக்க குளிர் வாடையும் கொடும் அனலைச்  சொரிகிறது!!

காதலன் தழுவிய எண்ணங்களை தழுவுவதால் அவள் காதல் வேட்கை கட்டுக்கடங்காமல் பெருகுகிறது. மோகம் என்னும் தாகம் பருகாமல் அடங்காது.. என்ன செய்வது?? கட்டுக் காவலும் அதிகம்...அதனால் வந்து விடாதே என்று காதலனை எச்சரிக்கிறாள்!!  

தமிழில் வேட்கை என்ற வரத்தை ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. ஒன்றின் மேல் கொண்ட ஆசை(காதல், விடுதலை...எதுவானாலும் சரி) அதை அடையும் வரை அதன் மேல் உள்ள விருப்பு குன்றிமணி அளவும் கூட குறையாமல் அதே வேகத்துடன் இருப்பது.

பாடல் இதுதான்

நாம நெடுவேல் நலங்கிள்ளி சேணாட்டுத்
தாமரையும் நீலமும் தைவந்து - யாமத்து
வண்டொன்று வந்தது வாரால் பனிவாடாய்
பண்டுஅன்று பட்டினம் காப்பு




குளிர்ந்த சோழ வளநாட்டில் உள்ள தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தழுவி வருடி மொய்த்து தேன் உண்ண வண்டு ஒன்று வந்தது.  வண்டு ஒன்று வந்ததே என்று வாடையே நீ இப்போது வந்து விடாதே !! அப்போது காவல் இல்லை இப்போது எங்கும் கட்டுக் காவல் என்று தலைவி கூறுகிறாள்.இதன் உள் அர்த்தம் என்னவெனில், கட்டுக் காவல் மிகுதியாகி விட்டது தலைவனே இப்போது வந்து விடாதே !!

Tuesday, September 17, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம்...

உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே....

சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. 

இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி  எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். 

எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம்.

சங்க இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்களுடன் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம். பரவசத்தை பகிர்கிறேன்... தாகமுள்ளவர்கள் பருகலாம்.....

முதலில் புறத்திரட்டு நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தில் இருந்து சில பாக்கள்.

1. அரக்காம்பல் வாய்அவிழ

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவெரீப் - புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ! 



நீல வான் பரப்பில் நீந்திச் சென்ற இந்தப் நீர்ப் பறவைகளின் பரபரப்பிற்கு செவ்வாம்பல் மலர்கள் செய்த சதிதான் காரணமோ!! மென்மை உணர்த்தும் மலர்கள் வன்மையும் செய்யுமோ !!?? தனல் தணிக்கும் புனல் மீது அனலை அள்ளித் தெளித்தது யார் ?

கவிஞன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவன் கவித்திறன் விஞ்சி நிற்கிறது..

பாடல் விளக்கம்:
சேறும் நீரும் நிறைந்த வயல்வெளிகளில் அரக்கு நிறத்து ஆம்பல் மலர்கள் மலர்ந்து பரந்திருக்கிறது. நீரின் மேல் மிதந்தது போல் நெருக்கமாக  காணப்படும்  இந்த ஆம்பல் மலர்கள் வயல்களில் நெருப்பு பற்றிக் கொண்டதுபோல் தோற்றமளிக்கிறது. இந்தக் காட்சிப் பிழையை உண்மையென நம்பிய வயலில் இருக்கும் நீர்ப் பறவைகள் தன கைகளாகிய சிறகுகளால் தம் குஞ்சுகளை தூக்கிக் கொண்டு பறக்கும். 


2. கடும்பனித் திங்கள்
 
கடும்பனித் திங்கள்தன் கை போர்வையாக
நெடுங்கடை நின்றது கொல்தோழி



மாலை முயக்கம் கொண்ட தலைவியின் தவிப்பை தோழி அறிவாளோ? அல்லது  துரும்பாகிப் போன கம்பிகளுக்குப் பின்னே உள்ளே தலைவியின் கண்ணீர் கதையை தலைவாசல் தான் அறியுமோ!!  

பாடல் விளக்கம்:
கடும் பனி பொழியும் மார்கழி மாதம், ஊனை உறுத்தும் குளிரை பொருட்படுத்தாது  இரு கைகளையும் போர்வை போத்திக் கொண்டதுபோல் மார்போடு அணைத்துக் கொண்டு, எனது மனது தலைவாசல் போய் நிற்கிறதே தோழி!! இதை என்னவென்று சொல்வேன்!

Wednesday, August 21, 2013

வேரில்லா வாழ்வே !!

இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி...



வேதியன் மகவே வேய்தோள் உருவே
வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே
வேட்டம் புகவே வேகுதடி நினைவே
வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே


வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!!
வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!!
வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !!
உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது.
அந்த வேட்கையால் உடல் வேகிறது.
வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை.     இதற்கு விடிவே கிடையாதா!!

Tuesday, August 13, 2013

கங்கை கொண்ட சோழன்

சமீபத்தில் பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் இரண்டு பாகங்கள் படித்தேன். சரித்திர நாவல் என்று எது கிடைத்தாலும் நான் விடுவதில்லை. அப்படியே இதுவும். 

ராஜேந்திரனின் கங்கை படையெடுப்பை மையமாக கொண்டு நாவல் நகர்கிறது. முதல் இரண்டு பாகமும் மேலை சாளுக்கியத்தின் மீதான படையெடுப்பை ஒட்டி நடந்த நிகழ்வை விவரிக்கிறது. பெண்களை மானபங்கபடுத்த அனுமதிப்பது, எதிரி நாட்டு ஊர்களை கொளுத்துவது, கொள்ளையடிப்பது என போர்க்களங்களில் நடக்கும் எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார்., அப்போது இருந்த அந்தணர்களின் திமிர்த்தனத்தை, வர்ண பேதங்களை நன்றாகவே எழுதி உள்ளார்.

கல்கி, சாண்டில்யன், விக்கிரமன் இவர்களுடன் நோக்கும்போது பாலகுமாரனின் நாவல்கள் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவே. மனதை மயக்கும் காதல் கட்சிகள், சிலிர்க்க வைக்கும் போர் வியூகங்கள் இல்லாமல் கொஞ்சம் மெதுவாகவே கதை நகருகிறது. மூன்றாம் பகுதி வந்தவுடன் வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்!

நாவலில் அச்சிடப்பட்ட சில படங்கள்...

ராஜேந்திரனும் அவனது ஐந்து மனைவிகளும்


கோவணம்தான் ஆடையோ!! ராஜேந்திரனது படைத் தளபதிகள்

பின்பக்கமும் மார்பும் திறந்த நிலையில் ஆடை இல்லாத ஓர் தேவரடியாள்