Sunday, October 13, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 3


நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது  உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது

விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி,
இடை தழுவி
இமை மூடி
இதழ் ஒற்றி
இன்பம் துய்க்காமல்
இன்னும் ஏன் ஊடலோ?

மஞ்சத்தில் துஞ்ச ...
நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.
கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

அந்த முத்தொள்ளாயிரப்  பாடல் இதுதான்

யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாற



 விளக்கம்:

நான் பொய்க்கோபம் கொண்டு ஊடினால் அவன் என் பொய்க்கோபம் தீர்க்க தக்க சமாதனம் கூறி ஊடலைப் போக்க முன்வருவான். ஆனால் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊடலைத் தொடருவேன். இதனைக் கண்ட அவன் பிறகு என்னோடு ஊடல் கொள்ளுவான். நான் அவனைத் தேற்ற முற்படுவேன். ஆனால் அவன் அதற்க்குச் செவி சாய்க்க மாட்டான். இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !!

******************************************************************
 



வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

அருமையான இந்தப் பாடல் வரிகள் சொல்லும் செய்திகள் ஆயிரம்.. ..

வேரும் இல்லாமல் விதையும் இல்லாமல் விண் தூவுகின்ற மழையும் இல்லாமல் பூந்தோட்டம் பூக்குமா !!??
ஆம். காதல் என்ற பூந்தோட்டம் பூக்கும். அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாமே சாத்தியம்... மண்ணும் மாமலையும் விண்ணும் பொன்னும் பொருளும் எதுவுமே இவர்களுக்கு பொருட்டே இல்லை. ஈதல் இரத்தல் இந்த இரண்டிலும் இன்பம் இங்கு மட்டுமே.

அன்னையும் கோல்கொண்டு அழைக்கும் அயலாரும்
என்னையும் அழியும் சொல் சொல்லுவார் - உள்நிலையை
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண் தேர் வளவன் திறத்து

தாயாரும் என்னை தடி கொண்டு அடிக்கிறாள். ஊராரும்  என் உள்ளம் வருந்த பழி கூறுகிறார்கள். ஆனால் அவனை நான் பார்த்தது கூட இல்லை. எல்லாம் எதனால்?? அவன் பின்னே என் மனம் சென்றதனால் !!  தன நிலைமையை ஒரு அருமையான உவமையால் விளக்குகிறாள்.

தென்னை மரத்தில் தேங்காய் குரும்பையாக வளர்கின்ற போதே தேரை நோய் பற்றிக் கொள்ளும்.அதனால் தேங்காய் வளர்ச்சி குன்றும். இங்கு தேரை தேங்காயை உண்பதில்லை. ஆனால் உலகத்தார் தேரை உண்ட தேங்காய் என்று ஒதுக்கி தள்ளுவர். பாவம் தேரை தேங்காய் திண்ணாமலேயே தின்றதாக பழி ஏற்கிறது. என் நிலையும் அப்படித்தான் .

திரும்பவும் அந்தப்  பாடல் வரிகளை ஒரு முறை வாசியுங்கள் ..

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

No comments: