Friday, November 26, 2010

கடை திறமினோ

 "இத்துயில் மெய்த்துயிலே என்றுகுறித்து இளைஞோர்
இது புலவிக்கு மருந்தென மனம்வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிறவா மடவீர் கடைதிற மின்திறன்"

துயில் - ‍தூக்கம்
கடைகள் திறமினோ - கதவுகளைத் திறவுங்கள்
புலவி - ஊடல் - காதலில் செய்யும் பொய்க்கோபம்
கூர்நயனக் - பொய் உறக்கம் கொள்கின்ற கண்

தலைவன் கலிங்கத்துப் போரில் கலந்து திரும்பி வீடு வர காலம் தாழ்த்ததினால் தலைவி கோபம் கொண்டு அவனோடு ஊடல் கொள்கிறாள். தலைவன் அவள் ஊடல் நீக்க வழி தெரியாமல் தவித்து மதி மயங்கும் மாலை நேரத்தில் வீடு செல்கிறான். அப்பொழுது தலைவி தூங்கி கொண்டிருப்பது போல் நடிக்கிறாள். தலைவி துயில் கொள்கிறாள் அவள் ஊடல் நீக்க இதுதான் சரியான தருணம் என நினைத்து அவள் மெல்லிய பாதங்களை வலி நீங்குமாறு பற்றுகிறான்.காலைப் பிடித்தாயிற்று இனி என்ன கூடல் தானே? தலைவியும் மனமிரங்கி ஊடல் நீங்கி தலைவனுடன் கூடல் கொண்டால் என்பது பொருள்.

இந்த பாட்டில் அப்படி என்ன வில்லங்கம் இருக்குனு கேக்குறீங்க?
//இது புலவிக்கு மருந்தென மனம் வைத்தடியிற் கைத்தலம் வைத்தலுமே//
அடியில் கைத்தலம் வைத்தலுமே - இதற்க்கு வேறு அர்த்தமும் உண்டு

 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
"சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்
பனிமொழி யவர்கடை திறமினோ"

சுரிகுழல் - நெளிந்த கூந்தல்
பரிபுர - சிலம்புகள் அணிந்த நிர்த்த பதம் வைத்து நடனஞ் செய்கின்ற
பனிமொழி - குளிர்ந்த மொழி - இனிய மொழி

நீண்ட நெடிய நெளிந்த கூந்தல் அசைவுற, தூக்கம் கலைந்து எழும் அழகிய மயில் போல சிலம்புகள் அணிந்த மெல்லிய பாதத்தில் சின்ன அடி வைத்து நடனஞ் செய்கின்ற போது எழும் ஒலியைப் போல குரலைக் கொண்ட இனிய மொழியை பேசுபவளே கதவை திறவாயா?? கலிங்கத்துப் பரணி புகழ் கேட்க...

கூந்தல் அசைவதும்,சிலம்பொலி எழுவதும்,இனிய மொழி பேசுவதும் கலவிப் போர் புரியுங்கால் மகளிரின் இயல்பாக கூறப்படுகிறது.
 
-------------------------------------------------------------------------------------------------------------------


"சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ் அலைசெய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ"

ஓர் அழகிய காலை நேரம் வஞ்சி ஒருத்தி மஞ்சத்திலிருந்து துயில் எழுகிறாள். அவள் தூங்கும்பொழுது சுருண்டு நெளிந்த கூந்தல் அவிழ்ந்து, வெண்ணிற உடலோடு கூடிய ஆடை கலைந்து கிடக்கிறது. எழுந்தவள் ஒரு கையால் அவிழ்ந்து நின்ற கூந்தலைத் தாங்கினாள், மற்றொரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையை பற்றினாள். அப்படியே இரண்டடி எடுத்து வைக்கிறாள்.. அக்காலை நேரத்திலும் அவள் முகம் நிலவென் மலர்ந்து நிற்கிறது...உறக்கத்திலும் கூட அவள் முகமலர்ச்சி....

இவைதான் சொற்களின் ஓவியமோ!!!