Saturday, November 5, 2011

தொய்யிற் கோலம்



‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது சங்க காலத்தில் இருந்ததுண்டு. இது ஒரு நுண்ணிய கலைத்திறன். இதற்கு தொய்யிற் கோலம் என்று பெயர்.

சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

தொய்யில் பற்றி சங்க இலக்கியங்கள் முழுவதும் கொட்டி கிடக்கிறது அவற்றுள் சில 

(கலித்தொகை)
* விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும் 
* மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை 
   - மகிழ்ச்சி தருகின்ற இனிய மொழிபேசும் என் தோழியின் தொய்யில் சூழ்ந்த இள மார்பகங்கள்

தடமெங்கும் புனல்குடையும் தையலார் தொய்யில்நிறம் (திருத்தொண்டர் புராணம்)
- பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம்

-(கம்ப இராமாயணம்) 
"செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்புற
மெய் அராகம் அழிய , துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே"

செய்ய வாய் வெளுப்ப - சிவந்த வாய் நிறம் வெளுப்புற்று வெண்மை நிறம் அடையுமாறு
கண் சிவப்புற - கண்கள் சிவப்பு நிறம் பெற
மெய் அராகம் அழிய - உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிந்து போக 
துகில் நெக - ஆடை நெகிழ
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் - தொய்யில் எழுதிய பெரிய மார்பகங்களை உடைய மங்கையர் நீரில் முழ்குவதால் 

காதலரைக் சேர்கையில் மகளிர் வாய் வெளுத்து வெண்மை நிறம் அடைதலும் ,  விழி சிவத்தலும்.,  உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிதலும்,   ஆடை நெகிழ்தலும் இயல்பாதலின் இச்செய்கைகள் பொய்கையிலும் நிகழ்தலின, பொய்கையும் காதலர் போன்றாயிற்று.