Wednesday, April 25, 2012

ஆதித்த கரிகாலன் கொலையும் அதன் மர்மங்களும் - II

ஒவ்வொரு முறையும் ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணங்களை பற்றி ஆராயும்பொழுது  புதுப் புது உண்மைகள் தெரிய வருகிறது. அது நான் முன்பு கொண்ட எண்ணங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. வல்லவன் எழுதியதே வரலாறு.. அதையே நாமும் நம்புகிறோம். அதையே நம் பிள்ளைகளுக்கும் சொல்கிறோம். ஆனால் உண்மை வரலாறு ஆதிக்க சக்தியினாரல் மறைத்தும் / திரித்தும் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய தேடலும், அறிந்தவற்றை உரக்கச் சொல்வதுமே எமது எண்ணம். இதுவரைக்கும் நான் தேடிய தேடல்களின் முடிவில் இருந்து நான் அறிந்து கொண்டது "கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் வரலாற்று உண்மைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை". வரலாற்று உண்மைகளை அறிய வேண்டுமெனில் அக்கற்பனையில் இருந்து மீள வேண்டும்.          

சோழ வரலாற்றில் ஆதித்த கரிகாலன் மட்டும் மர்மான முறையில் கொல்லப்படவில்லை. அவன் தாத்தாவாகிய அரிஞ்சய சோழனும், அப்பனுமாகிய சுந்தர சோழனும், மைத்துனனுமாகிய வந்தியத் தேவனும்  மர்மமான முறையிலே கொல்லப்பட்டுள்ளனர். இதன் கொலைக்கான காரணங்களைப் பார்க்குமுன் அப்போது நிலவிய சமூக சூழலை பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் சைவ மதத்திற்கும் வைணவ  மதத்திற்கும் இடையே பல மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இக்கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன. சோழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் (பாண்டியர்களும் கூட). இதன் காரணமாக வைணவ பிராமணர்கள் தொடர்ந்து சோழப் பேரரசை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். காட்டுமன்னார்குடிக் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் ஆதித்தன் கொலைக்கு சதுர்வேதி  மங்கலத்துப் பிராமணர்கள்தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தினரை இராசராசன் ஊரை விட்டு துரத்தியதாக கூறுகிறது.  இந்தக் கொலைக்கு காந்தளூர்ச் சாலை நம்பூதிரி பிராமணர்கள் தூண்டுதலே காரணம் என்று கருதி இராசராசன் காந்தளூர்ச் சாலை மீது போர் தொடுத்து சிதைத்தான் என்ற கூற்றும் உண்டு.இது எதைப் பற்றியுமே கல்கி சொல்லவில்லை(சாதிப் பாசமோ??). எது எப்படியோ இக்கொலையில் உத்தம சோழனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது மட்டம் தெளிவாகிறது.

கீழ்வரும் கேள்விகளுக்கு நான் விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் .....

1) ஆதித்த கரிகாலனும் குந்தவையும் இரட்டை பிறவிகள் என்றும்,  குந்தவை பிறக்கும்போது ஒரு கால் ஊனமாக இருந்தது என்ற குறிப்புகள் பாரசீக மொழியில் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார் என்பவரைப் பற்றி குறிப்பிடும்போது உள்ளதாக கூறுகின்றனர். 

2) ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திரனும் இலங்கைக்கு படை எடுத்துச் சென்று தோல்வியுற்றதாகவும், ஆதித்த கரிகாலன் சுந்தர சோழன் இருக்கும்பொழுதே காஞ்சியை  தனியாக ஆட்சி செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

3) உத்தம சோழன் கரிகாலனை சதியின் மூலம் கொல்வதற்கு உடந்தையாக இருந்து,  இறந்தவுடன் கலவரத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி, சுந்தர சோழனை காஞ்சியில் சிறை வைத்து, ஆதித்த கரிகாலன் இறந்த கொஞ்ச நாட்களில் அவனும் கொல்லப்பட்டான் என்று கூறப்படுகிறது.

4) "முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்                    
  தலைமகன் பிரியாத் தையல்" 
  என்ற கல்வெட்டு குறிப்புகளின் படி வானமா தேவி பால் மனம் மாறாத பெற்ற குழந்தையையும் பிரிந்து கனவனுடன் தீயில் உடன்கட்டை ஏறினால் என்று குறிக்கிறது. அந்தப் பாலகன் ராஜா ராஜா சோழன் தானா? சிறு குழந்தையை பிரிந்து அவளாக உடன் கட்டை ஏறினாளா அல்லது ஏற்றப்பட்டளா?? 

5) குந்தவை வந்திய தேவனை காதல் மனம் கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.அது நிச்சயிக்கப்பட்ட திருமணமே. திருமணம் நடந்திருந்தாலும் அவர்களுக்கு குழந்தை ஏதும் இருந்ததாக் குறிப்புகள் இல்லை காரணம் வேங்கி மன்னான வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின் நடந்த ஒரு கலவரத்தில் திருநெடுங்களத்தில் கொல்லப்பட்டனா?

6) சுந்தர சோழன் மறைவிற்குப் பின் ராஜ ராஜனும் ,குந்தவையும் யார் பாதுகாப்பின் கீழ் எங்கு வாழ்ந்தனர்?

7) உத்தம சோழனிடமிருந்து எவ்வாறு ராஜ ராஜனுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்தது? உத்தம சோழன் கொல்லப்பட்டனா? கோவில் பொறுப்புகளை நிர்வகித்த உத்தம சோழன் மகன் ஊழல் குற்றசாட்டு காரணமாக கொல்லப்பட்டான் என்ற கூற்று உண்மையா?