Tuesday, January 24, 2012

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பாண்டியன் எனவும் கொள்ளலாம். "வழுதி" என்பது பாண்டியர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று.

கானப் பேரெயில் - இந்த பெயரைக் கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் பல வரலாற்று நினைவுகள் என்னை மீட்டெழுப்புகிறது. அகநானூறு, புறநானூறு, திருக்குறள் எழுதிய சங்க காலத்திலும், சோழர் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்த பொழுதும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் பொழுதும் கானப் பேரெயிலை கடக்காமல் சென்றதில்லை.
கானப் பேரெயில் = கானப் + பேர் + எயில் = கானகம் + பெரிய + மதில்;
கானப் பேரெயில் = காட்டின் நடுவே உள்ள மிகப் பெரிய அரண்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பித்து பழனி, திண்டுக்கல், அழகர்மலை, பிரான்மலை, காரைக்குடி, சாக்கோட்டை, காளையார்கோயில், கீழாநல்லிக்கோட்டை வரைக்கும் பல நூறு மைல்களுக்கு ஒரு அடர்ந்த கானகம் இருந்தது. "கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளை கொண்ட காட்டரன்" என்று புறநானுற்று பாடல் ஒன்று வர்ணிக்கிறது. அந்த காட்டு பிரதேசத்திற்கு "கானாடு" என்று பெயர். அந்த காட்டின் நடுவே இருந்த உயரமான கோட்டைக்கு கானப் பேரெயில் என்று பெயர். கானப் பேரெயில் இப்பொழுது காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கானப் பேரெயில் பற்றியும்  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பற்றியும் ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் புறநானூற்றில் பின்வருமாறு ஒரு பாடலைப் பாடியுள்ளார்

"நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க"

நிலவரை இறந்த குண்டுகண் அகழி- நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும்;
வான்தோய் வன்ன புரிசை - வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த அரண்;
மீன்பூத் தன்ன உருவ ஞாயில் - வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும்;
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை - கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும்
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் - பகைவர் நெருங்க முடியாத அரண்களால் சூழப்பெற்ற கானப்பேர் எயில்;

மேற்கண்ட பாடல் உக்கிரப் பெருவழுதி கானப்பேர் எயிலை ஆண்ட வேங்கை மார்பன் என்ற அரசனை வென்று அக்கோட்டையை கைப்பற்றியதை பற்றி கூறியதாகும்.


ராஜராஜ சோழன் இலங்கைக்கு படை எடுத்துச் சென்றபோது இக்காடுகளில் வழியாகத்தான் படைவீரர்களை அழைத்துச் சென்றான். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலிருந்து படையெடுத்த லாங்காபுரத் தண்டநாயகனின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட கோட்டையும் இதுதான். வீர பாண்டிய கட்டபொம்மன் ஒளிந்து கொண்டது இக்காடுகளில் தான், மருது பாண்டியர்கள் மறைந்திருந்து ஆங்கிலேயர்களை தாக்கியதும் இக்காடுகளில் தான். இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த காடுகளை, மருது பாண்டியர்களை போரில் வென்றவுடன் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான். காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது.

சரி விடயத்திற்கு வருவோம். உக்கிரப் பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன். போர்க்களத்தில் மிகத் துரிதமாகவும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் கொண்டதால் இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டது.  தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதக்கூடியதாக மூவேந்தர்கள் நட்பு உக்கிரப் பெருவழுதி காலத்தில் அமைந்தது. இந்த கால கட்டத்தில் மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. உக்கிரப் பெருவழுதி காலத்து சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி, சேரமான் மாரி வெண்கோ ஆகிய மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை சங்க காலத்து ஔவயார் புறநானூற்றில் பின்வருமாறு எழுதிய பாடல் மூலம் அறியலாம்.

"நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்"


உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரை தலைமைப் புலவராக அமர்த்தி தொகுக்கும் பணியை முடித்தான். உலகப் பொதுமறை திருக்குறள் இவனது அரசவையில் தான் அரங்கேற்றப்பட்டது எனபது செவி வழிச் செய்தியாகும். உக்கிரப் பெருவழுதி சிறந்த புலவனும் கூட.  நற்றினையில் "எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் " எனத் தொடங்கும் பாடலையும் அகநானூற்றில் "கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற" என்ற பாடலையும் பாடி உள்ளான் . 

 திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.

 உக்கிரப் பெருவழுதி பற்றி இறையனார் அகப்பொருள் உரையில்
"சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த
முடத்திருமாறன் முதலாக
உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப" 

கடல் கொள்ளப்பட்ட கடைச் சங்க காலத்தில் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்கள் புரவலர்களாக இருந்தனர். கடைச்சங்கத்தில் இவனே கடைசி மன்னனாக கருதப்படுகிறது.