Saturday, November 8, 2008

ஈழம் தமிழனின் பிறப்புரிமை

பல தமிழர்கள் இலங்கையை பற்றி தவறான புரிதலையே கொண்டுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகள் யார் ? தமிழ் ஈழ போராட்டத்தின் காரணம் என்ன ? இவற்றைப் பற்றி தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் பூர்வீக குடிகள்
இலங்கை தமிழர்கள் பொதுவாக இரண்டு பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், அப்பகுதிகளைத் பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வருவதன் காரணமாக அவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழி தமிழர் எனப்படுவர். இன்னொரு பிரிவினர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட வேலையாட்களின் பரம்பரையினராவர். இவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இலங்கையின் வரலாற்று நூலாகக் கருத்தப்படும் சிங்களர்களால் எழுதப்பட்ட நூல் மகாவம்சம்.இந்நூலில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட சிங்கபாகு என்ற மன்னனின் மகனும் அந்நாட்டு இலவரசனனுமாகிய விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி அரசு அமைத்து ஆண்டான் எனவும் அப்பொழுது இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியும் எழுதப்பட்டுள்ளது.இங்கு நாகர், இயக்கர் என்று குறிப்பிடப்பட்டது தமிழர்களைத்தான்.விஜயன் வந்தபொழுது இலங்கையை ஆண்ட அந்நாள் தமிழ் அரசி குவேனி என்பாள்.ஆக சிங்களர்களின் கூற்றுபடியே தமிழ்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள். சிங்களர்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு குடியேறியவர்கள் . (இலங்கை வம்சாவழி தமிழர்களும் இலங்கையின் பூர்வீக குடிகள் என்று இலங்கை அரசாங்கத்தாலும் இந்திய அரசாங்கத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.)

தமிழ் ஈழப் போராட்டம்
ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களால் உரிமைகள் மறுக்கப்பட்டு, பாரம்பரிய மண் பறிக்கப்பட்டு, இனக்கலவரங்களில் உயிர், உடமை, கற்பு பறிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, பேச்சு, எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ், இராணுவத்தின் அட்டூழியத்துக்கிடையில் வாழும் சிறுபான்மையினம்,சுதந்திரமாகப் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழ உந்தப்பட்டதன் விளைவு தான் தமிழீழப் போராட்டம். அமைதியை விரும்பிய, காந்தியத்தில் நம்பிக்கையுள்ள, சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றிய ஈழத்தமிழர்களை, ஆயுதமேந்திப் போராடுமளவுக்குத் தள்ளியவை இந்த அட்டூழியங்களே.

ஈழப் போராட்ட காரணங்கள் 1.தனிச் சிங்களச் சட்டம் 2.பெளத்தம் அரச சமயமாக்கப்படல் 3.இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 4.கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் 5.திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் 6.அரச பயங்கரவாதம் 7.யாழ் பொது நூலகம் எரிப்பு 8.சிங்களமயமாக்கம் 9.வேலைவாய்ப்பில் இனத்துவேசம் 10.சிங்களப் பேரினவாதம் 11.ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் 12.அரச சித்திரவதை 12.இலங்கைத் தமிழர் இனவழிப்பு

தனிச் சிங்களச் சட்டம்
1956 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே தனிச்சிங்கள சட்டம் ஆகும். இதன் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஒரு இனத்தின் இருப்புக்கு, உரிமைக்கு அடிப்படையாக அமைவது மொழி. ஒரு நாட்டில் தனது மொழி மூலம் ஒருவன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் ஆற்றும் உரிமை மறுக்கப்படும் போது அவனின் உரிமை பறிக்கப்பட்டதாகவும் நாட்டின் தேவையற்ற அந்நியனாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றான் என்பதே யதார்த்தமுமாகும்.சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டம்.

பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கை அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டதற்கு அமைய அனைத்த மக்களும் அவரவர் சமயத்தை பின்பற்ற உரிமை உண்டு, எனினும் இலங்கை அரசிற்கு பெளத்தம் முதன்மை பெறும் என்கிறது. நடைமுறையில் இது நிதி, ஆள், வளங்களை பெளத்த சமயத்துக்கு கூடிய அளவில் ஒதுக்குகிறது. மேலும், பெளத்த பாரம்பரித்தையை பேண கூடிய அக்கறை காட்டுகிறது. இது பிற சமயத்தவரை சம குடியாளர்களாக உணர சிரமப்படுத்துகிறது

இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த ஆறாவது மாதமே தமிழ்பேசும் மக்களை மேலும் சிறுபான்மையாக்கும் நோக்குடன் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழரில் 10 லட்சம் பேரின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்றோராக்கினார்.
1827 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர் பிரித்தானியர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்டு, இலங்கையின் பொருளாதரத்தை உயர்த்த அயராது வியர்வை சிந்தி உழைத்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களின்(இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களை ஆடு மாடுபோல், தாயிடமிருந்து மகனையும், மனைவியிடமிருந்து கணவனையும் பிரித்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் சிங்களவர்கள். அதன்மூலம் தமிழரின் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்திண் முதுகெலும்பான மலையகத் தமிழர்களை 120 வருடங்களின் பின்னர் சிங்களவர்களால் நாடுகடத்தப்பட்டதற்க்குத் துணை போனவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் மேலும் விபரங்களுக்கு

திட்டமிட்ட தமிழினப் படுகொலை 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பெயரால் ஜெயவர்த்தனா அரசாங்கமே திட்டமிட்டு தமிழினப் படுகொலையை நடத்தி, தமிழன் கறி இங்கே கிடைக்கும் என்று விளம்பரப் பலகை எழுதி வைத்து, தமிழர்களைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு சிங்கள இனவெறியர்கள் கடைபோட ஊக்குவித்ததையும் கண்டு பொறுக்க முடியாமலேயே அகிம்சை வழியை விட்டு, தமிழர்களை ஆயுதப் போராட்ட வழிக்குத் திருப்பியது. முதன்முதலாக ஈழத் தமிழர்களை உலகம் முழுவதிலும் அகதிகளாகப் புலம்பெயரச் செய்த கொடுமையும் அப்போதுதான் தொடங்கியது. இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதுகூட பாராமுகமாக இருந்த இந்தியாவை இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி வைக்கும் அளவுக்குத் தூண்டியது. தமிழர்களின் பயங்கரவாதமா? இல்லை சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையே!

தமிழர்களின் வரலாறு

மேல உள்ள படத்தை பாருங்கள். இப்படித்தான் முந்தைய உலகம் இருந்தது.இதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் இதுதான் உண்மை என்று கொள்ள வேண்டும் . இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன குமரிக் கண்டத்தின் ஓர் எஞ்சிய பகுதி. இந்தக் குமரிக் கண்டம் தான் மூத்த குடியான ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம் கடற்கோளில் மூழ்கிப் போனதற்கு இலக்கியச் சான்றுகள் நமது தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடத்தில் காணப்படுகின்றன.

"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம்"
- தொல்காப்பியம்

செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே
- புறநூனூறு

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
- சிலப்பதிகாரம்

மேலும் இத்தீவில் உள்ள தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இலங்கை தீவானது தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று ஆராய்ச்சியாளார்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளின் நிதி கொண்டு, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்ததில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக்கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மேற்கூறிய சான்றுகளின்படி தற்போதைய இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதும் அங்கு வசித்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது.

தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.

Wednesday, October 29, 2008

தமிழ் இனப்படுகொலையும் தமிழகமும்

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றும் இனப்படுகொலையை பற்றி இவ்வாறு கூறுகிறது.

(அ) இன / மத குழுவொன்றின் அங்கத்தவர்களைக் கொலைசெய்தல். 
(ஆ இன / மத குழுவொன்றின் அங்கத்தவர்களுக்கு உடல் ரீதியான அல்லது மனரீதியான கடுமையான தீங்கினைச் செய்தல். 
(இ)  இன / மத குழுவொன்றின் பௌதிக இருப்பினை முற்றாக, அல்லது பகுதியாக அழிப்பதற்காக இக்குழுவின் வாழ்நிலையில் வேண்டுமென்றே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தல்.
(ஈ)  இன / மத குழுவினுள் குழந்தைகளின் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்குடன் செயற்படல். 
(உ) இன / மத குழுவொன்றின் குழந்தைகளை இன்னொரு குழுவிற்குக் கைமாற்றிவிடல்.

இவை எல்லாமே இலங்கையில் ஐம்பது வருடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால் உலக சமுதாயம் இதை கண்டனம் செய்வதோ, கண்டு கொள்வதோ கிடையாது. எல்லாருக்கும் தெரிந்தே ஒரு இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படுகொலையை எதிர்த்துப் போராடினால் அவர்கள் பயங்கரவாதிகளா ? ஒரு நாட்டின் எல்லாக் குடிமக்களும் சமமானவர்களே என்று கருதும்போது தான் அந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும்.அரசியல் அமைப்பு சட்டமே உரிமை மறுக்கும்போது அவர்களால் எப்படி வாழ முடியும் ??  தன்னாட்டு மக்கள் என்று கூறிக்கொண்டே அம்மக்களின் வீடு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றில் வானூர்தி மூலம் குண்டு வீசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது ?அதுவம் ஒரு முறை இரண்டு முறை அல்ல ஆறாயிரம் முறை.ஒரு பயங்கரவாதி பள்ளிகூடத்தில் இருந்தான் என்று சொல்லி எழுபது மழலைகளை கொன்றதே இது பயங்கரவாதம் இல்லையா ?? இது இனப்படுகொலை இல்லையா ?? எதிரி நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குவது போல் அல்லவா இருக்கிறது. யுத்த தர்மம் கூட காக்கப்படவில்லையே !! இப்படி உள்ள ஒரு அரசாங்கத்திடம் எப்படி சமத்துவத்தை எதிர் பார்க்க முடியும் ??

ஈழத் தமிழர்களுக்கு இது வாழ்வாதார பிரச்சனை;தமிழக அரசியல் தலைவர்களுக்கோ இது ஒரு ஆதாயம் தரும் பிரச்சனை. இந்தியாவிற்க்கோ இதை தீர்ப்பதற்கு மனம் இல்லை.ஏட்டலவிலே எல்லா ஒப்பதங்களும் , உபதேசங்களும்.

போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்கப்படவில்லை,ராணுவ உதவியும் நிறுத்தப்படவில்லை, பேச்சு வார்த்தைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இனப்படுகொலை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து குண்டு வீசி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்க ராணுவ உதவி ஒரு புறமும், குண்டு வீச்சில் ஊனமான மக்களுக்கு நிவாரண உதவி என்று மறு புறமும் (போர் நடந்து கொண்டிருக்கும்போதே எப்படி நிவாரணம் வழங்க முடியும் என்று தெரியவில்லை ??). என்ன இந்திய அரசின் கொள்கை... இப்படி ஒரு கொள்கைக்கு கருணாநிதியும் ஒரு உடன்பாடு.இவர் உலகத் தமிழர்களின் தலைவர் ??

ஒக்கனேக்கல் பிரச்சனையிலும் கருணாநிதி இப்படித்தான் நாடகமாடினார். இப்பொழுது இலங்கை பிரச்சனை !!. 
திருவாரூரில் இருந்து  ஒரு உடைந்த தகர பெட்டியுடன் சென்னை வந்து இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆனதிலிருந்து தெரியவில்லையா அவரது தமிழ் உணர்வு எப்படி பயன்பட்டது என்று ?? என்று திராவிட கழகம்,  திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாறியதோ அன்றே கருணாநிதியின் போராட்ட குணமும், தமிழ் உணர்வும் தர்ச்சார்பு உள்ளதாக மாறிப்போயிற்று.தமிழ் நட்டு மக்களும் மானாட மயிலாட பார்த்து விட்டு மறந்து விடுவார்கள். மக்களின் நிலை கண்டு ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கருவறுக்கக் காத்திருக்கும் ஜெயலலிதா, சோ ,ஹிந்து ராம் போன்றோர்களுக்கு கொண்டாட்டம்.

சினிமாக்காரர்களின் காலடியில் தன் முதுகெலும்பை தேடிக்கொண்டிருக்கும்,சுயசிந்தனை இல்லாத,செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் செயல்படும் தமிழர்களிடம்  வேறு ஒன்றும் எதிபார்க்க முடியாது.இனிமேலும் தமிழ் நாட்டு மக்களையோ, தமிழக அரசியல்வாதிகளையோ நம்புவதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த ஒரு உபயோகமும் ஏற்படாது. இந்தியா ஒருபோதும் தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கவும் செய்யாது, உருவாகவும் விடாது. அவர்கள் தெற்காசிய வல்லரசு கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் அவர்களையே உதவிக்கு அழைப்பது திருடனையே காவல் வைப்பது போன்றது.

பிள்ளையின் அருமை பிரசவ வலிதாங்கிப் பெற்றவளுக்கே தெரியும். வலியும், வேதனையும் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களால் மட்டுமே வைராக்கியத்துடன் போராட முடியும்.குளிர்சாதன அறைகளில் உட்காந்து இலங்கையின் தேசியம் பேசுபவர்களால் இவ்வலியை உணர முடியாது.சமமான வலிமை கொண்டவர்களுக்குள் மட்டுமே சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும் இல்லையேல் ஒருவர் உயர்ந்து மற்றொருவர் தாழ்ந்து தான் வாழ வேண்டும்.அவர்கள் பள்ளத்தை இட்டு நிரப்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல்வாதிகளே ,உதவ முடியாவிட்டாலும் போராட்டத்தை உருக்குலைக்க முயலாதிர்கள் !!

Sunday, October 26, 2008

உக்கிரமான ஒரு தமிழ் உதிரம்

கொடுவாள் கொண்டு குடலை கிழித்து, குருதியில் தோய்த்து, குற்றுயிராக்கி பின் மருந்து கொடுப்பது என்ன மனித நேயமோ ??
உங்கள் அரசியல் பந்தாட்டத்தில் உருட்டி விளையாட தமிழன் தலை தானா கிடைத்தது ?? 
கங்கை கொண்டு காடாரம் வென்று இமயத்தில் கொடியேற்றிய தமிழன் இன்று வீடின்றி, உண்ண உணவின்றி நடுத்தெருவில் கூடாரமிட்டு நாதியற்று நாடோடியாய் அலைகிறான்.அவனுக்காக குரல் கொடுக்க ஒரு உண்மைத் தமிழன் கிடையாதா ? 

விலங்கினங்களை கூட வேட்டையாட வரைமுறை உண்டு. அப்பாவி தமிழனை வெறி கொண்டு வேட்டையாடும் சிங்களனை கேட்க யாரும் கிடையாதா ?? கேட்க வேண்டிய கூட்டமோ சிந்தனையற்று சிதறுண்டு கிடக்கிறது.கேட்ட சிலருக்கோ தேசியம் என்ற பெயரில் சிறைச்சாலை !! 

குண்டு வைத்த கொடியவர்கள் கூட சுதந்திரமாக வீதி உலா வரும்பொழுது ஈழத்தமிழன் இறப்பிற்கு கண்டன குரல் எழுப்பியவர்களை கயவர்கள் என்று சிறையில் தள்ளுவதா ?? கன்னடன் அடிக்கும் போதும்,காவிரி நீர் தர மறுத்த போதும் , மீனவனை சுட்டு கொன்ற போதும் எங்கடா போயிற்று உங்களது தேசியம் ?? மாண்டு கொண்டிருக்கும் தமிழன் மண்டையோட்டில் எழுத நினைக்கிறீர்கள் உங்களது இறையாண்மையை ?? தமிழன் என்ற எண்ணம் கூட வேண்டாம் மனிதன் என்ற உணர்வும் கூடவா மறந்து போயிற்று ?? தமிழனின் உதிரத்தை உறிஞ்ச ஏன்டா அலைகிறீர்கள் !!

ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனமும் எழுச்சியுற்றதாகவே சரித்திரம் உண்டு..
பொருத்தது போதும் தமிழினமே !! போர்க்கோலம் பூணுவோம் !
புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் உதிரமடா நீ ! 
குழந்தை இறந்தே பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரப்பரம்பரையடா !!
அழிந்து போவதற்கு நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல ... ஆளப் பிறந்த ஆதிக்க நாயகர்கள் !
எழுச்சி கொண்டு விட்டோம்.. இனி வீழ்ச்சி எமக்கில்லை !!
இந்த வானமும் வையகமும் இனி எம் கால்களுக்கிடையில்....

Sunday, September 14, 2008

குறுந்தொகை பாடல்கள் ( 4 -8 )


4.நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே 
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 
அமைதற் கமைந்தநங் காதலர் 
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
--- காமஞ்சேர் குளத்தார்.

நோம் - நோகும்(வருந்தும்); நோம்என் நெஞ்சே - நோகும் என் நெஞ்சே 
இமைதீய்ப் பன்ன கண்ணீர் - இமையை தீய செய்யும் (இமையை வருத்தும்) கண்ணீரை 
தாங்கி - துடைத்து 
அமைதற் கமைந்த - அவ்வளவு நெருக்கமாக இருந்த 
நங் காதலர் - நம் தலைவர் 
அமைவிலர் ஆகுதல் - மனம்பொருந்தாராய்ப் பிரிந்து இருத்தல்

இமையை வருத்தும் கண்ணீரை துடைத்து என்னுடன் நெருக்கமாக இருந்த நம் தலைவர் இப்பொழுதுமனம்பொருந்தாராய்ப் பிரிந்து இருத்தலால் வருந்தும் என் நெஞ்சம். மூன்று முறை நெஞ்சம் நோதலை திரும்பத்திரும்பக் கூறுவது ஆற்றாமை மிகுதியின் அறிவிப்பாகிறது.


5.அதுகொல் தோழி காம நோயே 
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை 
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் 
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.
-----நரிவெரூ உத்தலையார்.

அதுகொல் தோழி காம நோயே - (அதுகொல் - அத்தன்மையானதோ)அத்தன்மையானதோ தோழி காம நோய் ? 
வதி- தங்கு,குடியிரு;குருகு-நாரை; 
வதி குருகு உறங்கும் - நாரைகள் உறங்கும் இடமாகிய  
இன்னிழற் புன்னை - இன்+நிழல் புன்னை - இனிய நிழலையுடைய புன்னை மரமானது, 
உடை திரை திவலை அரும்பும் 
திரை-கடல்;திவலை-நீர்த்துளி; 
- கரையை அலைகள் மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற, 
தீம் நீர் - கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய, 
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் 
மெல்லம் புலம்பன் - மெல்லிய கடற்கரையையுடைய தலைவன்;பிரிந்தென- பிரிந்தானாக, 
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே 
பல இதழ் உண் கண் - பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள், 
பாடுஒல்லா - இமை பொருந்துதலைச் செய்யாவாயின;

நாரைகள் உறங்கும் இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள்மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகியநீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற்கரையையுடைய எம் தலைவன் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என்கண்கள் காம நோயால் வாடுகிறது என் தோழியே 

6.நெய்தல் - தலைவி கூற்று
நள்ளென்று அன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
----- பதுமனார்.

நள்ளென்று அன்றே யாமம் = நள் இரவு யாமம் ஆகிவிட்டது
சொல் அவிந்து - சொற்கள் பேசப்படாமல்
முனிவு இன்று = வெறுப்பு, சினம் இல்லாமல்
நனந்தலை - அகன்ற இடத்தையுடைய ;துஞ்சு = உறங்கு;

இரவு பாதி முடிந்து விட்டது,வார்த்தைகள் பேசப்படாமல் மக்கள் அமைதியாக உள்ளனர்,வஞ்சனை நீங்கி இந்த பரந்து விரிந்த உலகமும் உறங்குகிறது.நான் மட்டும் தான் விழித்துக்கொண்டு இருக்கிறேன


7.வில்லோன் காலன கழலே தொடியோள் 
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் 
யார்கொல் அளியர் தாமே ஆரியர் 
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 
வாகை வெண்ணெற் றொலிக்கும் 
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 
---பெரும்பதுமனார்.

வில்லோன் - வில் வைத்து இருப்பவன்(வில்லையுடையவன்); காலன கழலே - காலில் கழலே;
தொடியோள் - தோடி (வளையல்) அணிந்தவள்; 
மெல்லடி மேலவும் சிலம்பே - மென்மையான பாதங்களில் சிலம்பே 
நல்லோர் யார்கொல் - நல்லோர் யார் என்று கூறுங்கள் 
அளியர் தாமே - அன்பில் முதிர்ந்தவர்களே 
ஆரியர் கயிறாடு - ஆரியர் கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது 
பறையிற் கால்பொரக் கலங்கி - பறை அடிக்கும்போது 
வாகை - வாகை (ஒரு வகை மரம்); 
வெண்ணெற் றொலிக்கும் - வெண்மையான நெற்றுக்கள் எழுப்பும் ஒலி 
வேய்பயில் - மூங்கில் காடுகள்;அழுவம் - கடல் 
முன்னி யோரே - முன்னே செல்பவர்களே...


வில் வைத்து இருப்பவன் காலில் கழல் ,வளையல் அணிந்தவள் மென்மையான பாதங்களில் சிலம்பு அணிந்து வாகைமரங்களில் காய்ந்த நெற்றுக்கள் எழும்பும் ஒலியைப் போல கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது பறை அடித்துஒலி எழுப்பும் இந்த நல்லவர்களாகிய ஆரியர்கள் யார் என்று கூறுங்கள் கடலுக்கு அருகில் உள்ள மூங்கில் காட்டைநோக்கி முன்னே செல்கிறார்களே !


8.கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 

பழன வாளை கதூஉ மூரன் 
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் 
கையும் காலும் தூக்கத் தூக்கும் 
ஆடிப் பாவை போல 
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 
----ஆலங்குடி வங்கனார்.

கழனி - வயல்;;;    ;
மாஅத்து விளைந்துகு - விளைந்த மரங்களிலிருந்து உதிரும்;
தீம்பழம் - இனிய பழம் 
கதூஉ - கவ்வும் 
எம்மிற் பெருமொழி கூறித் - என் வீட்டில் பெரிசாக பேசுவான் 
தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல  - தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும்கண்ணாடி பாவை போலமேவன செய்யுந்தன் - வேண்டியதைச் செய்வான் தன் 

புதல்வன் தாய்க்கே -

வயலோர மரங்களிலிருந்து உதிரும் இனிய பழங்களை வாளை மீன்கள் கவ்வும் ஊரை கொண்டவன் என் வீட்டில்பெரிசாக பேசுவான் தன் வீட்டிற்கு சென்றால் கையும் காலும் தூக்கும் கண்ணாடி பாவை போல தன் பெண்டாட்டிபேச்சை கேட்பான்.Saturday, August 30, 2008

பண்டைய தமிழகத்தில் காமன் விழா


நேற்று தான் "தாம் தூம்" படம் பார்த்தேன் .இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்து.

அகம் பாதி முகம் பாதி 
நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காது அழகே !

உன் உள்ளத்தில் உண்டான காதல் எண்ணத்தால் உருவான உன் அழகான முகமும், காதலால் கொண்ட மோகத்தால் நீ என்னை தழுவும்போது உன் நகம் தீண்டும் இன்பமும் நான் இறந்தாலும் என் இறந்து போன செல்களிளின் நினைவுகளில் இருந்து நீங்காது. என்ன ஒரு ஆழமான காதல் வரிகள் !!

உன் குழலோடு விளையாடும் 
காற்றாக உருமாறி
முந்தானைப் படியேறவா 
மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் 
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா

இந்த பாடலை கேட்டவுடன் பண்டை காலத்தில் நடந்த காமன் விழா தான் நாபகம் வந்தது.அதை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று எண்ணினேன்.

காமன் விழா என்பது பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் பருவம் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பங்குனி மாதத்தின் இறுதியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில் வசந்த விழா என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்பட்டது .அந்நாள் தொடங்கி காவிரிப்பூம்  பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் சொல்லுகினங்க கடைச் சங்கக் கால அரசன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் காதல் திருவிழாவை காமன் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன .

பின்பனிக் காலம் என்பது ஒரு பருவ காலம். தமிழர் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவற்றுள் ஒன்று .

புதிய சிந்தனை, புதிய எதிர்பார்ப்புடன் புது வருடம் பிறக்கும் இளவேனிற்காலம் (சித்திரை,வைகாசி ), விழாகோலம் பூணும் முதுவேனிற்காலம் (ஆனி,ஆடி), வயல்வெளிகளுக்கு மேகத்தாய் பாலூட்டும் கார்காலம் (ஆவணி, புரட்டாசி),ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் பனிஒளியே என பாடப்பெறும் கூதிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை) , குளிர் கூடி மயக்கும் மாலை பொழுதை அளிக்கும் முன்பனிக் காலம் (மார்கழி, தை), புல்வெளிகளில் வெள்ளிப் பனி படியும் பின்பனிக் காலம் (மாசி,பங்குனி).

மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்ததாக பெருங்கதை என்ற நூல் கூறுகிறது.காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து நீராடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோல பொருள் தேடி வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம்

கலித்தொகையில் உள்ள ஒரு பாடலை பாருங்கள் ..
”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு”
தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்.

இதிலிருந்து என்ன தெரிய வருவது என்றால் காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்!

Wednesday, August 27, 2008

குறுந்தொகை பாடல்கள் 1- 3

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை உண்டு. திருக்குறளுக்கு உரை எழுதிய சாலமன் பாப்பையா, கலைநர் போல குறுந்தொகை பாடல்களுக்கு நான் உரை எழுத வேண்டும் என்று. பெரிய ஆசை தான்.... ஆனால் விட்டு விட முடியவில்லை.ஆதலால் எழுத ஆரம்பித்து விட்டேன் ...பார்க்கலாம் எவ்வளவு தொலைவுக்கு எழுத முடியும் என்று ..பெரும்பாலும் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையரின் விளக்க உரையை தான் எடுத்தாண்டுள்ளேன் .

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. எட்டுத்தொகை நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த மனிதர்களால் பாடப்பெற்றது.பின்னாளில் இது தொகுக்கப்பெற்று எட்டுத்தொகை நூல்கள் என்று அழைக்கப்பட்டன.
1. நற்றிணை(399)
2. குறுந்தொகை(400)
3. ஐங்குறுநூறு(498)
4. பதிற்றுப்பத்து(80) 
5. பரிபாடல் (22)
6. கலித்தொகை (150)
7. அகநானூறு(400)
8. புறநானூறு (398)

குறுந்தொகை பாடல்கள் ஒவ்வொன்றும் நான்கு முதல் எட்டு அடிகளை கொண்டது.
மொத்தம் 401 பாடல்கள் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துப்பாடல்
தாமரை புரையுங் காமர் சேவடிப் 
பவழத் தன்ன மேனித் திகழொளிக் 
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் 
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் 
சேவலங் கொடியோன் காப்ப 
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.

காமர் - அழகு
சேவடி - சிவந்த அடி, சிவந்த பாதங்கள்
புரை - உள்ளகத்தே 
பவழம் - செக்கச் சிவந்த ஓர் அணிகலன்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் - குன்றி மணி போல் சிவந்த உடுக்கை
உடுக்கைக் - உடுத்தும் துணி
ஏமவைகல் - பாதுகாப்பான நிலை
அஞ்சுடர் - ஞானம் அல்லது அறிவு சுடர்


விளக்கம் தாமரை மலர்களை ஒத்த அழகான சிவந்த திருவடிகள் கொண்டவனும் , பவழம் போல சிவந்த மேனியை கொண்டவனும்,குன்றி மணி போல் சிவந்த துணியை உடுத்தியவனும், சுடர் விட்டு ஒளிரக்கூடிய  சிவந்த நீண்ட வேலைக் கொண்டவனும் , சேவற்கொடியைக் கொண்டவானுமகிய  முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது.
இங்கே தாமரை சிவப்பு ,பவழம் சிவப்பு,குன்றி மணி சிவப்பு, உடுத்திய துணியும் சிவப்பு, நீண்ட வேலும் சிவப்பு, அவனது செவற்கொடியும் சிவப்பு. எல்லாம் சிவப்பு மயம் அதுதான் தமிழ் கடவுள் முருகனின் நிறம்.

1. குறிஞ்சி - தோழி கூற்று 
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த 
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் 
கழல்தொடிச் சேஎய் குன்றம் 
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம் பட = இரத்தத்தாற் போர்க்களம் செந்நிறமாகும் படி 
கொன்று அவுணர் தேய்த்த = அவுணர் - அசுரர், அசுரர்களைக் கொன்று தேய்த்த
செங்கோல் அம்பின் = இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும்,
செங்கோட்டி யானை = சிவந்த கொம்பை உடைய யானையையும், 
கழல் தொடி = கழல் - ஓரணிகலன்;தொடி - வளையல், வளையலணிந்த 
சேஎய் குன்றம் = முருகக் கடவுளுக்குரிய மலையானது, 
குருதி பூவின் குலை காந்தட்டு - செவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளையுடையது. 

விளக்கம்
தலைவன் தான் தலைவியின்பால் கொண்ட அன்பின் பொருட்டு அவளுக்கு செங்காந்தல் மலர்களை பரிசளிக்கிறான்.அப்போது தோழி தலைவனை நோக்கி , அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள்.

2. குறிஞ்சி - தலைவன் கூற்று 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
காமம் செப்பாது கண்டது மொழிமோ 
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்குதேர் = கொங்கு - தேன்; தேர் - தெரிவது
அஞ்சிறைத் தும்பி = அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே; அம் சிறை என்றால் அழகிய சிறகு எனவும் கொள்ளலாம் . சிறை = சிறகு, சிறகர்; 
காமம் செப்பாது - யான் விரும்பியதையே கூறாமல் 
கண்டது மொழிமோ - நீ, கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக! 
கெழீஇய நட்பின் - எழுமையும் (ஏழுகின்ற பிறவி தோறும்)என்னோடு 
பயிலியது = நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
பயிலியது கெழீஇய நட்பின் - எழு பிறவியுளும் என்னுடன் நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
மயில் இயல் - மயில் போன்ற மென்மையும் 
செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய 
அரிவை கூந்தலின் - இப்பெண்ணின் கூந்தலைப் போல ;அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது
நறியவும் - நறுமணம் உடைய பூக்களும் 
உளவோ - உள்ளனவோ? நீ அறியும் பூவே - நீ அறியும் மலர்களுள் 
(அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது அரிவை பெண்ணின் பருவங்கள் ஏழு அவற்றில் ஒன்று தான் அரிவை ... பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். ஒவ்வொரு பருவமும் மூன்று ஆண்டுகள்.)

விளக்கம்
ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்டு திரியும் அழகான சிறகுகளை உடைய வண்டே!. நீ என் கேள்விக்கு என் விருப்பத்திற்கிணங்க விடை கூறாமல் நடு நிலையாக நின்று பதில் சொல். என்னோடு நெருங்கிய நட்புடையவளும், மயில் போன்ற மெல்லிய தன்மையுடையவளும், நெருங்கிய அழகிய பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இப்படி மணமுள்ளதாக இருந்தால் சொல் என்கிறான்.

3. குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார். நிலத்தினும் பெரிது - பூமியைக் காட்டிலும் அகலம் உடையது, 
வானினும் உயர்ந்தன்று - ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது, 
நீரினும் அருமை அளவின்று - கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது. 
சாரல் - மலைப்பக்கத்திலுள்ள, 
கரு கோல் - கரியகொம்புகளை உடைய , 
குறிஞ்சி பூ கொண்டு - குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு 
பெரு தேன் இழைக்கும் - பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, 
நாடனொடு நட்பு - நாட்டையுடைய தலைவனோடு யான் செய்த நட்பானது,

விளக்கம்
குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு தேனடை செய்யும் நாட்டை கொண்ட தலைவனுடன் நான் கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது