Wednesday, August 27, 2008

குறுந்தொகை பாடல்கள் 1- 3

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை உண்டு. திருக்குறளுக்கு உரை எழுதிய சாலமன் பாப்பையா, கலைநர் போல குறுந்தொகை பாடல்களுக்கு நான் உரை எழுத வேண்டும் என்று. பெரிய ஆசை தான்.... ஆனால் விட்டு விட முடியவில்லை.ஆதலால் எழுத ஆரம்பித்து விட்டேன் ...பார்க்கலாம் எவ்வளவு தொலைவுக்கு எழுத முடியும் என்று ..பெரும்பாலும் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையரின் விளக்க உரையை தான் எடுத்தாண்டுள்ளேன் .

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. எட்டுத்தொகை நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த மனிதர்களால் பாடப்பெற்றது.பின்னாளில் இது தொகுக்கப்பெற்று எட்டுத்தொகை நூல்கள் என்று அழைக்கப்பட்டன.
1. நற்றிணை(399)
2. குறுந்தொகை(400)
3. ஐங்குறுநூறு(498)
4. பதிற்றுப்பத்து(80) 
5. பரிபாடல் (22)
6. கலித்தொகை (150)
7. அகநானூறு(400)
8. புறநானூறு (398)

குறுந்தொகை பாடல்கள் ஒவ்வொன்றும் நான்கு முதல் எட்டு அடிகளை கொண்டது.
மொத்தம் 401 பாடல்கள் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துப்பாடல்
தாமரை புரையுங் காமர் சேவடிப் 
பவழத் தன்ன மேனித் திகழொளிக் 
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் 
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் 
சேவலங் கொடியோன் காப்ப 
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.

காமர் - அழகு
சேவடி - சிவந்த அடி, சிவந்த பாதங்கள்
புரை - உள்ளகத்தே 
பவழம் - செக்கச் சிவந்த ஓர் அணிகலன்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் - குன்றி மணி போல் சிவந்த உடுக்கை
உடுக்கைக் - உடுத்தும் துணி
ஏமவைகல் - பாதுகாப்பான நிலை
அஞ்சுடர் - ஞானம் அல்லது அறிவு சுடர்


விளக்கம் தாமரை மலர்களை ஒத்த அழகான சிவந்த திருவடிகள் கொண்டவனும் , பவழம் போல சிவந்த மேனியை கொண்டவனும்,குன்றி மணி போல் சிவந்த துணியை உடுத்தியவனும், சுடர் விட்டு ஒளிரக்கூடிய  சிவந்த நீண்ட வேலைக் கொண்டவனும் , சேவற்கொடியைக் கொண்டவானுமகிய  முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது.
இங்கே தாமரை சிவப்பு ,பவழம் சிவப்பு,குன்றி மணி சிவப்பு, உடுத்திய துணியும் சிவப்பு, நீண்ட வேலும் சிவப்பு, அவனது செவற்கொடியும் சிவப்பு. எல்லாம் சிவப்பு மயம் அதுதான் தமிழ் கடவுள் முருகனின் நிறம்.

1. குறிஞ்சி - தோழி கூற்று 
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த 
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் 
கழல்தொடிச் சேஎய் குன்றம் 
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம் பட = இரத்தத்தாற் போர்க்களம் செந்நிறமாகும் படி 
கொன்று அவுணர் தேய்த்த = அவுணர் - அசுரர், அசுரர்களைக் கொன்று தேய்த்த
செங்கோல் அம்பின் = இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும்,
செங்கோட்டி யானை = சிவந்த கொம்பை உடைய யானையையும், 
கழல் தொடி = கழல் - ஓரணிகலன்;தொடி - வளையல், வளையலணிந்த 
சேஎய் குன்றம் = முருகக் கடவுளுக்குரிய மலையானது, 
குருதி பூவின் குலை காந்தட்டு - செவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளையுடையது. 

விளக்கம்
தலைவன் தான் தலைவியின்பால் கொண்ட அன்பின் பொருட்டு அவளுக்கு செங்காந்தல் மலர்களை பரிசளிக்கிறான்.அப்போது தோழி தலைவனை நோக்கி , அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள்.

2. குறிஞ்சி - தலைவன் கூற்று 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
காமம் செப்பாது கண்டது மொழிமோ 
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்குதேர் = கொங்கு - தேன்; தேர் - தெரிவது
அஞ்சிறைத் தும்பி = அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே; அம் சிறை என்றால் அழகிய சிறகு எனவும் கொள்ளலாம் . சிறை = சிறகு, சிறகர்; 
காமம் செப்பாது - யான் விரும்பியதையே கூறாமல் 
கண்டது மொழிமோ - நீ, கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக! 
கெழீஇய நட்பின் - எழுமையும் (ஏழுகின்ற பிறவி தோறும்)என்னோடு 
பயிலியது = நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
பயிலியது கெழீஇய நட்பின் - எழு பிறவியுளும் என்னுடன் நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
மயில் இயல் - மயில் போன்ற மென்மையும் 
செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய 
அரிவை கூந்தலின் - இப்பெண்ணின் கூந்தலைப் போல ;அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது
நறியவும் - நறுமணம் உடைய பூக்களும் 
உளவோ - உள்ளனவோ? நீ அறியும் பூவே - நீ அறியும் மலர்களுள் 
(அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது அரிவை பெண்ணின் பருவங்கள் ஏழு அவற்றில் ஒன்று தான் அரிவை ... பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். ஒவ்வொரு பருவமும் மூன்று ஆண்டுகள்.)

விளக்கம்
ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்டு திரியும் அழகான சிறகுகளை உடைய வண்டே!. நீ என் கேள்விக்கு என் விருப்பத்திற்கிணங்க விடை கூறாமல் நடு நிலையாக நின்று பதில் சொல். என்னோடு நெருங்கிய நட்புடையவளும், மயில் போன்ற மெல்லிய தன்மையுடையவளும், நெருங்கிய அழகிய பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இப்படி மணமுள்ளதாக இருந்தால் சொல் என்கிறான்.

3. குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார். நிலத்தினும் பெரிது - பூமியைக் காட்டிலும் அகலம் உடையது, 
வானினும் உயர்ந்தன்று - ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது, 
நீரினும் அருமை அளவின்று - கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது. 
சாரல் - மலைப்பக்கத்திலுள்ள, 
கரு கோல் - கரியகொம்புகளை உடைய , 
குறிஞ்சி பூ கொண்டு - குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு 
பெரு தேன் இழைக்கும் - பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, 
நாடனொடு நட்பு - நாட்டையுடைய தலைவனோடு யான் செய்த நட்பானது,

விளக்கம்
குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு தேனடை செய்யும் நாட்டை கொண்ட தலைவனுடன் நான் கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது


2 comments:

த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன் said...

ஐயா வணக்கம்,
மீதம் உள்ள பாடல்களையும் பதிவிட்டிருகளாமே, வாழ்த்துக்கள் மேலும் தொடரவம்

vairamuthudew said...

அருமை