Sunday, December 30, 2012

தூது

நான் யாழ் கருத்துக் களத்தில்(www.yarl.com) எழுதிய தூது பற்றிய திரி

காற்றை தூது விடலாம், மேகத்தை தூது விடலாம், நிலவைக் கூட தூது விடலாம் ஆனால் தன் உயிரை (நெஞ்சை) தூது விட முடியுமா?  இங்கு ஒருத்தி தன் உயிரை தூது விடுகிறாள்.

கூர்மையாக நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்டிருக்கும் நல்ல வாசனை கொண்ட மலரில் விழுந்த வண்டினால் உண்டான வாசத்தை தென்றல்காற்று புகுந்து கலந்து வீச, கண்கள் அவற்றை நோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில், மிகுதியான காதலால் எனை இன்பத்தில் திழைக்க வைக்கும் காதலனின் செய்கையால் நான் மெலிவடைந்து என் ஒளி பொருந்திய வளையல்கள் நெகிழ்ந்து போகும். அப்படிப்பட்ட காதலன் தற்போது பொருள் தேட வெளியூர் சென்று விட்டான்.  அவன் பிரிவால் நான் படும் துன்பத்தை உணர்த்துவதற்காக என் நெஞ்சம் அவனிடம் சென்றது . சென்ற நெஞ்சம் இன்னும் வரவில்லை. அங்கே அவர் செய்யும் தொழிலுக்கு துணையாக இருந்து அவரையும் அழைத்துக் கொண்டு ஒருங்கே வரலாம் என்ற ஆசையால்  உடனிருந்து  வருந்துகிறதோ?? அல்லது காதலர் கண்டு கொள்ளாததால் வருந்தி இங்கே திரும்பி வந்து, அதற்குள் பழைய அழகு எல்லாம் இழந்து விட்ட என் பசலை நிறத்தைப் பார்த்து, என்னை அறிய முடியாமல் இவள் அயலாள் என்று எண்ணி திரும்பிப் போய்விட்டதோ ?? துன்பம் எய்தி போய்விட்டதோ ?? என்று புலம்புகிறாள். நெஞ்சத்தை தூது விட்டால் நேரத்தோடு திரும்பி வராதோ ??

காதலனின் கைகள் பட்டதும் காதலி அணிந்த கைவளையல்கள் நெகிழுமோ?? இது உண்மையா கற்பனையா எனத் தெரியவில்லை . தெரிந்தவர்கள் பகருங்கள். இதே கருத்தை வைத்தே தில் என்ற படத்தில் கழட்ட முடியாத லைலாவின் மோதிரத்தை விக்ரம் கைபட்டதும் கழண்டு விடுவதாக காண்பிப்பார்கள்.


அந்த அகநானூற்றுப் பாடல் இதுதான்


குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ     
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை    
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய்     
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ      
அருளா னாதலின் அழிந்திவண் வந்து    
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி     
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே.


சிறுநனை நறுவீ   - நனைந்ததால் உண்டான நறுமணம்
எல்வளை ஞெகிழ்த்தோர்க் -  ஒளி பொருந்திய வளையலை நெகிழச் செய்தவர்
உறீஇயர்  - அறிவுறுத்த



குற்றால நாதருக்கு தோழியை தூதனுப்பும் ஒரு பேதைப்பெண் 

தூது நீ சொல்லி வாராய்- பெண்ணே
குற்றாலா முன்போய்த் தூது நீ சொல்லி வாராய்!
ஆதிநாட் சுந்தரர்க்குத் தூது போனவர் முன்னே (தூதுநீ)
வந்தாலிந்நேரம் வரச்சொல்லு- வராதிருந்தால்
மாலையாகினும் வாச...- நுற்றலாதம்..
கந்தாலென நொஞ்சைத் தரச்சொல்லு- தராதிருந்தால்
தான் பெண்ணாவிய, பெண்ணை நானாவிடேனென்று


ஆதி சுந்தரரிடம் தூது போன அந்த குற்றால நாதரை என்னுடன் வரச்சொல்லு. அப்படி வராவிடில் கந்தலாகிப் போன என் நெஞ்சை தரச் சொல்லு. அப்படி தராவிட்டால் நான் அவர விட மாட்டேன் என்று சொல்ல தூதனுப்புகிறாள்.



நண்டையும் தூது விடலாம் தானே!!

கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேனிமிர் நறுமலர் புன்னையும் மொழியாது;
ஒருநின் அல்லது பிறிதுயாது இலனே;
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துனென நசைஇத்;
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையோடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!'


கடற்கரைச் சோலையும் தூது செல்லாது , உப்பங்கழியும் எடுத்துச் சொல்லாது, வண்டுகள் ஒலிக்கும் வாசம் மிகுந்த மலரினையுடைய புன்னை மரமும் மொழியாது. நின்னையன்றி வேறு துணை எனக்கு இல்லை !! .  கரிய நீரோடையில் மலர்ந்த கண்ணைப் போல் உள்ள நெய்தற் பூவின் இதழ் வாசத்தினை அமிழ்தம் என்று எண்ணி அதில் உள்ள  குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிகுந்ததால் பறக்க இயல்லாமல் சோர்ந்து போகும். அத்தகைய ஊரை சேர்ந்த  தலைவனுக்கு நீதான் சொல்ல வேண்டும் நண்டே !!

தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் விருப்பம் மிக்க பெடையுடன் வருத்தமுடன் அமர்ந்திருக்கும் சிறிய கடற்காக்கை, சுறாமீன் வேட்டையாடிய  இடத்தில் எஞ்சி கிடக்கும் வெள்ளிய இறாமீனைப் பற்றி உண்பதாகக் கனவு காணும். இருள்செறிந்த நடு இரவில் வரும் உனக்கு, பல நாளும் உனது  மிக்க துயரினை நீக்கிய நான், உனது பிரிவால் எழும்  கடுமையான துயரினைக் கடக்க முடியாமல் உள்ளேன் என்று கூறு..!!

ஒரு நின் அல்லதுபிறிது யாதும்இலன் - நின்னையே யன்றி வேறுஎத்துணையும் இல்லேன்
இரு கழி மலர்ந்த- கரிய நீரோடையில் மலர்ந்த
கண் போல்நெய்தல் கமழ் இதழ் நாற்றம் - கண்ணைப்போலும்நெய்தற் பூவின் கமழும் இதழ் நாற்றத்தினை
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து -  குளிர்ந்ததாதினை உண்ட வண்டின்கூட்டம் களிப்புமிக்கு
பறைஇய தளரும் துறைவனை, நீயே - பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு
கைதைஅம் படுசினை - தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில்
எவ்வமொடு அசாஅம் - விருப்பம் மிக்கபெடையுடன் வருத்தமுடன் தளர்ந்திருக்கும்
கடல்சிறு காக்கை - சிறிய கடற்காக்கை,
 கோட்டு மீன்வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - சுறாமீன்இயங்கும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள,
வெள் இறா கனவும் - வெள்ளிய இறாமீனைப் பற்றியுண்பதாகக் கனவு காணும்,
நள் என் யாமத்து - இருள்செறிந்த நடுஇரவில் வந்து,
பல்கால் நின் உறுவிழுமம் களைந்தோள் - பல நாளும் நினது மிக்கதுயரினை நீக்கியோள்,
தன் உறு விழுமம் நீந்துமோஎனவே - நின் பிரிவால் எய்திய தனது மிக்கதுயரினைக் கடக்க வல்லளோ என்று ;


குரு பார்வை என்ற படத்தில் வரும் ஒரு பாடல்... நந்தவனப் பூவை தூது சொல்ல வேண்டும் தலைவனும் தலைவியும்....
ஒரு அழகிய தமிழ்ப் பாடல்  ... 

நந்தவனப் பூவே தூது செல்ல வா
மன்னன் முகம் பார்த்து சேதி சொல்லி வா
இது மாமன் மாடக் கிளியே
நடமாடும் கோவில் சிலையே
விழி பார்வை தூவும் பணியே
தினம்  வாடுது தானாய் தனியே

வஞ்சி இவள் கொலுசு கொஞ்சி கொஞ்சி உரசி
சொல்லுவதை சொல்லிவிட்டு வா
அஞ்சு விரல் வளைத்து அஞ்சுகத்தை அணைக்க
சம்மதத்தை சொல்லிவிட்டு வா

செங்கமலப் பூவே சங்கதியைச் சொல்லு
வீரன் இவன் வேல்விழி பட்டு
வீழ்ந்ததை நீ போய்ச் சொல்லு

பூவரசம் பூவே போதுமெனச் சொல்லு
பாசம் வைத்தத்தாலே நானும் மோசம் போனேன் எனச் சொல்லு

கொடியில் பிறவா மலரே உனக்குள்  வாசம் வந்ததைச் சொல்லு
மாமன் மடியில் மணக்கத்தானே மலர்ந்தேன் என்பதைச் சொல்லு
சித்தகத்தி மலரே சித்திரைவெயில் நிலவை பத்திரமாய்  வரச் சொல்லி வா
அத்தை மகள் அணைச்சு முத்த மழை பொழிய உத்தரவு தரச் சொல்லி வா

ஜாதி மல்லிப் பூவே ஜோதிடம் நீ சொல்லு
தோகை தோளில் மாலை சூடும் தேதியை நீயும் கேட்டுச் சொல்லு
தூது வலைப் பூவே தூது நீயும் செல்லு
தையல் எந்தன் கையகம் சேர மையல் கொண்டதைச் சொல்லு
ஆடும் மயிலாய் இருந்தால் எனக்கு இறகாய் இருக்கச் சொல்லு
இனியோர் பிறவி இருந்தால் அதிலும் துணையாய் வருவேன் சொல்லு ..
.


மதி மயக்கும் இந்த தூது பாடிய கவிஞன் யார் எனத் தெரியவில்லை தேடிக் கொண்டிருக்கிறேன் 

சில கிருக்கல்கள்

நான் யாழ் கருத்துக் களத்தில்(www.yarl.com) எழுதிய கவிதைகள்

நுதலில் உலவும் அளகமே
வேய்கொள் தோளுடன் புலவியோ ??
கன்னக் கதுபபுகளில் தவழ்ந்து
காதுமடலுடன் கலவி  கொள்கிறாய் !!


நுதல் - நெற்றி
அளகம் - முன்னுச்சி மயிர்
வேய்கொள் - மூங்கில் போல் வளைந்த தோள்
புலவி - ஊடல்

அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே...



இவள் நெற்றிப்பிறை
     பூமிப்பெண் சூடும் வளர்பிறை
இவள் விழிவீச்சு
      ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு
இவள் சிரிப்பலை
       உலகமியங்கும் மின்காந்த கதிரலை
இவள் கண்ணங் கருவிழிகள்
      விண்மீன்களை  விழுங்கும் கருந்துளைகள்
இவள் கவுல்கள்
      வெண்ணிலவின் பால்வண்ணப்  பரப்புகள்
இவள் செவ்விதழ்கள்
      செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள்
இவள் மறைமேடுகள்
      ஆழ்கடல் பனிமுகடுகள்
இவள் உந்திச்சுழி
      பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி


கருந்துளைகள் – black holes
சூரியசூறாவளி – solar wind


மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று
கடியிலிருந்து கடிதாக வந்து கடித்ததினால்
கோளையில் வைத்த கோலைக்கறியை  புசிக்க முடியாத கோழையானேன்
எந்த தலத்தில் வலிதீர்க்க தழம் கிட்டுமோ
முற்றத்தில் கோளமிட்டு தன் கோலம் திருத்தி
சோலியணிந்து  சோளிதூக்கி சோழியன்வீதி சென்றவளை இன்னும் காணவில்லை
மழைத்துளிதரு  துழிதங்கும் துலிபோல் அசைந்து வருகிறாளோ??


..........
கிளியைக்கண்டுகூட  கிலி கொள்ளும் எனக்கு பொற்கிழி தகுமா ?? 


குழவி - குழந்தை; குலவி - மகிழ்ச்சி; குளவி - ஒருவகை வண்டு;
கடி - அரண்மனை; கடிதாக - விரைவாக; கடி - கவ்வுதல் ;
கோளை - குவளை,பாத்திரம்; கோலை - மிளகு; கோழை - வீரமற்றவன்;
தளம் - மேடை, மாடி வீடு; தலம் - இடம்;  தழம் - தைலம்;
கோளம் - மாவினால் படம் வரைதல்; கோலம் - அழகு;
சோலி - ரவிக்கை; சோழியன்  - சோழி உருட்டுபவன்;சோளி - கூடை;
துளி - மழைத்துளி; துழி - பள்ளம்; துலி - பெண் ஆமை
கிளி - பறவை ; கிலி -அச்சம்; கிழி - பணமுடிப்பு;

மடலேறுதல் / மடலூர்தல்


இணையத்தில் பல வலைத்தளங்களில் மடலேறுதல் பற்றி "பனைமரத்தின் மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து செல்தல்" என்றே குறிப்பிடுகின்றனர். பனைமடலால் செய்யப்பட்ட குதிரையில் ஊர்ந்து செல்ல முடியுமா? இது பொருட் பிழையாகவே தோன்றுகிறது.

தொல்காப்பியத்தில் மடலூர்தல் பற்றி "மடன்மா கூறும் இடனுமா ருண்டே"  
மடன்மா - மடல் மா;மடல் - பனை மடல்; மா - குதிரை ; மடல் தாங்கிச் செல்லும் குதிரை;

ஒத்த பருவமுள்ள ஒருத்தனும் ஒருத்தியும் களவொழுக்கத்தில் காதல் புரிகின்றனர். பெற்றோர் தலைவியின் காதலை கருதாமலும், தலைவி தன காதலை பெற்றோருக்கு தோழி மூலம் உணர்த்தாமல் காலம் தாழ்த்தி வரும்போது, காவல் மிகுதியால் தலைவியை கூட முடியாத பொது தலைவன் மடலூர்தலை நாடுவான்.

தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை ஊரார் அறியும் பொருட்டு, தலைவியின் பெயரையும் உருவத்தையும் பனை ஓலையில் வரைந்து, அதை கையிற் பிடித்துக் கொண்டு குதிரையில் மீதேறி தன காதலை வெளியிட்டவாறு தலைவியின் தெருவிடைச் செல்வான். இதுகண்ட ஊரார் கூடிப் பேசுவர். ஊரார் பேசும் அம்மொழிக்கு அஞ்சி தம் மகளை அவனுக்கே மணமுடிப்பர். இதுவே மடலூர்தல் எனப்படும்.

Wednesday, October 31, 2012

திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 2


"என் சுவாசக் காற்றே" என்ற படத்தில் வரும் "தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்" என்ற பாடலின் முதலில் வரும் ஐந்து வரிகள் அப்படியே ஒரு குறுந்தொகை(௨௭) பாடல். இதை எழுதியது வெள்ளிவீதியார் என்னும் சங்கப் பெண் புலவர். இதைவிட காமத்தை வெளிப்படுத்த வேறு வரிகள் கிடையாது என்றே நினைக்கிறேன்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது 
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு 
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதாவது 
பசலை உணி இயற் வேண்டும் 
திதலை அல்குல் என் மாமைக் கவினே 

விளக்கம்: நல்ல பசுவின் இனிய பாலானது,  அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல்  தரையில் சிந்தி வீணானது போல, தேமல் படர்ந்த என் பெண்குறியும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.  

மாமைக் கவினே - மாந்தளிர் நிற அழகே.  என்ன வரிகள்  !!

அடுத்து காதலன் படத்தில் வரும் "இந்திரையோ இவள் சுந்தரியோ" எனத் தொடங்கும் ஒரு சின்னப் பாடல். இந்தப் பாடல்  திரிகூடராசப்பக் கவிராயரால் திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. இது மிகச் சிறந்த சிற்றிலக்கிய காவியம் என்று சிலாகிப்பவர்களும் உண்டு . இந்தப் பாடல் வசந்தவல்லி என்பவள் தெருவில் பந்தாடிக் கொண்டிருப்பதை வருணித்து எழுதியது.  பாடல் இதோ  

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
     ரம்பையோ மோகினியோ - மன
முந்தியதோ விழி முந்தியதோ கர
     முந்தியதோ வெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
     சங்கணி வீதியிலே - மணிய
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
    பொற்பந்து கொண்டாடினாளே!

விளக்கம்: திருமகளோ! இரதியோ! அரம்பையோ! மோகினியோ! என்று, கண்டவர்கள் ஐய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்! இவள் பந்தாடும்போது, பந்து அடிக்க இவளின் மனம் முன் செல்கிறதா? இவள் கண்கள் தாம் முந்திச் செல்கின்றனவா? இவள் கைகள் முந்துகின்றனவா? எது முதலில் முன் செல்கிறது? என்று, வியக்குமளவுக்கு மூன்றாம் பிறையை அணிந்து தில்லையில் கூத்தாடியவர் வீற்றிருக்கும் குற்றால மாநகர் வீதியில் ஒய்யாரி வசந்த வல்லி பந்தாடினாள்.

இது எல்லாம் ஒரு சின்ன எடுத்துக் காட்டுதான். அதே நூலில் வரும் ஒரு சின்னப் பாடல் உங்கள் பார்வைக்காக  

கல்லுப் பதித்த தங்கச் செல்லக் கடகமிட்ட செங்கையாள்-எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக் கிடக்குமிரு கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்குமெழில் உந்தியாள்-மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறியரோம பந்தியாள்

துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன இடையினாள்-காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள்-மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள்.

 வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் - ஒரு
வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்

விளக்கம்: மணிகள் பதித்த தங்கத்தால் செய்த அழகிய வளையல்கள் அணிந்த சிவந்த கைகளை உடையவள். அடுத்த வரிகளை இரண்டு விதமாக கொள்ளலாம். கொங்கைகள் இரண்டுமே கச்சுக்குள் அடங்கி கிடந்தாலும்  காண காண தித்திக்கும் (அல்லது) எவ்விடத்திலும் உப்பு கரித்தாலும் அவ்விடத்து மட்டும் தித்தித்து கிடக்கும் எனவும் உரைக்கலாம்.முனிவர்களின் மனமும் சுழலும்படியான அழகிய தொப்புள் சுழியினை உடையவள். அந்த உந்தி சுழிக்கும் மேலாகா ஆடவரின் உள்ளத்தை விழுங்கும் சிறிய ரோமப் பந்தியினை உடையவள். இதுக்கு மேல விளக்கம் சொன்ன வேற மாதிரி இருக்கும் அதனால  இதோடு முடிச்சுக்குவோம் 


Tuesday, October 30, 2012

திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 1

சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்றுக்கண் . கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அதை தொட்டுச் செல்லாமல் இருக்க முடிந்ததில்லை. சங்க இலக்கிய வரிகள் என்னென்ன திரைப்பட பாடல்களில் வந்துள்ளது என்பதை பற்றி ஒரு சிறிய அலசல்.

சங்க இலக்கியம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இருவர் படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல் தான். அதில் வரும்  

"அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா"
 - அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நெற்றியில் நீர்த் திவலைகள் முத்துப் போல் உருள கொற்றவனுக்கு உரித்தான சுனையில் நீரடியவள் நீயா?. (பொய்கை என்றால் இயற்கை நீர் நிலை : சுனை. குளமன்று) 

இந்த வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சில்லிடும் உணர்வு. இந்தப் பாடலில் வரும் மிகப் பிரசித்தி பெற்ற வரிகள்  "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" புறநானூற்றில் நூற்றுப் பன்னிரண்டாம் பட்டிலிருந்து எடுத்தாண்ட வரிகள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான் பாரியின் மகள் பாடியதாக வரும். புறநானூற்றில் சோகத்தை சொன்ன அதே வரிகள் ..இருவர் படத்தில் காதலை சொல்லும்... அதே பாடலில் "யாயும் ஞாயும்  யார் ஆகியரோ" எனத் தொடங்கும் வரிகள் ஒரு அருமையான குறுந்தொகைப் பாடல் 

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும்  யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன? 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமா ? என கவலை கொண்ட காதலியை தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இது தான். உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தை பெற்று பிரிக்க முடியாதது போல  போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன.

அடுத்த முறை வேறு ஒரு பாடலை காணலாம்...






Monday, October 29, 2012

கனாக்களோடும் வினாக்களோடும்

மண்ணைத் துறந்து 
மனையை விடுத்து
மனையாளைப் பிரிந்து 
மழலைகளின் மொழிமறந்து
எல்லையற்ற ஆசைகளை சுமந்து
எண்ணற்ற கனாக்களில் கரைந்து  
எதிர்கால வண்ணங்களில் நனைந்து    
பெண்மகவு இரண்டு கொண்டதால்
பின்னாளில் பொருட்ச்செலவு  மிகுமென  
போருள்தேடச் செல்கிறேன் தொலைதூரம் -அங்கு 
துணையின்றி தூக்கம் தழுவுமோ
குழந்தைகாணா   கண்கள்தாம் அயறுமோ 
சுகதுக்கங்கள் பகிர சுற்றம் கிட்டுமோ 
நட்பு பாராட்ட நண்பன்  கிடைப்பானோ 
தனிமை எனை திண்ணுமோ        
வெறுமை எனை துறத்துமோ  
அலுவல்சுமை  எனை அமிழ்த்துமோ     
கனாக்களோடும்  வினாக்களோடும்  வானவீதியில் நான் .

Wednesday, April 25, 2012

ஆதித்த கரிகாலன் கொலையும் அதன் மர்மங்களும் - II

ஒவ்வொரு முறையும் ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணங்களை பற்றி ஆராயும்பொழுது  புதுப் புது உண்மைகள் தெரிய வருகிறது. அது நான் முன்பு கொண்ட எண்ணங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. வல்லவன் எழுதியதே வரலாறு.. அதையே நாமும் நம்புகிறோம். அதையே நம் பிள்ளைகளுக்கும் சொல்கிறோம். ஆனால் உண்மை வரலாறு ஆதிக்க சக்தியினாரல் மறைத்தும் / திரித்தும் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய தேடலும், அறிந்தவற்றை உரக்கச் சொல்வதுமே எமது எண்ணம். இதுவரைக்கும் நான் தேடிய தேடல்களின் முடிவில் இருந்து நான் அறிந்து கொண்டது "கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் வரலாற்று உண்மைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை". வரலாற்று உண்மைகளை அறிய வேண்டுமெனில் அக்கற்பனையில் இருந்து மீள வேண்டும்.          

சோழ வரலாற்றில் ஆதித்த கரிகாலன் மட்டும் மர்மான முறையில் கொல்லப்படவில்லை. அவன் தாத்தாவாகிய அரிஞ்சய சோழனும், அப்பனுமாகிய சுந்தர சோழனும், மைத்துனனுமாகிய வந்தியத் தேவனும்  மர்மமான முறையிலே கொல்லப்பட்டுள்ளனர். இதன் கொலைக்கான காரணங்களைப் பார்க்குமுன் அப்போது நிலவிய சமூக சூழலை பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் சைவ மதத்திற்கும் வைணவ  மதத்திற்கும் இடையே பல மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இக்கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன. சோழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் (பாண்டியர்களும் கூட). இதன் காரணமாக வைணவ பிராமணர்கள் தொடர்ந்து சோழப் பேரரசை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். காட்டுமன்னார்குடிக் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் ஆதித்தன் கொலைக்கு சதுர்வேதி  மங்கலத்துப் பிராமணர்கள்தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தினரை இராசராசன் ஊரை விட்டு துரத்தியதாக கூறுகிறது.  இந்தக் கொலைக்கு காந்தளூர்ச் சாலை நம்பூதிரி பிராமணர்கள் தூண்டுதலே காரணம் என்று கருதி இராசராசன் காந்தளூர்ச் சாலை மீது போர் தொடுத்து சிதைத்தான் என்ற கூற்றும் உண்டு.இது எதைப் பற்றியுமே கல்கி சொல்லவில்லை(சாதிப் பாசமோ??). எது எப்படியோ இக்கொலையில் உத்தம சோழனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது மட்டம் தெளிவாகிறது.

கீழ்வரும் கேள்விகளுக்கு நான் விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் .....

1) ஆதித்த கரிகாலனும் குந்தவையும் இரட்டை பிறவிகள் என்றும்,  குந்தவை பிறக்கும்போது ஒரு கால் ஊனமாக இருந்தது என்ற குறிப்புகள் பாரசீக மொழியில் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார் என்பவரைப் பற்றி குறிப்பிடும்போது உள்ளதாக கூறுகின்றனர். 

2) ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திரனும் இலங்கைக்கு படை எடுத்துச் சென்று தோல்வியுற்றதாகவும், ஆதித்த கரிகாலன் சுந்தர சோழன் இருக்கும்பொழுதே காஞ்சியை  தனியாக ஆட்சி செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

3) உத்தம சோழன் கரிகாலனை சதியின் மூலம் கொல்வதற்கு உடந்தையாக இருந்து,  இறந்தவுடன் கலவரத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி, சுந்தர சோழனை காஞ்சியில் சிறை வைத்து, ஆதித்த கரிகாலன் இறந்த கொஞ்ச நாட்களில் அவனும் கொல்லப்பட்டான் என்று கூறப்படுகிறது.

4) "முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்                    
  தலைமகன் பிரியாத் தையல்" 
  என்ற கல்வெட்டு குறிப்புகளின் படி வானமா தேவி பால் மனம் மாறாத பெற்ற குழந்தையையும் பிரிந்து கனவனுடன் தீயில் உடன்கட்டை ஏறினால் என்று குறிக்கிறது. அந்தப் பாலகன் ராஜா ராஜா சோழன் தானா? சிறு குழந்தையை பிரிந்து அவளாக உடன் கட்டை ஏறினாளா அல்லது ஏற்றப்பட்டளா?? 

5) குந்தவை வந்திய தேவனை காதல் மனம் கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.அது நிச்சயிக்கப்பட்ட திருமணமே. திருமணம் நடந்திருந்தாலும் அவர்களுக்கு குழந்தை ஏதும் இருந்ததாக் குறிப்புகள் இல்லை காரணம் வேங்கி மன்னான வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின் நடந்த ஒரு கலவரத்தில் திருநெடுங்களத்தில் கொல்லப்பட்டனா?

6) சுந்தர சோழன் மறைவிற்குப் பின் ராஜ ராஜனும் ,குந்தவையும் யார் பாதுகாப்பின் கீழ் எங்கு வாழ்ந்தனர்?

7) உத்தம சோழனிடமிருந்து எவ்வாறு ராஜ ராஜனுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்தது? உத்தம சோழன் கொல்லப்பட்டனா? கோவில் பொறுப்புகளை நிர்வகித்த உத்தம சோழன் மகன் ஊழல் குற்றசாட்டு காரணமாக கொல்லப்பட்டான் என்ற கூற்று உண்மையா?

Monday, February 27, 2012

மதி உறை / மதில் நிரை / மருதை / மதிரை / மதுரை

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த 
ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல்  தலைநகராகும். "மதுரை" இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர்.  அவற்றைப்  பற்றிய சில ...

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின்  தலைநகரமான  மதுரை என்ற  பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர். பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப் புறங்களில்குல  தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர்  எனக் கருதுவது பொருத்தமாகும். குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும்.  ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற  வார்த்தைகளில் இருந்து  வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம். 

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். 
குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.  

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப் பட்டதாக சிலரும் கூறுவர்.  

Tuesday, January 24, 2012

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பாண்டியன் எனவும் கொள்ளலாம். "வழுதி" என்பது பாண்டியர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று.

கானப் பேரெயில் - இந்த பெயரைக் கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் பல வரலாற்று நினைவுகள் என்னை மீட்டெழுப்புகிறது. அகநானூறு, புறநானூறு, திருக்குறள் எழுதிய சங்க காலத்திலும், சோழர் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்த பொழுதும், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் பொழுதும் கானப் பேரெயிலை கடக்காமல் சென்றதில்லை.
கானப் பேரெயில் = கானப் + பேர் + எயில் = கானகம் + பெரிய + மதில்;
கானப் பேரெயில் = காட்டின் நடுவே உள்ள மிகப் பெரிய அரண்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பித்து பழனி, திண்டுக்கல், அழகர்மலை, பிரான்மலை, காரைக்குடி, சாக்கோட்டை, காளையார்கோயில், கீழாநல்லிக்கோட்டை வரைக்கும் பல நூறு மைல்களுக்கு ஒரு அடர்ந்த கானகம் இருந்தது. "கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளை கொண்ட காட்டரன்" என்று புறநானுற்று பாடல் ஒன்று வர்ணிக்கிறது. அந்த காட்டு பிரதேசத்திற்கு "கானாடு" என்று பெயர். அந்த காட்டின் நடுவே இருந்த உயரமான கோட்டைக்கு கானப் பேரெயில் என்று பெயர். கானப் பேரெயில் இப்பொழுது காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கானப் பேரெயில் பற்றியும்  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பற்றியும் ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் புறநானூற்றில் பின்வருமாறு ஒரு பாடலைப் பாடியுள்ளார்

"நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க"

நிலவரை இறந்த குண்டுகண் அகழி- நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும்;
வான்தோய் வன்ன புரிசை - வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த அரண்;
மீன்பூத் தன்ன உருவ ஞாயில் - வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும்;
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை - கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும்
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் - பகைவர் நெருங்க முடியாத அரண்களால் சூழப்பெற்ற கானப்பேர் எயில்;

மேற்கண்ட பாடல் உக்கிரப் பெருவழுதி கானப்பேர் எயிலை ஆண்ட வேங்கை மார்பன் என்ற அரசனை வென்று அக்கோட்டையை கைப்பற்றியதை பற்றி கூறியதாகும்.


ராஜராஜ சோழன் இலங்கைக்கு படை எடுத்துச் சென்றபோது இக்காடுகளில் வழியாகத்தான் படைவீரர்களை அழைத்துச் சென்றான். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலிருந்து படையெடுத்த லாங்காபுரத் தண்டநாயகனின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட கோட்டையும் இதுதான். வீர பாண்டிய கட்டபொம்மன் ஒளிந்து கொண்டது இக்காடுகளில் தான், மருது பாண்டியர்கள் மறைந்திருந்து ஆங்கிலேயர்களை தாக்கியதும் இக்காடுகளில் தான். இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த காடுகளை, மருது பாண்டியர்களை போரில் வென்றவுடன் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான். காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது.

சரி விடயத்திற்கு வருவோம். உக்கிரப் பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன். போர்க்களத்தில் மிகத் துரிதமாகவும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் கொண்டதால் இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டது.  தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதக்கூடியதாக மூவேந்தர்கள் நட்பு உக்கிரப் பெருவழுதி காலத்தில் அமைந்தது. இந்த கால கட்டத்தில் மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. உக்கிரப் பெருவழுதி காலத்து சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி, சேரமான் மாரி வெண்கோ ஆகிய மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை சங்க காலத்து ஔவயார் புறநானூற்றில் பின்வருமாறு எழுதிய பாடல் மூலம் அறியலாம்.

"நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்"


உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரை தலைமைப் புலவராக அமர்த்தி தொகுக்கும் பணியை முடித்தான். உலகப் பொதுமறை திருக்குறள் இவனது அரசவையில் தான் அரங்கேற்றப்பட்டது எனபது செவி வழிச் செய்தியாகும். உக்கிரப் பெருவழுதி சிறந்த புலவனும் கூட.  நற்றினையில் "எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் " எனத் தொடங்கும் பாடலையும் அகநானூற்றில் "கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற" என்ற பாடலையும் பாடி உள்ளான் . 

 திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.

 உக்கிரப் பெருவழுதி பற்றி இறையனார் அகப்பொருள் உரையில்
"சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த
முடத்திருமாறன் முதலாக
உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப" 

கடல் கொள்ளப்பட்ட கடைச் சங்க காலத்தில் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்கள் புரவலர்களாக இருந்தனர். கடைச்சங்கத்தில் இவனே கடைசி மன்னனாக கருதப்படுகிறது.