Wednesday, December 28, 2011

கோச்செங்கட் சோழன்

கரிகாலன் போன்றே கோச்செங்கட் சோழன் என்ற கோச்செங்கணானும் வரலாறும் புராணமும் போற்றி புகழ் பாடும் புகழ்ச்சிக்கு உரியவன். பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் ஒன்றான,புலவர் பொய்கையார் படிய களவழி நாற்பது என்ற நூலின் பாட்டுடைத் தலைவன். சுபதேவ சோழனுக்கும், கமலாவதி ராணிக்கும் மகனாகப் பிறந்தவன் கோச்செங்கணான்.

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து  வந்த கோச்செங்கணான் சேரன் கணைக்கால் இரும்பொறையை போரில் வென்று அவனை சிறைப் படுத்தினான் என்பதும், அங்கு சேரன் குடிக்க நீர் கேட்டு அதைச் சிறைக் காவலன் தர மறுக்க  'குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார்' என்ற பாடலை எழுதி வைத்து விட்டு உயிர் நீத்தான் என்பதும் பாட நூல்களின் வழியாக நாம் அறிந்த ஒன்று.இந்நிகழ்ச்சிக்குப் பின் பல வரலாற்று சம்பவங்கள் பொதிந்துள்ளது என்பது நாம் அறியாத ஒன்று.

களப்பிரர் ஆதிக்கம் தமிழகத்தில் மிகுந்திருந்த நாட்களில் சமண மதம் பரவி கொல்லாமை போதிக்கப் பட்டு கொண்டிருந்தது. சிவபக்தனாகிய கோச்செங்கணான் போர்களில் அதிக நாட்டமில்லாமல் ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் சோழ நாட்டை ஆக்கிரமிக்கும் பொருட்டு போர் தொடுத்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று முறை சோழ நாட்டின் மீது போர் தொடுத்து  மூன்று முறையும் தோற்று சிறை பட்டான்.பொய்கையார் என்ற புலவரின் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதற்குப் பலனாக பொய்கையார் பாடியதே களவழி நாற்பது என்னும் பாடல் தொகுப்பு. அதற்குப் பின்னும் சேரன் அடாது செய்யவே சிறை பட்டு குடிக்க நீர் கிடைக்காமல் இறந்து போனான்.

எதிர்க்கும் அரசரின் குலத்தையே பூண்டோடு அழிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்த கோச்செங்கணான் மூன்று முறையும் பகை அரசனை மன்னித்து, அவன் நாட்டையே ஆளச் செய்த அவன் அசோகனுக்கு ஒப்பாவான்.காவிரிக் கரையோரம் எழுபது சிவ ஆலயங்களை எழுப்பி மதத்தை பரப்பியதுடன், மழை காலத்திலும் புயல் காலத்திலும் மக்கள் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தவன்.இவ் ஆலயங்களை  "யானை ஏறா மாடக் கோயில்" யானைகளாலும் தகர்க்க முடியாத மாடக் கோவில்கள் என்பார்கள். யானைப் படை கொண்ட சேரனை குதிரைப் படை கொண்டு வீழ்த்தியதாக கூறுவர்.

சோழனின் போர்க்களத்தைப் பாடும் களவழி நாற்பதிலிருந்து சில பாடல்கள்

"ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து."

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில் குருதி பெருகி வழிந்தோடியதாம். அக்குருதிச் சேற்றில் வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்களாம்.

"பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து"

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்றனர் . வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.