Wednesday, December 28, 2011

கோச்செங்கட் சோழன்

கரிகாலன் போன்றே கோச்செங்கட் சோழன் என்ற கோச்செங்கணானும் வரலாறும் புராணமும் போற்றி புகழ் பாடும் புகழ்ச்சிக்கு உரியவன். பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் ஒன்றான,புலவர் பொய்கையார் படிய களவழி நாற்பது என்ற நூலின் பாட்டுடைத் தலைவன். சுபதேவ சோழனுக்கும், கமலாவதி ராணிக்கும் மகனாகப் பிறந்தவன் கோச்செங்கணான்.

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து  வந்த கோச்செங்கணான் சேரன் கணைக்கால் இரும்பொறையை போரில் வென்று அவனை சிறைப் படுத்தினான் என்பதும், அங்கு சேரன் குடிக்க நீர் கேட்டு அதைச் சிறைக் காவலன் தர மறுக்க  'குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார்' என்ற பாடலை எழுதி வைத்து விட்டு உயிர் நீத்தான் என்பதும் பாட நூல்களின் வழியாக நாம் அறிந்த ஒன்று.இந்நிகழ்ச்சிக்குப் பின் பல வரலாற்று சம்பவங்கள் பொதிந்துள்ளது என்பது நாம் அறியாத ஒன்று.

களப்பிரர் ஆதிக்கம் தமிழகத்தில் மிகுந்திருந்த நாட்களில் சமண மதம் பரவி கொல்லாமை போதிக்கப் பட்டு கொண்டிருந்தது. சிவபக்தனாகிய கோச்செங்கணான் போர்களில் அதிக நாட்டமில்லாமல் ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் சோழ நாட்டை ஆக்கிரமிக்கும் பொருட்டு போர் தொடுத்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. மூன்று முறை சோழ நாட்டின் மீது போர் தொடுத்து  மூன்று முறையும் தோற்று சிறை பட்டான்.பொய்கையார் என்ற புலவரின் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதற்குப் பலனாக பொய்கையார் பாடியதே களவழி நாற்பது என்னும் பாடல் தொகுப்பு. அதற்குப் பின்னும் சேரன் அடாது செய்யவே சிறை பட்டு குடிக்க நீர் கிடைக்காமல் இறந்து போனான்.

எதிர்க்கும் அரசரின் குலத்தையே பூண்டோடு அழிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்த கோச்செங்கணான் மூன்று முறையும் பகை அரசனை மன்னித்து, அவன் நாட்டையே ஆளச் செய்த அவன் அசோகனுக்கு ஒப்பாவான்.காவிரிக் கரையோரம் எழுபது சிவ ஆலயங்களை எழுப்பி மதத்தை பரப்பியதுடன், மழை காலத்திலும் புயல் காலத்திலும் மக்கள் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தவன்.இவ் ஆலயங்களை  "யானை ஏறா மாடக் கோயில்" யானைகளாலும் தகர்க்க முடியாத மாடக் கோவில்கள் என்பார்கள். யானைப் படை கொண்ட சேரனை குதிரைப் படை கொண்டு வீழ்த்தியதாக கூறுவர்.

சோழனின் போர்க்களத்தைப் பாடும் களவழி நாற்பதிலிருந்து சில பாடல்கள்

"ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து."

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில் குருதி பெருகி வழிந்தோடியதாம். அக்குருதிச் சேற்றில் வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்களாம்.

"பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து"

பகவரை கொன்ற சோழனின் போர்க்களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்றனர் . வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.
 

Saturday, November 5, 2011

தொய்யிற் கோலம்



‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது சங்க காலத்தில் இருந்ததுண்டு. இது ஒரு நுண்ணிய கலைத்திறன். இதற்கு தொய்யிற் கோலம் என்று பெயர்.

சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

தொய்யில் பற்றி சங்க இலக்கியங்கள் முழுவதும் கொட்டி கிடக்கிறது அவற்றுள் சில 

(கலித்தொகை)
* விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும் 
* மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை 
   - மகிழ்ச்சி தருகின்ற இனிய மொழிபேசும் என் தோழியின் தொய்யில் சூழ்ந்த இள மார்பகங்கள்

தடமெங்கும் புனல்குடையும் தையலார் தொய்யில்நிறம் (திருத்தொண்டர் புராணம்)
- பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம்

-(கம்ப இராமாயணம்) 
"செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்புற
மெய் அராகம் அழிய , துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே"

செய்ய வாய் வெளுப்ப - சிவந்த வாய் நிறம் வெளுப்புற்று வெண்மை நிறம் அடையுமாறு
கண் சிவப்புற - கண்கள் சிவப்பு நிறம் பெற
மெய் அராகம் அழிய - உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிந்து போக 
துகில் நெக - ஆடை நெகிழ
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் - தொய்யில் எழுதிய பெரிய மார்பகங்களை உடைய மங்கையர் நீரில் முழ்குவதால் 

காதலரைக் சேர்கையில் மகளிர் வாய் வெளுத்து வெண்மை நிறம் அடைதலும் ,  விழி சிவத்தலும்.,  உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிதலும்,   ஆடை நெகிழ்தலும் இயல்பாதலின் இச்செய்கைகள் பொய்கையிலும் நிகழ்தலின, பொய்கையும் காதலர் போன்றாயிற்று.  

Sunday, October 16, 2011

வாள் வடக்கிலிருத்தல்


சங்க இலக்கியத்தில் நான் படித்து மிகவும் நெகிழ்வுற்ற ஒரு செய்தியை உங்களிடம் பகிர்கிறேன்.

சோழ மன்னன் கரிகால் பெருவளத்தனை  (கரிகாலனை) சேர மன்னன் சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டிய மன்னனும் சோழ நாட்டில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் முற்றுகை இட்டனர். மிக கடுமையான போரின் ஒரு சூழலில் சேரனும் கரிகாலனும் நேருக்கு நேர் நின்று போர் புரியும் நிலை.கரிகாலன் தன்னுடைய  வேலை மிக வேகமாக சேரமான் பெருஞ்சேரலாதன் மீது வீசுகிறான்.அந்த வேல் சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகு வழியாக கழன்று ஓடி விடுகிறது. முதுகில் காயம் பட்டவுடன் சேரலாதன் போரை நிறுத்தி விடுகிறான். மார்பில் காயம்பட்டால் அது வீர இலக்கணம் ஆனால் கரிகாலன் வேல் மார்போடு நில்லாமல் முதுகையும் ரணமாக்கிவிட்டதே. எப்பொழுது பகைவனின் வேல் தன முதுகை தொட்டதோ அப்பொழுதே தன மானத்திற்கு இழுக்கு என்று எண்ணி புறப்புண்ணோடு நாடு செல்லாமல் போர்க்களத்திலேயே வடக்கிலிருக்கிறான். வடக்கு நோக்கி அமர்ந்து தன வாளை தன எதிரே ஊன்றி வைத்துவிட்டு உண்ணாமல் உயிரை விடுவதுதான் வாள் வடக்கிலிருத்தல் எனப்படும். 

போரில் கரிகாலன் வெற்றி பெற்றாலும் கூட பெருஞ்சேரலாதன் முடிவு எல்லா மக்களுடைய  உள்ளத்தையும் உருக்கும் அவலமாக முடிந்தது. வழக்கமாக எழும்பும்  போர் வெற்றி ஒலி  எழும்பவில்லை, போர் முடிந்தவுடன் வீரர்கள் களிப்பில் உண்ணும் மதுவும் அருந்தவில்லை, வீரர்களின் உறவினர்கள் தேறல் அருந்தவில்லை, படையெடுத்த பகைவன் என்றும்  பாராமல் சோழ நாடெங்கும் ஒரே சோக மாயம்.

வென்றவனுக்கு வெற்றிப் புகழ் தோற்றவனுக்கு வீரப் புகழ். எல்லாருக்கும் சேரலாதன் மீது இரக்கம் உணடாக காரணம் என்ன? பகைவனை கொன்றது குற்றமா? இல்லை...
போரில் ஆயுதம் இல்லாதவனுக்கு ஆயுதம் கொடுத்து போரிட்டு கடைசியில் கொல்வதுதான் தமிழர் போர் மரபு. ஆனால் கரிகாலன் எடுத்த எடுப்பிலே திடீரென்று கொன்று விட்டான் அதுதான் அவன் செய்த பிழை. எந்த உள்நோக்கமும் இல்லாமல் இளமை வேகத்தில் கரிகாலன் சேரனை கொன்று விட்டான். மக்கள் மன்னனின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் குறைகூறவும் இடம் இல்லை. விளைவு பகை அரசனின் மீது இரக்க உணர்வு. இந்நிகழ்வை புறநானுற்று பாடல் ஒன்றில் வெண்ணி குயத்தியார் என்னும் புலவர் பாடியுள்ளார் 


"புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே"

முழுமதி தோன்றும் ஒரு நாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்  போல் வேந்தனொருவன் மார்பு குறித்தெறிந்த வேலால் உண்டாகிய புறப் புண்ணிற்கு நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும் பகற்போது முன்போலக் கழியாது

Tuesday, June 21, 2011

ஆதித்த கரிகாலன் கொலையும் அதன் மர்மங்களும்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது. 

இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும் எழும் ஒரு சந்தேகம் "ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?".இன்றும் விடை காணமுடியாத ஒரு கேள்வி.. சோழ வரலாற்றில் பல மர்மங்கள் நிறைந்த கொலை இது. இன்றும் இது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இதைப் பற்றிய விவாதங்கள் இணையத்தில் ஏராளம் காணலாம். ஆதித்தன் கொலை பற்றி நான் அறிந்தவற்றை இங்கு தொகுத்து தர முயன்றுள்ளேன்.   

பொன்னியின் செல்வன் வாசித்த பலரும் இதை ஒரு வரலாற்று நூலாகவே கருதுகின்றனர். இது கொஞ்சம் வரலாறும், அதிகம் கற்பனையும் கலந்த ஒரு புதினம். பூங்குழலி, ஊமை ராணி,நந்தினி மற்றும் சேந்தன் அமுதன் யாவரும்  கல்கியின் கற்பனைப் பாத்திரங்கள். சேந்தன் அமுதன் பினனால் உத்தம சோழனாக புதினத்தில் மாற்றப்பட்டிருப்பார்.அனால் உண்மையில் அவர் கண்டராதித்தரின் மகனாவார்.

இக்கொலை நடக்கும்போது இருந்த வரலாற்று சூழ்நிலைகளை கொஞ்சம் பார்க்கலாம்.
சுந்தர சோழன் ஆட்சி ஏறும்போது தெற்கில் பாண்டியர்களும் , வடக்கில் இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கியிருந்தனர். சோழ நாட்டின் எல்லை சுருங்கிப் போயிருந்தது. சுந்தர சோழனோ, உத்தம சோழனோ போர்களில் பங்கேற்கவில்லை. ராசா ராசன் இளைஞனாக இருந்தபடியால் அவனும் போர்களில் பங்கேற்கவில்லை. அரச குடும்பத்தை காணும்போது, தனது வீரத்தின் மூலம்  எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. அப்போது ஆதித்தனின் வயது 16. முதலில் ஆதித்தன் சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டி அவர்கள் மேலும் வராதபடி வலுவான படைகளை உருவாக்கினான். பிறகு அவனது கவனம் பண்டியர்களின்பால் திரும்பியது. பாண்டியர்கள் மீண்டும் தலையெடுக்க முடியாதபடி ஒழிக்க வேண்டும் எனக் கருதி, வீர பாண்டியன் மீது படைஎடுத்து அவன் தலையைக் கொய்து அரண்மனையில் நட்டு வைத்தான். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப் பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகள்  முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது  இவன் காலத்தில்தான். அப்பேர்பட்ட வீரன்.  

ஆதித்தன் எப்படி கொல்லப்பட்டான் என்பதே பெரிய மர்மம் தான். பொன்னியின் செல்வனில் சம்பூர்வர்  அரண்மனையில் வைத்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும். ஆனால் கல்வெட்டுகளிலோ /செப்பெடுகளிலோ நான் அறிந்தமட்டில் அதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எப்படியோ மிகப்பெரிய வீரன் சதியால் கொல்லப்பட்டான். 

இக்கொலைக்கு காரணம் மூன்று விதமாக நோக்கப்படுகிறது.
 1. பாண்டியன் ஆபத்துவிகள்
 2. உத்தம சோழன்
 3. சிற்றரசர்கள், ராசா ராசன்  மற்றும் குந்தவையின்  கூட்டுசதி

1. பாண்டியன் ஆபத்துவிகள்
வரலாறு முழுவதும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் தொடர்ந்து போர் நடந்து கொண்டுதான் இருந்தது. பழிவாங்குதலும்,பழிவாங்கப்படலும்  இடைவிடாத நிகழ்வு.சுந்தர சோழன் ஆட்சியில் வீரபாண்டியன்  இலங்கை வேந்தனுடன் சேர்ந்துகொண்டு சோழப் படையை தாக்குவதும் பின் காடுகளில் சென்று மறைவதுமாக இருந்தான். கடைசியாக நடந்த போரில் வீரபாண்டியன் படுகாயமடைந்து காடுகளில் புகுகிறான். இம்முறை எப்படியேனும் அவனைக் கொல்ல வேண்டும் என்று  ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழப் படையும் காடுகளில் துரத்திச் செல்கிறது. அங்கு நிராயுதபாணியாக இருந்த  வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்கிறான்(படுகாயமுற்று , நிராயுதபாணியாக இருந்த வீரபாண்டியனை போர் மரபுகளுக்கு மாறாக கொன்ற கோழை என்ற நாட்டுப் புற பாடல் ஒன்று பாண்டிய நாட்டில் ஒலித்தாகவும் கேள்வி).ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து,ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது. இக்கொலைக்கு பழிவாங்கும் விதமாக வீர பாண்டியனின் ஆபத்துவிகள்(மெய்க்காப்பாளர் படை) ரவிதாசன் தலைமையில் ஆதித்த கரிகாலனை  கொன்று இருக்கலாம். உடையார்குடி கல்வெட்டில்  ரவிதாசன் குழுவினர்தான் ஆதித்த கரிகாலனை கொன்றதாக அவர்களுக்கு விதித்த தண்டனையின் விபரம் சொல்லப்படுகிறது.

 2. உத்தம சோழன்
உத்தம சோழன் பின்புலம் பற்றி சிறிது காண்போம்.முதலாம் பராந்தகனின் பதினோரு மனைவிகளில் இரு மகன்கள் தான் கண்டராதித்தர் மற்றும் அரிஞ்சய சோழன். முதலாம் பராந்தகனின் மறைவிக்குப் பின் கண்டராதித்தர் பதவியேற்று ஆட்சி நடத்துகிறார். அவருக்கு புதல்வர்கள் இல்லாததால் தன் தம்பி அரிஞ்சய சோழனை பட்டது இளவரசனாக ஆக்குகிறார். ஆனால் கடைசி காலத்தில் கண்டராதித்தருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறான். அவன்தான் உத்தம சோழன். ஏற்கனவே அரிஞ்சயனை இளவரசனாக அறிவித்து விட்டதால் கண்டராதித்தர் மறைவுக்குப் பின் அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற கொஞ்ச நாட்களிலே அரிஞ்சய சோழன் இறந்து விடுகிறார். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய உத்தம சோழன் வயது காரணம் காட்டி தவிர்க்கப்பட்டு அதற்க்கு பதிலாக  அரிஞ்சய சோழன் மகனாகிய சுந்தர சோழன் பதவியேற்கிறார். இதுவரைக்கும் எந்த பிரச்சனையும்  எழவில்லை. ஆனால் சுந்தர சோழன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் கட்டியவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது.  

உத்தமன் அரச மரபுப்படி இளவரசு பதவி தனக்கே வரவேண்டும் என எண்ணுகிறான். இதனால் பாண்டியன் ஆபத்துவிகள் மற்றும் சிற்றரசர்களுடன் இணைந்து ஆதித்தனை கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சோழர்களைப் பற்றி பல நூல்கள் எழுதிய நீலகண்ட சாஸ்திரிகள் உத்தமனே கொலைக்கு காரணம் எனக் கூறுகிறார். 

3. சிற்றரசர்கள், ராசா ராசன்  மற்றும் குந்தவையின்  கூட்டுசதி
ஆதித்தன் வடக்கில்  இராட்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்தியுதடன், போரில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொன்னால் காஞ்சியில் ஒரு மாளிகையை அமைத்தான்.  ஆதித்தன் போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட தஞ்சைக்குக் அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக் கூறப்படுகிறது, இதனால்  சிற்றரசர்களின்  ஒரு பிரிவினர் அவன்மேல் அதிருப்தியடைந்தனர்.  சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற குந்தவை ஆதித்தனின் இந்த செயலை விரும்பவில்லை. குந்தவை தன் இளைய  தம்பி  ராசா ராசனின் மூலமே சோழப் பேரரசு உயர்ந்த நிலையை  எட்டும் என நம்பினாள். 
 
பின்வரும் கேள்விகளை நோக்கும்போது ராசா ராசனுக்கும் இக்கொலையில் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கையே..

1..உத்தம சோழன் பதவியேற்கும்போது  அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழன் மகனுக்குத் தான் இளவரசு பட்டம் கட்ட வேண்டும் அனால் எல்லாவற்றிகும் முரணாக ராசா ராசா சோழனுக்கு ஏன் பட்டம் சூட்ட வேண்டும்?

2. ஆட்சி பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தை பறித்துக் கொண்டு ஊரை விட்டு துரத்துகிறான் ராசா ராசன். ஆதித்தனின்  கொலைக்கு ஊரை விட்டு துரத்துவது தான் தண்டனையா? பிராமணர்கள் போரிடுவது, பிராமணர்களை கொல்லுவது எல்லாம் அப்போது நடந்த ஒன்று தான். ராசா ராசான் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டபோது அந்நாட்டில் பிராமணர்களைக் கொன்று குவித்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.ஆகையால் பிராமணர்களை கொல்லுவது ஆகாது எனக் கருதி ஊரை விட்டு துரத்தினார்கள் என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.
 
3. ராசா ராசன் தான் செய்யும் எல்லாவற்றையும் கல்வெட்டு செயும் பழக்கம் உள்ளவன்(தேவதாசிகளின் பெயர்கள் உள்பட). அப்படி இருக்க எந்த கல்வெட்டிலும் ஆதித்தனின் கொலைக்கான காரணத்தைப் பற்றியோ, கொலைகாரர்களை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.

4.ராசா ராசா சோழன் ஆட்சியில்  உத்தம சோழன் மகன் கோவில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தான். பின்னாளில் ஊழல் புகார் காரணமாக அவன் கொல்லப்பட்டு ராஜேந்திர சோழனுக்கு போட்டி இல்லாமல் செய்யப்பட்டதாவும் ஒரு தகவல் உண்டு .மேலும் உத்தமனின் ஆட்சி முழுவதும் வந்தியத் தேவன்(பன்னிரண்டு ஆண்டுகள்) சிறையில் இருக்கிறான். ராசா ராசனின் ஆட்சிக்கு பிறகுதான் அவன் விடுதலை செய்யப்படுகிறான்.

மிகவும் சுவாரசியதுமானதும், பல மர்மங்களும் நிறைந்த ஆதித்தன் கொலை இன்னும் ஆராயதக்கதே.
 

Monday, January 17, 2011

ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் !!??

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது.


ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக் காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள் சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.

முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது..

ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"

ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின் வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.

வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன் பறந்தான்.

அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம் கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும் ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ / இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.

ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை கொண்டிருக்கும்.

Wednesday, January 12, 2011

பொங்கல் வாழ்த்துகள் !!

காடு வளர்த்து கழனி திருத்தி
அணை எடுத்து புனல் தேக்கி
உழவு செய்து களை நீக்கி
பயிர் நடுத்து மானுடத்தின் பசிபோக்கி
கலை வளர்த்து கொடை கொடுத்து
அச்சம் தவிர்த்து வீரம் வார்த்து

இயற்கை துதித்து கால்நடை போற்றி
சுற்றம் அழைத்து சுகித்திருக்கும் ஓரினம் - அது
உலகத்தின் தொன்மையினம் தமிழராம்
அவர்தம் மொழி தமிழாம்
அவர்போற்றும் பண்டிகை பொங்கலாம்!!

பொங்கல் பண்டிகை என்பது திருவிழா என்பதையும் மீறி தமிழர்கள் என்ற இனத்தையும், அந்த இனப் பேசும் தொன்மையான மொழியையும், அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் உலகிற்கு உணர்த்தும் நன்நாள்.தமிழர்களின் சுய அடையாளத்தை உணர்த்தும் பொன்நாள்.அந்நாளை மகிழ்வுடன் நினைவு கூறுங்கள்!!

தோழர்கள் அனைவருக்குன் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

Monday, January 3, 2011

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை
நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை

குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம் 
கற்பு பற்றி கொண்டிருக்கும்  வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு.

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
 கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)

 கரண் - உடம்பு
 கொளற்குரி - பெறுவதற்குரிய
 கிழவன் - உரியவன்;தலைவன்   
 கொடைக்குரி - கொடுத்தற்குரிய
 கிழத்தி - உரியவள்;தலைவி

கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும், பெண்ணைப் பெற்றோர்  பெண்ணைக் கொடுப்பதுமாகும். 

கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...
கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும்  தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும்  கருதப் பெறுவர்.

ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும்  இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.


களவு:
"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
 பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
 ஆங்கநால் வகையினும் அடைந்த  சார்போடு
 மறையென மொழிதல் மறையோர் ஆறே"

காமப் புணர்ச்சியும் - மனம் ஒத்த இருவர் தாமே கூடி புணர்வது(பெற்றோர்கள் சம்மதமின்றி).இதை இயற்கைப் புணர்ச்சி எனவும் கூறுவர்.  

இடந்தலைப் படலும் - இயற்கைப் புணர்ச்சி கொண்ட தலைவன் தலைவி மீண்டும் அவ்விடத்தே சென்று கூடுதல் 

பாங்கோடு தழாலும் - (பாங்கன்:தோழன்) தோழனை தலைவியிடம் தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

தோழியிற் புணர்வுமென்று - தலைவியின் தோழி வழியே தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச்  சொல்லி கூடுதல்

..ஆக களவை நான்கு வகைபடுத்துகின்றனர்

"உளமலி காதல் களவு எனப்படுவது
 ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
 யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப"  (களவியல் நூற்பா -1)

கொடுப்போரும், பெறுவோரும்  இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.

ஞானக்கூத்தன் களவு பற்றி இவ்வாறு கூறுகிறார் 
"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"