Saturday, August 30, 2008

பண்டைய தமிழகத்தில் காமன் விழா


நேற்று தான் "தாம் தூம்" படம் பார்த்தேன் .இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்து.

அகம் பாதி முகம் பாதி 
நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காது அழகே !

உன் உள்ளத்தில் உண்டான காதல் எண்ணத்தால் உருவான உன் அழகான முகமும், காதலால் கொண்ட மோகத்தால் நீ என்னை தழுவும்போது உன் நகம் தீண்டும் இன்பமும் நான் இறந்தாலும் என் இறந்து போன செல்களிளின் நினைவுகளில் இருந்து நீங்காது. என்ன ஒரு ஆழமான காதல் வரிகள் !!

உன் குழலோடு விளையாடும் 
காற்றாக உருமாறி
முந்தானைப் படியேறவா 
மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் 
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா

இந்த பாடலை கேட்டவுடன் பண்டை காலத்தில் நடந்த காமன் விழா தான் நாபகம் வந்தது.அதை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று எண்ணினேன்.

காமன் விழா என்பது பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் பருவம் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பங்குனி மாதத்தின் இறுதியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில் வசந்த விழா என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்பட்டது .அந்நாள் தொடங்கி காவிரிப்பூம்  பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் சொல்லுகினங்க கடைச் சங்கக் கால அரசன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் காதல் திருவிழாவை காமன் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன .

பின்பனிக் காலம் என்பது ஒரு பருவ காலம். தமிழர் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவற்றுள் ஒன்று .

புதிய சிந்தனை, புதிய எதிர்பார்ப்புடன் புது வருடம் பிறக்கும் இளவேனிற்காலம் (சித்திரை,வைகாசி ), விழாகோலம் பூணும் முதுவேனிற்காலம் (ஆனி,ஆடி), வயல்வெளிகளுக்கு மேகத்தாய் பாலூட்டும் கார்காலம் (ஆவணி, புரட்டாசி),ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் பனிஒளியே என பாடப்பெறும் கூதிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை) , குளிர் கூடி மயக்கும் மாலை பொழுதை அளிக்கும் முன்பனிக் காலம் (மார்கழி, தை), புல்வெளிகளில் வெள்ளிப் பனி படியும் பின்பனிக் காலம் (மாசி,பங்குனி).

மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்ததாக பெருங்கதை என்ற நூல் கூறுகிறது.காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து நீராடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோல பொருள் தேடி வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம்

கலித்தொகையில் உள்ள ஒரு பாடலை பாருங்கள் ..
”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு”
தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்.

இதிலிருந்து என்ன தெரிய வருவது என்றால் காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்!

Wednesday, August 27, 2008

குறுந்தொகை பாடல்கள் 1- 3

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை உண்டு. திருக்குறளுக்கு உரை எழுதிய சாலமன் பாப்பையா, கலைநர் போல குறுந்தொகை பாடல்களுக்கு நான் உரை எழுத வேண்டும் என்று. பெரிய ஆசை தான்.... ஆனால் விட்டு விட முடியவில்லை.ஆதலால் எழுத ஆரம்பித்து விட்டேன் ...பார்க்கலாம் எவ்வளவு தொலைவுக்கு எழுத முடியும் என்று ..பெரும்பாலும் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையரின் விளக்க உரையை தான் எடுத்தாண்டுள்ளேன் .

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. எட்டுத்தொகை நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த மனிதர்களால் பாடப்பெற்றது.பின்னாளில் இது தொகுக்கப்பெற்று எட்டுத்தொகை நூல்கள் என்று அழைக்கப்பட்டன.
1. நற்றிணை(399)
2. குறுந்தொகை(400)
3. ஐங்குறுநூறு(498)
4. பதிற்றுப்பத்து(80) 
5. பரிபாடல் (22)
6. கலித்தொகை (150)
7. அகநானூறு(400)
8. புறநானூறு (398)

குறுந்தொகை பாடல்கள் ஒவ்வொன்றும் நான்கு முதல் எட்டு அடிகளை கொண்டது.
மொத்தம் 401 பாடல்கள் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துப்பாடல்
தாமரை புரையுங் காமர் சேவடிப் 
பவழத் தன்ன மேனித் திகழொளிக் 
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் 
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் 
சேவலங் கொடியோன் காப்ப 
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.

காமர் - அழகு
சேவடி - சிவந்த அடி, சிவந்த பாதங்கள்
புரை - உள்ளகத்தே 
பவழம் - செக்கச் சிவந்த ஓர் அணிகலன்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் - குன்றி மணி போல் சிவந்த உடுக்கை
உடுக்கைக் - உடுத்தும் துணி
ஏமவைகல் - பாதுகாப்பான நிலை
அஞ்சுடர் - ஞானம் அல்லது அறிவு சுடர்


விளக்கம் தாமரை மலர்களை ஒத்த அழகான சிவந்த திருவடிகள் கொண்டவனும் , பவழம் போல சிவந்த மேனியை கொண்டவனும்,குன்றி மணி போல் சிவந்த துணியை உடுத்தியவனும், சுடர் விட்டு ஒளிரக்கூடிய  சிவந்த நீண்ட வேலைக் கொண்டவனும் , சேவற்கொடியைக் கொண்டவானுமகிய  முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது.
இங்கே தாமரை சிவப்பு ,பவழம் சிவப்பு,குன்றி மணி சிவப்பு, உடுத்திய துணியும் சிவப்பு, நீண்ட வேலும் சிவப்பு, அவனது செவற்கொடியும் சிவப்பு. எல்லாம் சிவப்பு மயம் அதுதான் தமிழ் கடவுள் முருகனின் நிறம்.

1. குறிஞ்சி - தோழி கூற்று 
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த 
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் 
கழல்தொடிச் சேஎய் குன்றம் 
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம் பட = இரத்தத்தாற் போர்க்களம் செந்நிறமாகும் படி 
கொன்று அவுணர் தேய்த்த = அவுணர் - அசுரர், அசுரர்களைக் கொன்று தேய்த்த
செங்கோல் அம்பின் = இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும்,
செங்கோட்டி யானை = சிவந்த கொம்பை உடைய யானையையும், 
கழல் தொடி = கழல் - ஓரணிகலன்;தொடி - வளையல், வளையலணிந்த 
சேஎய் குன்றம் = முருகக் கடவுளுக்குரிய மலையானது, 
குருதி பூவின் குலை காந்தட்டு - செவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளையுடையது. 

விளக்கம்
தலைவன் தான் தலைவியின்பால் கொண்ட அன்பின் பொருட்டு அவளுக்கு செங்காந்தல் மலர்களை பரிசளிக்கிறான்.அப்போது தோழி தலைவனை நோக்கி , அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள்.

2. குறிஞ்சி - தலைவன் கூற்று 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
காமம் செப்பாது கண்டது மொழிமோ 
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்குதேர் = கொங்கு - தேன்; தேர் - தெரிவது
அஞ்சிறைத் தும்பி = அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே; அம் சிறை என்றால் அழகிய சிறகு எனவும் கொள்ளலாம் . சிறை = சிறகு, சிறகர்; 
காமம் செப்பாது - யான் விரும்பியதையே கூறாமல் 
கண்டது மொழிமோ - நீ, கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக! 
கெழீஇய நட்பின் - எழுமையும் (ஏழுகின்ற பிறவி தோறும்)என்னோடு 
பயிலியது = நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
பயிலியது கெழீஇய நட்பின் - எழு பிறவியுளும் என்னுடன் நெருங்கிய நட்பையும் உடையவளாகிய 
மயில் இயல் - மயில் போன்ற மென்மையும் 
செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய 
அரிவை கூந்தலின் - இப்பெண்ணின் கூந்தலைப் போல ;அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது
நறியவும் - நறுமணம் உடைய பூக்களும் 
உளவோ - உள்ளனவோ? நீ அறியும் பூவே - நீ அறியும் மலர்களுள் 
(அரிவை = பெண்ணின் வயதை குறிப்பது அரிவை பெண்ணின் பருவங்கள் ஏழு அவற்றில் ஒன்று தான் அரிவை ... பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். ஒவ்வொரு பருவமும் மூன்று ஆண்டுகள்.)

விளக்கம்
ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்டு திரியும் அழகான சிறகுகளை உடைய வண்டே!. நீ என் கேள்விக்கு என் விருப்பத்திற்கிணங்க விடை கூறாமல் நடு நிலையாக நின்று பதில் சொல். என்னோடு நெருங்கிய நட்புடையவளும், மயில் போன்ற மெல்லிய தன்மையுடையவளும், நெருங்கிய அழகிய பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இப்படி மணமுள்ளதாக இருந்தால் சொல் என்கிறான்.

3. குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார். நிலத்தினும் பெரிது - பூமியைக் காட்டிலும் அகலம் உடையது, 
வானினும் உயர்ந்தன்று - ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது, 
நீரினும் அருமை அளவின்று - கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது. 
சாரல் - மலைப்பக்கத்திலுள்ள, 
கரு கோல் - கரியகொம்புகளை உடைய , 
குறிஞ்சி பூ கொண்டு - குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு 
பெரு தேன் இழைக்கும் - பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, 
நாடனொடு நட்பு - நாட்டையுடைய தலைவனோடு யான் செய்த நட்பானது,

விளக்கம்
குறிஞ்சி மரத்தின்மலர்களைக் கொண்டு தேனடை செய்யும் நாட்டை கொண்ட தலைவனுடன் நான் கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது


Saturday, August 23, 2008

குசேலன் : பெயர்க்காரணம்



திருமாலின் அவதராங்களில் ஒன்றான அவதாரம் தான் கிருஷ்ண (கண்ணன் ) அவதாரம்.

ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்தபோது அவனது இளமைக்கால தோழன் தான் குசேலன் . பின்னர் கண்ணன் துவாரகையின் அரசனான பிறகு குசேலன் தனது வறுமை நீங்க கண்ணனிடம் உதவி கோருகிறான்.கண்ணனின் வேண்டு கோளுக்கிணங்க மகாலட்சுமி குசேலனைக் கடைக்கண் கொண்டு பார்த்ததால் குசேலன் தனது வறுமை நீங்கி செல்வத்துக்கு அதிபதியான குபேரனானான் என்ற ஒரு புராண கதை உண்டு .

(துவாரகை : இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகும்)

இராவணனின் தமையன் குபேரன் என்ற கதையும் உண்டு. குபேரன் அவனது தந்தையான மாலியவந்தனிடமிருந்து இலங்கையைக் பறித்துக்கொண்டான்.மாலியவந்தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து இராவணனைப் பெற்றான். இராவணன் இலங்கையிலிருந்து குபேரனைத் துரத்தினான் என்கின்றன நம் தொன்மங்கள்.


குசேலனை பற்றி தேடி கொண்டிருக்கும்போது துவாரகை பற்றி சில சுவாரஸ்யமான தவல்கள் கிடைத்தன ..
மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் என்ற அறிஞர். எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ? அவர் பெயர் முரிஞ்சியூர் முடி நாகராயர் .

Friday, August 22, 2008

இந்தி எதிர்ப்பும் / தாய்மொழிவழிக் கல்வியும்


இந்தி மொழி தெரிய விட்டால் நான் இந்தியன் கிடையாதா ??
தேசிய மொழி போல இன்னும் பல தேசிய அடையாளங்கள் உள்ளன ...
தேசிய பறவை,தேசிய விலங்கு ...

தேசிய விலங்கு புலி என்பதால் நீ புலி வளர்த்தால் தான் இந்தியன் என்று நான் சொன்னால் நீ ஏற்று கொள்வாயா ?

மொழி வரியாக பிரிக்கபட்டதுதான் இந்திய மாநிலங்கள்.அப்படியிருக்க இந்தி தெரியாதவன் இந்தியனா என்று கேட்டால் அவன் இந்தியனே அல்ல என்று தான் சொல்ல வேண்டும். அவனுக்கு இந்தியாவைப் பற்றிய அறிவு சுத்தமாய் இல்லை என்று தான் பொருள்.
இந்தியை படிக்க விரும்புவோர் தாராளமாக படிக்கலாம்.இந்தியை ஒரு விருப்பபாடமாக பள்ளிகளில் கற்பிக்கலாம்.ஆனால் இந்தி திணிப்பு என்பது கூடாது.இந்தி படித்தால் தான் மத்திய அரசின் வேலை கிடைக்கும் என்பது கூடாது.இந்தியில் தான் மத்திய அரசு அலுவலர்கள் கையெழுத்து போடவேண்டும் என்ற மொழிவெறி சட்டம் கூடாது.இந்தி திணிப்பை தான் தமிழர்கள் எதிர்க்கிறோம் ... இந்தி கற்பதை அல்ல ...

முன்னேற விரும்புவோர் இந்தி மட்டுமல்ல,வேற எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம்.அப்படி கற்பது அவர்களின் விருப்பமாக இருக்கவேண்டுமே ஒழிய அரசு திணித்தல் கூடாது. நீங்கள் கணினி பாடம் படிக்கும் போது உங்களது பாட பிரிவில் c,c++ தான் உள்ளது என்றால் நீங்கள் விரைவாக வேலை கிடைக்க java படிப்பது போல்,உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை. நீங்கள் வடமாநிலத்தில் செல்ல வேண்டி இருந்தால் இந்தி கற்றுக்கொள்ளலாம். அதுபோல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள முயலலாம். அது அவர்களின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும் திணிப்பு கூடாது.

இந்தி தெரியாததால் தான் தமிழர்கள் முன்னேற வில்லை என்று சொல்வது தவறாகும்.இன்றைய தினத்தில் தமிழ்நாடும்,பெங்களூரும்,ஐதராபாத்தும் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களுக்கும் வேலை தரும் பகுதிகள்.தொழில் முன்னேறி இருப்பது தென்னிந்தியாவில் தான்.பீகாரும்,உபியும்,ராஜஸ்தானும் இந்தி தெரிந்தவர்கள் நிறைந்த பகுதி தான்.ஏன் அங்கு உள்ளவர்களின் வாழ்கை தரம் மாற்ற மாநிலத்தவரை விட குறைவாக உள்ளது ??

தாய்மொழிவழிக் கல்வி
அறிவு வளர்ச்சிக்கு தரமான தாய்மொழிவழிக் கல்வி அவசியமானது .தாய்மொழி என்பது சிந்தனை மொழியாகும்.பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்க கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.பிறமொழி வழிக்கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் கற்பதே சிறந்தது.

இன்று இஸ்ரேல் , ஜப்பான் , கொரியா நாடுகளை எடுத்து கொள்ளுங்கள். இவர்களது வளர்ச்சி எல்லாம் அவர்களது தாய் மொழி கலவியாலே உருவாக்கப்பட்டது.இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவானது இஸ்ரேல். இரண்டாம் உலகப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் இவர்களே.இன்றைக்கு அவர்களின் முன்னேற்றம் யாராலும் தடுக்கமுடியாதபடி அசுர வளர்ச்சியாக உள்ளது. மிக குறுகிய காலத்தில் அவர்கள் அடைந்த வளர்ச்சியின் காரணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். வழக்கற்று அழியும் நிலையில் இருந்த அவர்களின் தாய்மொழியான எபிரேயத்தை மீட்டெடுத்து, செப்பம் செய்து அம்மொழியிலேயே உலகின் அனைத்து அறிவையும் கொணரச்செய்து அம்மொழிவழியே அந்த யூத மக்கள் கல்வி கற்று நாட்டையும் மக்களையும் முன்னேற்றமடையச் செய்துள்ளனர். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு "முதற் கோணல் முற்றிலும் கோணல்".
தாய்மொழி என்பது ஒரு தாளில் வரியப்படும் முதல் நேர்க்கோடு போன்றது. அந்த நேர்க்கோட்டை ஒட்டி எத்தனை நேர்க்கோடு வேண்டுமானாலும் இணையாகப் போட்டுக்கொள்ளலாம். அதாவது தேவைப்படின் வேறு எந்த அயல் மொழியையும் கற்கலாம். முதற்கோடே முற்றுங்கோணலாக இருப்பின் அடுத்து வரும் கோடுகள் எவ்வாறு சரியாக அமையமுடியும்? ஆகையால் தாய் மொழி கற்பது மிக அவசியம் அதுவும் கசடற கற்க வேண்டும் .

ஐ.நா. சபை தாய்மொழிவழிக் கல்வியை அங்கீகரித்து அதை அடிப்படை உரிமையக்கியிருக்கிறது. இதிலிருந்தாவது தெரிய வேண்டாம் தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை.

Thursday, August 21, 2008

இட ஒதுக்கீடு தேவையா ? ?

இட ஒதுக்கீடு ஏன் ?

இரண்டாயிரம் ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. எனவே இந்த பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக இவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை மேலோட்டமாக பார்த்தால் இரண்டாயிரம் ஆண்டு காலமாக நடந்த கொடுமைகளின் ஆழம் தெரியாது .உலகில் வேறு எங்குமே நடந்திடாத கொடுமைகள் மதத்தின் பெயரால் இங்குதான் நடத்தப்பட்டு வந்தது.நிற்க உரிமை இல்லை , நடக்க உரிமை இல்லை,கல்வி கற்க உரிமை இல்லை, பெண்கள் ரவிக்கை அணிய உரிமை இல்லை.,,, இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.மொத்தத்தில் மனிதன் இங்கு மனிதனாக நடத்தப்படவில்லை.மலம் தின்னும் மிருகத்தை விட கேவலமாக நடத்தப்பட்டான்.

இட ஒதுக்கீடு தேவையா ? ?

இடஒதுக்கீட்டுக் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.உயர்ந்த சாதி காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அந்த 5% மக்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து இருப்பார்கள்.ஐரோப்பிய வரலாற்றை எடுத்து பார்த்தால் எல்லா விதமான சமூக மாற்றங்களும் ரத்தத்தின் மேலும், எலும்புக்கூடுகளின் மேலும்தான் நடந்துள்ளது என்று தெரியும். ஆனால் இந்தியாவில் அது நடக்க வில்லை.அப்படி நடந்து இருந்தால் உரிமைகளை கேட்டு பெற்று இருக்க மாட்டார்கள் அவர்களே எடுத்து இருப்பார்கள்.இன்னும் சாக்கடைகளை தாழ்ந்த சாதி காரனே அள்ளி கொண்டு இருக்க மாட்டன். எந்த உயர்ந்த சாதி காரணவது சாக்கடை அள்ளி பார்த்தது உண்டா ??

இடஒதுக்கீது என்பது சமூகத்தில் பின்தள்ளப்பட்டவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்குவது என்பது மட்டுமல்ல; அது ஒரு சாதியச் சமூகத்தின் சமூக நீதியாகக் கருதத்தக்கது. சாதியச் சமூகத்தில் வறுமை உயர்சாதிக்காரர்களிடம் வெளிப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமே. ஆனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் ஏழ்மைக்குக் காரணம் சாதியச் சமூகம் கட்டமைத்த சமுதாய ஏற்றத்தாழ்வாகும்.இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல.

எதன் பெயரால் ஒடுக்கப்பட்டோமோ அதன் பெயரால் எழுச்சி பெறுவதே சரியான தீர்வு இன்றைய தேதியிலும் வெகு குறைந்த என்னிக்கையிலிருந்தாலும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?. மீடியா முதல் அரசு உயர் பொறுப்புகள் என அனைத்தும் யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? போராடி பெற்ற இட ஒதுக்கீட்டையும் நிறைவேற்றாமல் இருப்பது யார்? மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வுக்கு சமஸ்கிருதம் ஏன் கட்டாயமாக்கப்பட்டது?  

ஒரே மாதிரி 50 மார்க் மட்டுமே எடுக்கும் 4 வித சமூகங்களும் ஒன்றாகவே கருத்தப்பட வேண்டுமென்பது ஏற்புடையதா ? பள்ளிசெல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைசெய்தால் தான் உணவு என்று இருப்பவன் எடுக்கும் 50 மதிப்பெண்ணும் படிப்பைத் தவிர வேறெதும் செய்யத் தேவையில்லாதவர்கள் எடுக்கும் 50 மதிப்பெண்களும் ஒன்றா ?  

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்பது நல்ல சிந்தனைதான்... அதற்கு முன்பு இதுவரை எல்லோரும் எல்லாமும் பெற்று சமநிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்...போட்டிக்கு அவர்களை தயார்படுத்தவேண்டும். பலமில்லாதவர்கள் தங்களுடன் போட்டி போடவேண்டும் மென்பது சுயநலப் பார்வையும் தன்சமூகம் சேர்ந்த பார்வையே அன்றி வேறுபாடுகளை களையவேண்டும் ஒரு குடும்பத்தில் 500 மிலி பால் வாங்குகிறார்கள். ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு குழந்தை நோய் வாய்பட்டிருக்கிறது என்றால் ஆரோக்கியமான குழந்தைக்கு 200 மிலி, நோயாளிக்கு 300ம் வழங்குவது சரியா ??இருவருக்கும் 250 மிலி வழங்குவது சரியா??
நீங்கள் இருவருக்கும் 250 மிலி வழங்கச்சொல்கிறீர்கள். ஏன் சாமி இப்படி கொடுமை செய்கிறீர்கள் வீரியமுள்ள விதை பாலைவனத்தில் விதைக்கப்பட்டால் அதற்கு ஆற்றோரம் விதைக்கப்பட்ட விதையை விட அதிகம் தண்ணீர் அளிக்கப்பட வேண்டுமல்லவா.

மண்டல்குழுவை அமல்செய்து பாராளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை
‘‘தகுதி, தரம் என்பது என்ன? நான்கு அறைக்குள் படித்து மதிப்பெண் வாங்குவதுதானா தரம்? அதைவிட நாட்டின் நிலையறிதல்; தன் மக்களின் நிலையறிய அவர்களோடு கலத்தல்; அவர்களின் வாழ்நிலையை, தேவையைப் புரிதல்; இவைதான் தகுதி, தரத்துக்கான அடையாளம். இவற்றில் முன்னேறிய உயர்சாதிகளைவிடப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் சிறப்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர்’’ என்றார். மேலும், உயர்சாதிக்காரர்களே தங்களைத் தகுதியானவர்கள் எனக் கட்டமைத்துக்கொண்டு ஆண்டுகொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டினார். ‘‘பொதுத்துறை நிர்வாகம் அனைத்தையும் ‘தகுதி’யுடைய உயர் வகுப்பினர்தான் நிர்வகித்துக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஆண்டொன்றுக்கு ரூ.2000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது ஏன்? இதற்கு மாறாகத் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், நீண்ட நாட்களாகவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அங்கே நிர்வாகமும் சமூக முன்னேற்றமும் பீஹாரை விடச் சிறந்து விளங்குகின்றன.’’


சில ஆயிரம் வருடங்களாக பிறப்பின் காரணமாக ஒதுக்கப்பட்ட மக்களின் நேர்மையான முன்னேற்றத்திற்கு, அவர்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்காவது இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய வருணாசிரம ஒடுக்கு முறைகளும் மனுதர்ம பாசிசமும் அதன் விளைவாய்த் தோற்றுவிக்கப்பட்ட சமூமப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் தீர இட ஒதுக்கீடு என்பது சரியான தீர்வு தான்.

ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் வரையில் இட ஒதுக்கீடு அவசியமே ..


Sunday, August 10, 2008

சில பாடல்களும் அதன் விளக்கமும்


 
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல் .. ( படம் : சிவாஜி ) 
ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.  
மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும். 
 
விளக்கம்  
பூ போன்ற பெண்ணே !! நீ இரவிலே பூத்து பகலிலே குவியும் அல்லிகொடி !! 
உன் புன்னகையோ காட்டு மல்லி !! ( கட்டு மல்லி மலர்ந்து காடு முழுவதும் வாசனை பரப்புவது போல உன் புன்னகை அனைவரையும் புன்னகை கொள்ள செய்கும் )

ஆம்பல் - அல்லிக்கொடி ( ஓர் இசைக்குழல் என்றும் கொள்ளலாம் )  
இருவகை ஆம்பல் உண்டு!  
 அரக்காம்பல்------செவ்வல்லி  
 வெள்ளாம்பல்----வெள்ளல்லி!  
 
மலர்களை ஏன் பெண்கள் சூடுகிறார்கள் ?  
 
 மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.   அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.
 
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்  ( படம் : வேட்டையாடு விளையாடு  )
 
 பதாகை - கொடி ( ஒரு அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும்.)

 என் மனமாகியிய பதாகையில் (கொடியில்) வைத்து நான் தாங்கிய உன் முகம் என்று பொருள் படும்.  
 இங்கு அவளை ஒரு கொடியாகவும் ...  
 அவள் இதயத்தில் உள்ள அவனது முகத்தினை ..கொடியில் உள்ள சின்னமாகவும் கொள்ளவும் .  
 
கலாப காதல்  
ஆண் மயில் மோக மிகுதியில் தோகை விரித்து ஆடும்போது அதன் உயிர்ச்சக்தி தரையில் விழும்.  
பெண் மயில் அதனைக் கொத்தி உண்டு கருத்தரிக்கும்.  
 
தொடாமலேயே காதல் கொண்டு இருப்பதற்கு பெயர் கலாப காதல்.  
 
 
அற்றைத் திங்கள் அந்நிலவில்,நெற்றித்தரள நீர்வடிய,கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?
 
அற்றைத் திங்கள் = அந்த மாதம்; 
நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய ( தரளம்=முத்து )
கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே? (பொய்கை=குளம் )
 

அன்று ஒருநாள் நிலவில் நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?  

 
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
 
முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு ( மல்லிகை பூவை குறிக்கும் )
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள்
 
யாயும் யாயும் யார் ஆகியரோ நெஞ்சு நேர்ந்தது என்ன? யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்தது என்ன?
யாய்=தாய்;
உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள்.
நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை
இருந்தும் உனக்கும் எனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் ..

நந்தா படத்தில் ஒரு பாடலில் "வாவிக் கரையோரம்" என்று வரும்

வாவி என்பது ஏரி குளம் போல் ஒரு வகையான நீர்த் தேக்கம்மீன்கள் வாழுமிடம்.

மட்டு வாவி . ( மீன்கள் பாடும் இசையை கேட்கக் கூடிய உலகின் அதிசய சூழல் நிறைந்த வாவி).

சங்கமம் படத்தில் வராக நதிக்கரையோரம் என்று ஒரு வரி வரும் 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் பெரியகுளம். ஊருக்கு நடுவில ஒரு அழகான ஆறு ஓடுகிறது. பெயர் வராக நதி. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைல உருவாகி வைகை ஆற்றில் கலக்கிறது.கவிஞர் வைரமுத்து பெரியகுளத்துக்கு 4 கி,மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பாடல்களில் வராக நதிஇடம் பெற்றிருக்கிறது. வராக நதி வடுகபட்டி வழியாகத் தான் சென்று வைகையைச் சேருகிறது.

**************************************************************************************************

இது ஒரு சங்க பாடல் . இதை கண்ணதாசன் சினிமாவில் இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி உள்ளார் ... தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்.... 


அத்திக்காய் காய் காய் .. ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே .. என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் = அத்தி + காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக[காதலன் நிற்கும் பக்கம்] + சுடு 

ஆலங்காய் = ஆல + காய் = விசம்போல் சுடு 

இத்திக்காய் = இத்தி + காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்] + சுடு


ஏ நிலாவே.....என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்த திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். வெறுமனே காய்ந்துவிடாதே. நீயும் காயும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும் இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ என்னிடம் வந்து இந்த திக்கில் காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம் அறிய்மாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?


ன்னிக்காய் ஆசைக்காய் .... காதல் கொண்ட பாவைக்காய் ..அங்கே காய் அவரைக்காய் ......மங்கை எந்தன் கோவைக்காய்


கன்னிக்காய் = கன்னிக்காக

ஆசைக்காய் = ஆசைக்காக

பாவைக்காய் = பெண்ணுக்காய் ( பெண்ணுக்காக ) 

அவரைக்காய் = அவரை + காய் = தலைவனை + காய்

கோவைக்காய் = கோவை (கோ = அரசன்) + காய் = அரசனை + காய்

நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்த கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதான் காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே. 

என் மீது இரக்கப்படு, நான் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய். என்காதலரான அவரைக் காய் . இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் அரசனை காய்

இது ஆண்பாடும் வரிகள


மாதுளங்காய் ஆனாலும் ...என் உளங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே ...என்னுயிரும் நீயல்லவோ


மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்) 

உளங்காய் = உள்ளம் + காய்

அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா? என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே ..


இரவுக்காய் உறவுக்காய் .....ஏங்கும் இந்த ஏழைக்காய் ..நீயும் காய் நிதமும் காய் .....நேரில் நிற்கும் இவளைக்காய் மாலைப்பொழுதுக்கும் / இரவுக்கும் அதன் கூடவே அது கொண்டு வரும் உறவுக்கும் ஏங்கும் இந்த ஏழைக்காக நீ தினமும் காய்வாயாக. இரவுக்காய்.... இரவில்லையேல் இன்பமே இல்லை.இரவு காதலுக்குச் சொந்தம்.... இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஏறும்.... அந்த இரவுக்காய்..அதனோடு உறவும் வேண்டுமே.... ஏழைக்காய்.... யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. காதலியிடம் கை ஏந்தும் இந்த ஏழைக்காக நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.... அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே நிக்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான் 


உருவங்காய் ஆனாலும் .......பருவங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே .......என்னுயிரும் நீயல்லவோ

என்னுடைய உருவம்தான் நான் முரண்டுபண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து கிடக்கிறது .என்னை நீ காயாதே வெண்ணிலவே ..நீ என் உயிர் அல்லவா?