Friday, August 22, 2008

இந்தி எதிர்ப்பும் / தாய்மொழிவழிக் கல்வியும்


இந்தி மொழி தெரிய விட்டால் நான் இந்தியன் கிடையாதா ??
தேசிய மொழி போல இன்னும் பல தேசிய அடையாளங்கள் உள்ளன ...
தேசிய பறவை,தேசிய விலங்கு ...

தேசிய விலங்கு புலி என்பதால் நீ புலி வளர்த்தால் தான் இந்தியன் என்று நான் சொன்னால் நீ ஏற்று கொள்வாயா ?

மொழி வரியாக பிரிக்கபட்டதுதான் இந்திய மாநிலங்கள்.அப்படியிருக்க இந்தி தெரியாதவன் இந்தியனா என்று கேட்டால் அவன் இந்தியனே அல்ல என்று தான் சொல்ல வேண்டும். அவனுக்கு இந்தியாவைப் பற்றிய அறிவு சுத்தமாய் இல்லை என்று தான் பொருள்.
இந்தியை படிக்க விரும்புவோர் தாராளமாக படிக்கலாம்.இந்தியை ஒரு விருப்பபாடமாக பள்ளிகளில் கற்பிக்கலாம்.ஆனால் இந்தி திணிப்பு என்பது கூடாது.இந்தி படித்தால் தான் மத்திய அரசின் வேலை கிடைக்கும் என்பது கூடாது.இந்தியில் தான் மத்திய அரசு அலுவலர்கள் கையெழுத்து போடவேண்டும் என்ற மொழிவெறி சட்டம் கூடாது.இந்தி திணிப்பை தான் தமிழர்கள் எதிர்க்கிறோம் ... இந்தி கற்பதை அல்ல ...

முன்னேற விரும்புவோர் இந்தி மட்டுமல்ல,வேற எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம்.அப்படி கற்பது அவர்களின் விருப்பமாக இருக்கவேண்டுமே ஒழிய அரசு திணித்தல் கூடாது. நீங்கள் கணினி பாடம் படிக்கும் போது உங்களது பாட பிரிவில் c,c++ தான் உள்ளது என்றால் நீங்கள் விரைவாக வேலை கிடைக்க java படிப்பது போல்,உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை. நீங்கள் வடமாநிலத்தில் செல்ல வேண்டி இருந்தால் இந்தி கற்றுக்கொள்ளலாம். அதுபோல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள முயலலாம். அது அவர்களின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும் திணிப்பு கூடாது.

இந்தி தெரியாததால் தான் தமிழர்கள் முன்னேற வில்லை என்று சொல்வது தவறாகும்.இன்றைய தினத்தில் தமிழ்நாடும்,பெங்களூரும்,ஐதராபாத்தும் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களுக்கும் வேலை தரும் பகுதிகள்.தொழில் முன்னேறி இருப்பது தென்னிந்தியாவில் தான்.பீகாரும்,உபியும்,ராஜஸ்தானும் இந்தி தெரிந்தவர்கள் நிறைந்த பகுதி தான்.ஏன் அங்கு உள்ளவர்களின் வாழ்கை தரம் மாற்ற மாநிலத்தவரை விட குறைவாக உள்ளது ??

தாய்மொழிவழிக் கல்வி
அறிவு வளர்ச்சிக்கு தரமான தாய்மொழிவழிக் கல்வி அவசியமானது .தாய்மொழி என்பது சிந்தனை மொழியாகும்.பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்க கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.பிறமொழி வழிக்கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் கற்பதே சிறந்தது.

இன்று இஸ்ரேல் , ஜப்பான் , கொரியா நாடுகளை எடுத்து கொள்ளுங்கள். இவர்களது வளர்ச்சி எல்லாம் அவர்களது தாய் மொழி கலவியாலே உருவாக்கப்பட்டது.இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவானது இஸ்ரேல். இரண்டாம் உலகப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் இவர்களே.இன்றைக்கு அவர்களின் முன்னேற்றம் யாராலும் தடுக்கமுடியாதபடி அசுர வளர்ச்சியாக உள்ளது. மிக குறுகிய காலத்தில் அவர்கள் அடைந்த வளர்ச்சியின் காரணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். வழக்கற்று அழியும் நிலையில் இருந்த அவர்களின் தாய்மொழியான எபிரேயத்தை மீட்டெடுத்து, செப்பம் செய்து அம்மொழியிலேயே உலகின் அனைத்து அறிவையும் கொணரச்செய்து அம்மொழிவழியே அந்த யூத மக்கள் கல்வி கற்று நாட்டையும் மக்களையும் முன்னேற்றமடையச் செய்துள்ளனர். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு "முதற் கோணல் முற்றிலும் கோணல்".
தாய்மொழி என்பது ஒரு தாளில் வரியப்படும் முதல் நேர்க்கோடு போன்றது. அந்த நேர்க்கோட்டை ஒட்டி எத்தனை நேர்க்கோடு வேண்டுமானாலும் இணையாகப் போட்டுக்கொள்ளலாம். அதாவது தேவைப்படின் வேறு எந்த அயல் மொழியையும் கற்கலாம். முதற்கோடே முற்றுங்கோணலாக இருப்பின் அடுத்து வரும் கோடுகள் எவ்வாறு சரியாக அமையமுடியும்? ஆகையால் தாய் மொழி கற்பது மிக அவசியம் அதுவும் கசடற கற்க வேண்டும் .

ஐ.நா. சபை தாய்மொழிவழிக் கல்வியை அங்கீகரித்து அதை அடிப்படை உரிமையக்கியிருக்கிறது. இதிலிருந்தாவது தெரிய வேண்டாம் தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை.

No comments: