Tuesday, December 28, 2010

வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மையா?? மென்மையா??

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி மருதனார் என்ற சங்க காலப் புலவர் புறநானுற்று பாடல் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார் 
 
"துடியன் பாணன் பறையன் கடம்பன் 
இந்நான்கல்லது குடியுமிலவே” 
 
துடியன்  - துடி என்னும் தோல் கருவியை இசைக்கும் குடியினர்
பாணர்   - சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று  கலைகளையும்  செய்யவல்ல மற்றும் அவற்றையே தொழிலாக  கொண்ட ஒரு குடியினர்
பறையன் - கிளர்ந்தெழும் உடல் அசைவுகளை உருவாக்கும் இசையை இசைக்கும் மற்றும் பறை மூலம் தகவல் சொல்லும் ஒரு குடியினர்
கடம்பன் - கடம்பு மரத்தைச் சின்னமாகக் கொண்ட அரச குடியினர்
 
துடியன்,பாணன்,பறையன் மற்றும் கடம்பன் என்ற நான்கு குடிகளும் உயர்ந்த குடிகள் என்கிறார். ஆனால் இன்று இக்குடிகளுள் பறையர் என்ற குடியைத் தவிர மற்ற குடிகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுவும் இன்று தாழ்ந்த குடிகளாக பறையர்கள்  கருதப்படுகிறார்கள். 
 
மற்றைய மூன்று குடிகளும் முற்றிலும் அழிந்து போனார்களா? அல்லது அழிக்கப்பட்டர்களா ? அல்லது வேறு குடிகளாக திரிந்து போனார்களா? அப்படியே திரிந்து போனாலும் அதற்க்கான தெளிவான வரலாற்று எச்சங்கள் எதுவுமில்லையே? இவை மட்டுமின்றி நாகர், வேளிர், மாயர், இயக்கர்...இன்னும் பிற குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றது.இவர்கள் என்ன ஆனார்கள்? ஈராயிரம் ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?  
 
ஆனால் ஆயிரக்கணக்கான  ஆண்டுகளுக்குப் பின்னும் ஆரியர்கள் பெருத்த மாற்றமின்றி இன்று வரையிலும் தனித்துவத்தை பேணுவது எப்படி? பார்ப்பனர்கள் போர் புரிந்தார்கள் என்று எங்குமில்லையே? 
 
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மை குணம் கொண்ட குடிகளா???  மென்மை குணம் கொண்ட குடிகளா??? இங்கும் "தகுதியானவை தப்பிப் பிழைக்கும்" என்கிற டார்வின் கோட்பாடு செல்லுமோ??!!