கோபம்கொண்டு குமைந்தபோதும்
துரோகம்கண்டு துவண்டபோதும்
வறுமைகொண்டு வாடியபோதும்
வெறுமைகொண்டு ஓடியபோதும்
நறவுண்டு களித்தபோதும்
உறவுகண்டு புளித்தபோதும்
வாடைதழுவி உறைந்தபோதும்
பேடைதழுவி கறைந்தபோதும்
புலவிநீண்டு தீய்ந்தபோதும்
கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில்
இருப்பை உணர்த்திய நிழலே
மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !!
இரத்தம் கெட்டு சத்தம் கெட்டு
எயிறு கெட்டு வயிறு கெட்டு
வாசம் கெட்டு சுவாசம் கெட்டு
இதயம் கெட்டு இதழ் கெட்டு
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
உருவம் கெட்டு பருவம் கெட்டு
அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த
உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?
No comments:
Post a Comment