Friday, October 18, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 4

  
அதிகமாக ஊடல், கூடல் பற்றியே எழுதியாச்சு. இன்றைக்கு ஒரு மாறுதலாக வீரத்தை பற்றி எழுதலாம். 

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்கச் சொல்வோம் உலகுக்கு !!

இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!

இரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித் தாமரையை பறிப்போம் !!

இருவர் படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள் நரம்புகளை முறுக்கேரச் செய்யும்.

பழங்காலப் போர்க்களங்களில் போர் தொடங்குவதற்கு முன் பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு, கரடிகை, திண்டி போன்ற கருவிகளை ஒன்று சேர்த்து இசைக்கச் செய்வர். இந்த இசையைக் கேட்டு வீரர்களின் நரம்பு முறுக்கேறி, போர் வெறி பிறக்குமாம். மனிதர்களுக்கே இப்படியெனில் யானைகளுக்கு கேட்கவா வேண்டும்

இந்த முத்தொள்ளயிரப் பாடலி கொஞ்சம் கவனியுங்கள். 

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது
செங்கண் மாக்கோதை சினவெம் களியானை
திங்கள்மேல் நீட்டும் தன் கை

கொடிய போர்க்களம். வீரம் கொண்ட மன்னர்களின் விரிந்த வெண்தாமரை போன்ற வெண்கொற்றக் குடையை சேரனுடைய பட்டத்து யானை பிடுங்கி எறிந்து நொறுங்கச் செய்கிறது. சினம் சினம்!! பிடித்து எறிந்தும் அதன் கோபம் ஆறவில்லை. சினமிக்க அந்த யானை வானில் தெரியும் வெண் நிலவை பகை மன்னனின் வெண்கொற்றக் குடை   என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய தன துதிக்கையை நீட்டுகிறதாம் !! என்ன கற்பனை !!



No comments: