Tuesday, November 19, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 5

தூரக்கிழக்கு கரை ஓரந்தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ
!! எம்பாட்ட கூறதோ  !!   
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! 

ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில்  பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்...

கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன்.

நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன்   வைத்திருக்கவும் புது புதிதாக  எதையாவது படைப்பதற்கும் உந்துதலாக இருக்கிறது. மனிதனின் இயக்கத்திற்கும், ஏற்றத்திருக்கும் இந்தக் கற்பனைதான் முதற் படிக்கல்.  நம்முடைய  களிப்பு, சலிப்பு, விழிப்பு எல்லாமே இந்தக் கற்பனையூடாகத்தான் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் படுகிறது . ஏன் இந்தப் பதிவை இடும்போது கூட நாளைக்கு யாரவது இதைப் படித்து மகிழக் கூடும் என்ற கற்பனையிலேயே எழுதுகிறேன்.

அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் இன்று எல்லாமே கூப்பிடு தூரம்தான். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருவரது தொடர்பு நிலை என்பது வெறும் கற்பனை தான். ஆதலால் தான் நெஞ்சுவிடு தூது, முகில்விடு தூது,  கிள்ளைவிடு தூது, விறலிவிடுதூது என எல்லாவற்றையும் தூதனுப்பி காத்திருப்பர்...

இவற்றிக்கு ஒப்பான சங்க இலக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூலகளில் ஒன்றான ஐந்திணை எழுபதிலிருந்து சில கவிநயமிக்க பாடல்களை காணலாம்.

ஆலி விருப்புற் றகவிப் புறவெல்லாம்
பீலி பரப்பி மயிலாலச் - சூலி
விரிகுவது போலுமிக் காரதிர வாவி
யுருகுவது போலு மெனக்கு


(ஆலி - மழைத்துளி;பீலி - மயில் தோகை;சூலி - கருக்கொண்டு)



மயிலினங்கள் மழைத்துளிகளை காதலுடன் கூவியழைத்துக் கொண்டு முல்லை நிலமாகிய எல்லாப் பாகங்களிலும் தன தோகைகளை விரித்து ஆடுகிறது. நீர் சுமந்த கார் வானம் முகிலைக் கிழித்து மழையைப் பொழிய காத்திருக்கிறது. அதாவது மேகம் கருக்கொண்டு, தன் குழந்தையாகிய மழையைப் பிரசவிக்க இடி இடித்து முழங்குகிறது. இந்த ஓசை காதலனை விட்டு தனித்திருக்கும் என்னை உலையிலிட்டு உருக்குவது போல உயிரை வருத்துகிறது.


2. இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப விடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.
 


அரிய கலைமான்களின் கூட்டம் மகிழ்ச்சி பொங்க காட்டிடத்தே சுற்றித் திரிகின்றன ! கொல்லைகளிலுள்ள கொடிகள் சுருண்டு கிடக்கும் முல்லையும் துளிர்க்க தொடங்கியிருக்கிறது. சிறு மாலையானது நானும் பிரிந்து போன என் காதலரும் வருந்துமாறு இடியும் முகிலும் இணைந்து வருகிறது. மாலையொன்று போதாதா என்னை வாட்ட ??!!   இடியும் முகிலும் இணைந்து வருவதேன் ?? என்னை முற்றிலும் ஒழித்து விடுவதற்கோ  என் தோழி !!

No comments: