Saturday, November 30, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 6

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…


காதல் தோய்ந்தொடும் இந்த வரிகளில் நானும் கரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்…

அரபு நட்டு பெண்கள் போல் இவள் அக்தரும் திரவியமும் அள்ளித்  தெளித்திருக்கவில்லை. மேலை நாட்டுப் பெண்கள் போல் இவள் இடை இறுக்கும் உடையும், உதட்டுச் சாயுமும் அணிந்திருக்கவில்லை. பழுப்பு நிற மேனியில் பரவியிருக்கும் மஞ்சளிலும் , சீயக்காய் தோய்ந்த கார் கூந்தலிலும், காதுமடல்களை தழுவி வழிந்தோடிய  வியர்வைத்துளிகள் படிந்த வாசத்திலும் மயங்கியிருந்த நாட்களை என்னவென்று சொல்வது!!??
தேகம் தழுவத் தேவையில்லை.. அவள் தாவணி நுணியில் பிரிந்தோடிய நூலின் உரசல் போதும்.. என் இரத்த நாளம் கொப்பளிக்க!!
பதிண்ம பருவத்தின் ஊக்கமோ அல்லது பருவ மங்கையின் தாக்கமோ தெரியவில்லை!!
ஆனாலும் அந்த நினைவுகள் என் இதயத்தின் உட்சுவர்களிலும், எலும்பு மஜ்ஜைகளிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் முல்லைச் சரங்களை முகர்ந்திருந்தாலும்… என்றோ அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த ஒற்றை மல்லிகையின் வாசத்தை தேடி என் சுவாசம் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது.

kavithai.jpg
Image Source : vayalaan.blogspot.comஐந்தினை எழுபதில் நான் ரசித்த சில பாடல்கள்....

காமன் தேரில் காதலன் வருவான் கனிய கனியக் காதல் மொழி கதைக்கலாம் என்று காத்திருந்து காத்திருந்து காணமல் கண்ணீர் சொரியும் இந்தக் கன்னியின் கதையைக் கேளுங்கள்..

1.கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்
முலைவற்று விட்டன்று நீர்.


Tears-eyes-16143904-500-368.jpg

பாடலின் விளக்கம்:
இரவு முழுவதும் வானம் சிறிதும் நில்லாது மழை பொழிந்து மலைக்குன்றுகளில் உள்ள அழகிய முல்லைச் செடிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன.  இரவெல்லாம் என் மார்புக் குன்றுகளின் மேல் தொடர்ந்து கண்ணீர் மழை பொழிந்தும் என் நெஞ்சின் வெம்மையும் தணியவில்லை என வாழ்வும் மலரவில்லை எனத் துயரம் ததும்பக் கூறுகிறாள் இந்த முல்லை நிலத் தலைவி.


2. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்
காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோ(டு) அலமரும் கண்.


Stream+Reflection.jpg

பாடலின் விளக்கம்:
செம்மையாகிய கதிர்களையே கொண்ட கதிரவன் தனது சீற்றமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்ட மாலைப் பொழுதிலே  பசுமையான கொடிகளையுடைய முல்லைச் செடிகள் பூத்து மணத்தை வீசுகின்றன. வண்டுகள் அந்தப் பூக்களை நாடிச் சென்று ரீங்காரமிடுகின்றன. இப்படி கார்கலத்துடன் சுழன்று தோன்றும் வானத்தைக் காண்கிறபோதேல்லாம் என் கண்களில் நீர் கோர்க்கிறது.

வேனிற்கால வெப்பம் தீர்ந்துபோய் கார்காலத்தில் நீர் தூவுகின்ற முகில்களைக் கண்டபோதும் என் காதல் வேட்கை தணிக்க  காதலன் அருகில் இல்லையே என் புலம்புகிறாள்.

3.இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்
வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை
அலையும் அலைபோயிற்(று) இன்று.


பாடலின் விளக்கம்:
(தண்+குளவி - குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள்; பொதும்பில் - சோலையில்;)
இலைகள் அடர்ந்த குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் சோலைகள் எங்கும் படர்ந்துள்ளன. அந்தச் சோலையில் கொத்துக்களாகவுள்ள காந்தள் பூக்களிடம் ஆரவாரத்துடன் வண்டுகள் சென்ற தேனை நுகர்கின்ற நாட்டினை உடைய தலைமகன் நம் வீட்டிற்க்கு வந்தான். அவன் வரவினால் நம் அன்னையின் வருத்தமானது நீங்கியது.

பூக்களிலே மல்லிகையின் வாசம் இன்ப வேட்கையை கிளர்ந்தளச் செய்யும். அதனால் தான் "மல்லிகை என் மன்னன் விரும்பும் பொன்னான மலரல்லவோ " என்று பாடினார்களோ என்னவோ ?? இந்தப் பாடலில் "அன்னை அலையும் அலைபோயிற்று"  என்று கூறப்பட்ட வரிகளால் அன்றும் அன்னையர்கள் தன் மகளிரின் திருமணம் குறித்து கவலைகளிலே இருந்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

No comments: