தமிழ் இனமே கொஞ்சம் கொஞ்சமா அழிந்து கொண்டிருக்குது ஈழத்தில்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 266 பொதுமக்கள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள் . கேட்டால் தீவிரவாதிகளை கொன்றோம் என்கிறார்கள். மூன்று வயது குழந்தையும் என்பது வயது கிழவருமா ஆயுதம் எடுத்து போராடினார்கள் ?? மிருகங்களை வதை செய்தால் கூட கேக்கும் உலகம், குடும்பம் குடும்பமாக தமிழனை கொல்லும்போது வாய் மூடி மௌனமாக இருப்பது ஏனோ ? தமிழன் உயிர் மிருகங்களை விட கேவலமானதா ?
அரசியல் கட்சிகளோ ஈழப் பிர்ச்சனையை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், காங்கிரசும், இன்னும் சிலரும் விடுதலைப் புலிகளை காரணம் காட்டி ஈழத்தமிழர்களுக்காக நாம் போராடக் கூடாது என்கிறார்கள். மக்களில் பலர், இந்தப் பிர்ச்சனையப் பற்றி முழு புரிதல் இல்லாமலோ, முழு விவரம் தெரியாமலோ, வெறுமனே பரிதாபப் பட்டு விட்டு போகின்றனர். இன்னும் சிலர், இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் நம் பிரதமரைக் கொன்றார்கள் என்பதற்காக, அவர்களை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவியை நம் இந்திய அரசு செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு நாட்டின் மக்களை அழிப்பதற்கு ராணுவ உதவி செய்து விட்டு, பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு இந்திய அப்பாவி மக்களை கொல்ல உதவி செய்கிறது என்று ஒப்பாரி வைப்பது எந்த வகையி சேர்த்தி என்றும் புரிய வில்லை...
35 ஆண்டுகளுக்கு முன்னால் 9 அறப்போராட்டவாதிகள் கொல்லப்படவில்லையெனில் இத்தனை ஆயுதபோராளிகள் தோன்றபோவதில்லை. அவர்களை அழிக்க இன்று தங்கள் உயிரையும் அழித்துகொள்ள தேவையில்லை. உங்களை குற்றம் சொல்லி ஒரு சொல் சொன்னாலே பதில் சொல்ல மனது துடிக்கும் போது தமிழனாய் பிறந்த ஒரு காரணத்திற்காக உயிரை இழைக்கும் தருணம் ஏற்படும் போது திருப்பி அடிக்க நினைப்பது மனித குணம் தானே!
எத்தனை முறை சுட்டாலும் உயிர்வருமாயின் எத்தனை முறை கற்பழித்தாலும் களங்கம் ஏற்படாதாயின் எத்தனை முறை நம் கை கால் உடல் என சதைப்பிண்டங்களாய் மாறினாலும் திரும்ப ஒட்டிக்கொள்ளுமாயின் இங்கே எவரும் ஆயுதம் எடுத்து போராட வந்திருக்க மாட்டார்கள் ...பந்தலடியில் நின்று அமைதியாகவே போராடியிருப்பார்கள்.இங்கெல்லாம் வெடிசத்தம் தீபாவளியின் அறிகுறியாய் மகிழ்ச்சி தர அங்கோ வெடிசத்தம் உயிரை பறிக்கும் கொடியதாகவே இருக்கிறது!
புலிகளோ அல்லது மற்ற ஆயுதம் தாங்கிய குழுக்களோ இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ அங்கிருக்கும் தமிழினம் அழிக்கப்பட்டு இருந்திருக்கும்... அதையும் இங்கிருக்கும் தமிழர்களாகியா நாம் கைகட்டி கண்ணீர் சிந்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருப்போம்... இது தான் உண்மை... இதை மறுக்க முடியாது செர்மனியில் யூதர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இலங்கையிலும் நடக்கிறது...
பாதிக்கப்பவனுக்குத்தான் அதன் வலி புரியும்... சில மைல் தூரத்தில் இருந்து வேடிக்கைபார்க்கும் நமக்கு உயிரின் வலி புரியாது. தினமும் மரண பயத்தில் இருந்து பார்த்தால் புரியும், உறவுகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டால் அதன் வலி புரியும் நமக்கு...
என்னுடைய அரசாங்கம் தவறாக நடந்துகொள்கிறது, தவறாக வழிநடத்தப்படுகிறது என்றால் அதை தட்டிக்கேட்கும் பொறுப்பு குடிமக்களாகிய நமக்கு இருக்கிறது. ஈழ விவகாரத்தில் அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தவறானவை. என் சட்டம் சொல்கிறது என்று எல்லாவற்றிற்கும் தலையாட்ட முடியாது.
இந்தியாவின் வல்லரசு கனவிற்கு தமிழன் தான் பலியா ?? ஏழு கோடி தமிழனின் ஓலக்குரல் தேசத்தின் முதல்வருக்கு உரைக்காவிட்டால் அத்தேசத்தில் ஒரு அங்கமாயிருப்பதில் எவ்வாறு பெருமை கொள்ள முடியும் ?? தேசத்தின் எல்லைகோடுகள் நிரந்தரமானவை அல்ல அம்மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால் !!