Sunday, October 16, 2011

வாள் வடக்கிலிருத்தல்


சங்க இலக்கியத்தில் நான் படித்து மிகவும் நெகிழ்வுற்ற ஒரு செய்தியை உங்களிடம் பகிர்கிறேன்.

சோழ மன்னன் கரிகால் பெருவளத்தனை  (கரிகாலனை) சேர மன்னன் சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டிய மன்னனும் சோழ நாட்டில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் முற்றுகை இட்டனர். மிக கடுமையான போரின் ஒரு சூழலில் சேரனும் கரிகாலனும் நேருக்கு நேர் நின்று போர் புரியும் நிலை.கரிகாலன் தன்னுடைய  வேலை மிக வேகமாக சேரமான் பெருஞ்சேரலாதன் மீது வீசுகிறான்.அந்த வேல் சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகு வழியாக கழன்று ஓடி விடுகிறது. முதுகில் காயம் பட்டவுடன் சேரலாதன் போரை நிறுத்தி விடுகிறான். மார்பில் காயம்பட்டால் அது வீர இலக்கணம் ஆனால் கரிகாலன் வேல் மார்போடு நில்லாமல் முதுகையும் ரணமாக்கிவிட்டதே. எப்பொழுது பகைவனின் வேல் தன முதுகை தொட்டதோ அப்பொழுதே தன மானத்திற்கு இழுக்கு என்று எண்ணி புறப்புண்ணோடு நாடு செல்லாமல் போர்க்களத்திலேயே வடக்கிலிருக்கிறான். வடக்கு நோக்கி அமர்ந்து தன வாளை தன எதிரே ஊன்றி வைத்துவிட்டு உண்ணாமல் உயிரை விடுவதுதான் வாள் வடக்கிலிருத்தல் எனப்படும். 

போரில் கரிகாலன் வெற்றி பெற்றாலும் கூட பெருஞ்சேரலாதன் முடிவு எல்லா மக்களுடைய  உள்ளத்தையும் உருக்கும் அவலமாக முடிந்தது. வழக்கமாக எழும்பும்  போர் வெற்றி ஒலி  எழும்பவில்லை, போர் முடிந்தவுடன் வீரர்கள் களிப்பில் உண்ணும் மதுவும் அருந்தவில்லை, வீரர்களின் உறவினர்கள் தேறல் அருந்தவில்லை, படையெடுத்த பகைவன் என்றும்  பாராமல் சோழ நாடெங்கும் ஒரே சோக மாயம்.

வென்றவனுக்கு வெற்றிப் புகழ் தோற்றவனுக்கு வீரப் புகழ். எல்லாருக்கும் சேரலாதன் மீது இரக்கம் உணடாக காரணம் என்ன? பகைவனை கொன்றது குற்றமா? இல்லை...
போரில் ஆயுதம் இல்லாதவனுக்கு ஆயுதம் கொடுத்து போரிட்டு கடைசியில் கொல்வதுதான் தமிழர் போர் மரபு. ஆனால் கரிகாலன் எடுத்த எடுப்பிலே திடீரென்று கொன்று விட்டான் அதுதான் அவன் செய்த பிழை. எந்த உள்நோக்கமும் இல்லாமல் இளமை வேகத்தில் கரிகாலன் சேரனை கொன்று விட்டான். மக்கள் மன்னனின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் குறைகூறவும் இடம் இல்லை. விளைவு பகை அரசனின் மீது இரக்க உணர்வு. இந்நிகழ்வை புறநானுற்று பாடல் ஒன்றில் வெண்ணி குயத்தியார் என்னும் புலவர் பாடியுள்ளார் 


"புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே"

முழுமதி தோன்றும் ஒரு நாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்  போல் வேந்தனொருவன் மார்பு குறித்தெறிந்த வேலால் உண்டாகிய புறப் புண்ணிற்கு நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும் பகற்போது முன்போலக் கழியாது