Monday, June 14, 2010

அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி!!!

வட இந்திய அரசர்களில் மிக பெயர் பெற்றவரும் உலகெங்கும் புத்த மதத்தை பரப்பியவருமான அசோகர் மெளரிய வம்சத்தின் தோன்றலாகும். இவருடைய காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும்.

இக்கால‌ கட்டத்தில் தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வளவு வலிமை இருந்த போதும் ஏன் தமிழகம் இவன் குடையின் கீழ் வரவில்லை?  எந்த சக்தி இவனை தடுத்தது? தமிழக மன்னர்களுடன் போர் ஏதும் நடந்ததா? போரில் இவன் தோற்கடிக்கப்பட்டானா?அக்கால கட்டத்தில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தமிழ் அரசன் யார்? நீண்ட நாட்களாக‌ என்னை குடைந்து  கொண்டிருந்த கேள்வி?

ஆனால் சமீபத்தில் கா.அப்பாத்துரை அவர்களின் "தென்னாட்டு போர்க்களங்கள்" என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில் கூறப்பட்டிருந்த செய்திகள் எனக்கு மிகப் புதிதாக‌ இருந்தது.  நாம் மௌரியர்களையும், குப்தர்களையும் தெரிந்திருந்த அளவு இளஞ்சேட்சென்னியையும், நெடுஞ்செழியனையும் தெரிந்திருக்கவில்லை அல்லது நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் நாம் இல்லை. அந்த அளவுக்கு ஆரியம் நம்மை சிதைத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது வேதனைதான் விஞ்சுகிறது.

அந்நூலில் சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த போரில் அசோக படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது.

 புகார் என்ற காவிரி பூம்பட்டிணத்தை தலைநகராக கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும் பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன் உஜ்ஜயினியிலிருந்து முதலில் கலிங்கத்தை கைப்பற்றினான். கலிங்கத்தை வெற்றி பெற்றதும் கோசர்களை கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான். அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனை கோசர்கள் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான "பாழி"யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்க்கு கோட்டையாக்கி கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள்  திதியனையும் படிப்படியாக தாக்கினர்.

ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன் அவர்களை முறியடித்து துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சம்யம் வரை மோரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில் ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மோரியப் பேரரசைத் தட்டி எழுப்பின. அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர்(இதைப்பற்றிய தகவல்கள் இலக்கியத்தில் காணக் கிடைக்கிண்றன).

மோரியப் படைகள் துளுவத்தில் தங்கி காட்டாறு போல் தமிழகத்தை வந்து தாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளை திரட்டினான். இப்போரில் மோரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன். மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப் படைகளும் இப்போரில் ஈடுப்டுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களை சிதறடித்தனர்.

அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்க்கு துரத்திச் சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும் வரை போரிட்டான்.  தமிழகத்தை போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சி புகழ் பரப்ப முனைந்தான் எனக் கருதலாம்.  

இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்

"எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை"


5 comments:

Karthikeyan Rajasekaran said...

புதிய தகவல்... தங்கள் அனுமதியுடன் இந்த தளத்தை எனது தளத்தில் இனைத்துக் கொள்கிறேன்

ஆதித்ய இளம்பிறையன் said...

தாரளமாக இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

MOHAN P SIVAM said...


இளஞ்சேட் சென்னி வென்றது பிம்பி சாரணை என மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=59

Unknown said...

இளஞ்சேத்சென்னி போரிட்டது மோரியரின் தலைவனான பிம்பிசாரனுடந்தான்; அசோகன் அல்ல. பிம்பிசாரனின் மகன் அஜாதச்சத்ருவே அசோகனாக மாற்றப்பட்டான். அஜாதச்சத்ரு தனது தந்தை பிம்பிசாரனுக்கு எதிராகவே எப்போதும் செயல்பட்டான்!

இளஞ்செட்சென்னி said...

என் பெயர் இளஞ்சேட்சென்னி என்பதில் பெரும் பெருமை கொள்கிறேன்