Monday, February 24, 2014

களவு கொள்ளும் கவிக்கானகம் - 8

காற்றுக்கு எல்லையுண்டு, கண் காணும் காட்சிக்கு எல்லையுண்டு, கலவிக்கும் புலவிக்கும் எல்லையுண்டு. ஆனால் கனவில் நாம் காணும் காட்சிக்கும் கற்பனைக்கும் எல்லைகள் உண்டோ !!?? செவ்வரி விழிகள் செய்கை மறந்து செயலிழக்கலாம். தேனூறும் இதழ்கள் கசந்து போகலாம். தயங்கி புறத்தூண்டலில் மயங்கி பின் முயங்கும் காலம் அழிந்து போகலாம். ஆனால் வாசிக்கும் எழுத்துக்களால் வழிந்தோடும் கற்பனைகள் வருடிவிடும் காதல் நினைவுகள் ஊன் ஒடுங்கினும் ஓயாது. என்னை இந்த கற்பனை பிரபஞ்சத்தில் படர வைத்த  இலக்கிய வரிகள் உங்கள் வாசிப்புக்கு...


nn1.jpg
(Image courtesy: solvanam.com)

ஓராயிரம் யானை கொன்றால் பரணி ..போர்ப் பொறி பறக்கும் பரணியில் காதற் பொறியும் பறக்கிறது.பரணி பாட சென்ற கணவன்மார்கள் வெற்றி கண்டு உடனே ஊர் திரும்பாததால் ஊடல் கொண்ட மனைவிகளை கதவை திறக்க சொல்லிப் பாடும் பாடல்கள் கொண்ட தொகுப்பு கடை திறப்பு...

வாச மாமலர்கள் மார்புதோய, மது
   மாலை தாழ்குழலில் வண்டுஎழுந்து
ஊசல் ஆட, விழி பூசல் ஆட உற
   வாடும் மாதர்! கடை திறமினோ!   


மனம் பரப்பும் மலர்களை தொடுத்து சூடிய பூமாலையானது அவளது மார்புகளில் தோய்ந்து ஆடிக் கொண்டிருக்கும்.  அவளது தாழ்கூந்தலில் (நீளமான கூந்தல்) அணிந்துள்ள மலர்களில் உள்ள மதுவை உண்ண வண்டுகள் வருவதும் போவதுமாக ஊசல் ஆடிக் கொண்டிருக்கும். தன்னை காண்போர் விழிகளில் ஒருவித கலக்கத்தை காம மயக்கத்தை உண்டாகக்கூடிய அளவுக்கு கண்களாலே காதல் மொழிகளில் உறவாடக்கூடிய பெண்களே உங்களது கதவுகளை திறவீர்!!

1798372_735505766473998_796887440_n.jpg
(Image courtesy: tamilartz.com)

பானல் அம் கண்கள் ஆட
      பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட
      பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட
      திரு மணிக் குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும்
     வாசம் நாறு ஊசல் கண்டார்.


கருங்குவளை போன்ற கண்கள் ஆட,
பவளம்  போன்ற வாயிலே புன் சிரிப்பு ஆட
விரும்பத்தக்க பெரிய மார்புகளிலே இட்ட  விலை மதிப்புமிக்க மாலைகள் ஆட
தேன்  வண்டுகள் கூந்தலிலே ஒலித்துக் கொண்டு ஆட
செவிகளில் பதிந்த அழகிய மணிகள் அணிந்த குழைகள்  ஆட
தேவ மாதர்கள் ஏறி  ஆடுகின்ற  மணம் கமழும் ஊஞ்சல்களைப் பாருங்கள்.

விலையி லாதவடம் முலையி லாட
    விழி குழையி லாட
விழை கணவர்தோள் மலையி லாடி
    வரு மயில்கள் போலவரு
மடந லீர்கடைகள் திறமினோ.


விலை மதிப்பற்ற மாலை மார்பில் ஆட, காதுவரை படர்ந்த விழிகள் காதுக் குழையில் ஆட,மலையில் ஆடும் மயில் போன்று மலை போன்று கணவர் தோளில் ஆடும் பெண்களே கதவை திறவீர்


வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
     வளர்முலை தானு மாட வளையாட
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
     மதுரமு தூறி வீழ ...... அநுராகம்
இருவரு மேக போக மொருவர்த மாக மாக
     இதமொடு கூடி ......


செவ்வரி விழிகளை கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க,
    காதில் அணிந்த இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட,
எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட,
    ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய,
இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர,
    காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஆட

Saturday, February 8, 2014

களவு கொள்ளும் கவிக்கானகம் - 7

விழிபட்ட இடம் இன்று
      உளிபட்ட சிலையாக
இது தானோ காதல் என்றறிந்தேனடி

புது பார்வை நீ பார்த்து
புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி!!

மெல்லிடை கொண்டு
 நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி!!
     
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்...


இசையோடு சேர்ந்த இந்தப் பாடல் வரிகள் என் இதய வார்ப்புகளை எப்பொழுதும் கீறிச் செல்லும்.


காதலிப்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை உணரும் தருணம் இருக்கிறதே.....!! உணர்வற்ற உடலாய் உயிரற்ற சடமாய் ஏகாந்த வெளிகளில் சஞ்சரிக்கும் அந்த போதையை என்னவென்று சொல்வது !! எழுத்துக்களில் அடக்க முடியாத உயிரை அறுக்கும் உணர்வுகளின் தொகுப்பு அது..

ஐந்திணை எழுபதில் வரும் ஒரு பாடலைக் காணலாம்.....

K-and-Balarama-and-cowherd-boys-start-ou

ஓர் கார்கால மாலைப்பொழுதில் தோழியும் தலைவியும் பேசிக்கொண்டிருக்கும்போது ஆயன் ஒருவன் ஆநிரைகளை தெருவோரம் ஒட்டிக்கொண்டு வருகிறான். மாலை வேளையில் மகிழ்வோடு அவன் உள்ளம் துள்ள வந்து கொண்டிருக்கும் காட்சியை இருவரும் காண்கின்றனர். அதைக் கண்ட தலைவி கூறுவதைக் கேளுங்கள்.

மிகச் சிறந்த மலர்களினால் தொகுக்கப்பட்ட மாலையினை அணிந்து அவன் நடந்து வர அவனோடு சேர்ந்து அந்த மாலையும் அசைந்தாடி வருகிறது. அந்தப் புது மலர்களிலே உள்ள தேனை உண்ணும் விருப்போடு வண்டினங்கள் அவனைச் சூழ்ந்து ஆரவாரித்துக் கொண்டு வருகின்றன. தன் பின்னால் ஆநிரைகள் வீடுகளை நோக்கி மகிழ்வுடன் வந்து கொண்டிருக்க, அவன் நிமிர்ந்த நடையோடு புல்லாங்குழல் இசைத்து இன்னிசை எழுப்பிக் கொண்டு வருகிறான் . இவனைக் காண்பது கார்காலத்தில் நான் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவனை ஞாபகப்படுத்துகிறது. இந்த நேரத்திலே அவன் பின்னோடு வரும் பெரும் மழையானது மேலும் என் வேதனையை அதிகப்படுத்துகிறது தோழி !!

குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப
வாயன் புகுதரும் போழ்தினானாயிழாய் !
பின்னொடு நின்று பெயரும் படுமழைகொ
லென்னொடு பட்ட வகை.


Friday, February 7, 2014

அந்தப்புரம்

சக்கரவர்த்தி முதல் குறுநில மன்னர்கள் வரை அந்தப்புரம் வைக்காத மன்னர்களே கிடையாது. இந்த வார்த்தையை உபயோகிக்காத எந்த வரலாற்று எழுத்தாளரும் இல்லை, அந்தப்புரம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறியும் ஆவலில் வாங்கியதே முகில்  எழுதிய "அகம் புறம் அந்தப்புரம்"  என்ற வரலாற்று நூல். ஆயிரம் பக்கங்களை தாண்டிய இந்த புத்தகத்தை தூக்குவதே பெரிய பயிற்சி தான்.  இணயத்தில் அந்தப்புரம் பற்றிய தேடலில் ஒன்னும் அகப்படவில்லை. ஆதலால் வரும் தலைமுறையினருக்கு அந்தப்புரத்தை பற்றிய அறிவை உண்டாக்கவே இந்தப் பதிவு:)
துருக்கி சுல்தான்களின் அந்தப்புரம்தான் உலகிலேயே மிகவும் பிரசித்தப் பெற்றதும், சரித்திர ஆசிரியர்களால் கொண்டாடப்படுவதும் ஆகும். இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்தது, ஒட்டாமன் மன்னர்களின் அந்தப்புரம் பற்றியது. 

சரி அந்தப்புரம் எப்படி இருக்கும் ??

நீண்ட திரைச் சீலைகள்... அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்..எங்கு நோக்கினும் அழகிகள்....சில மன்னர்கள் தங்கள் வருவாயில் அற்பது சதவீதம் அந்தப்புரத்திற்கு செலவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...    

அந்தப்புரத்தின் தலைவி பட்டத்து மகாராணிதான். அந்தப்புரத்து பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.

1.  மகாராணி - மன்னர் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள்
2.  ராணி - திருமணம் செய்து மனைவி போல நடத்தப்படுபவர்
3. ஆசை நாயகிகள் - மன்னனோடு கலவி கொண்டவர்கள்
4. அழகிகள் - மன்னனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவர்கள்

சரி இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் எப்படி ?
குளிக்குமிடம் 
தங்குமறை
நடனம்

மகாராணிகள் அறைகள் மிகப் பெரியது. சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பர்கள்.  ராணிகள் அறைகள் ஓரளவுக்கு பெரிதாக இருக்கும். ஆசை நாயகிகளுக்கு ஒரே ஒரு அறைதான். மற்ற அழகிகள் பொது அறையில் தான் தங்க வேண்டும்.

உணவைப் பொருத்தவரையில் அரண்மனையில் ஒரு நாளைக்கு எழுபது பதார்த்தங்கள் சமைத்தார்கள் என்றால் மகாராணி எதுவேண்டுமென்றாலும் கேட்டு சாப்பிடலாம். தங்க தட்டில் பரிமாறப்படும். ராணிகளுக்கு முப்பது பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்படும். ஆசை நாயகிகளுக்கு அதிகப் பட்சம் பத்து பதார்த்தங்கள் பித்தளை தட்டில் வைத்து பரிமாறப்படும். 

சரி இவர்களது வேலை என்ன?


தங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பது...மன்னரை மகிழ்விப்பது. இசை, ஆடல், பாடல், கூடல் கலைகளைக் கற்றுக் கொடுக்க அதில் அனுபவமிக்க தனித்தனி ஆசிரியைகள் உண்டு. பட்டத்து மகாராணிக்குத்தான் கொஞ்சம் அதிகப்படியான வேலை. அந்தப்புரத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது, சமையல்  துறை, மருத்துவ துறை, மன்னர் திருமணம் செய்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி கணக்கு  வைத்துக் கொள்வது .... ஒவ்வொன்றையும் கவனிக்க தனித்தனி செயலர்களை மகாராணி வைத்துக் கொள்ளலாம். 

காவல்??
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காவலுக்கு பிறப்புறப்பு நீக்கப்பட்ட திருநங்கைகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பல நேரங்களில் மன்னனின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு. அத்து மீறி நுழைபவர்களின் தலை அல்லது வேற உறுப்புகள் வெட்டப்படும். 

சரி அந்தப்புரத்திற்கு பெண்கள் எப்படி தருவிக்கப்படுகிரார்கள்?
பகை நாட்டிலிருந்து போரின் மூலம் பிடித்து வரப்படும் அழகான பெண்கள் அந்தப்புரத்தில் சேர்க்கப்படுவார்கள்(தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் என அழைக்கப்படுவார்கள்). குறுநில மன்னர்களிடமிருந்து அன்பளிப்பாக வரும் அழகிகளும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள். மாற்றப்பட்டு மன்னர் நகருலா வரும்போது, வேட்டைக்குச் செல்லும்போது அகப்படும் அழகான பெண்களும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள்.

அந்தப்புர பெண்கள் பெரும்பாலும் அதை விட்டு வெளியே செல்லக் கூடாது. சென்றாலும் எதாவது விழாக்களுக்கோ, ஆறு குளங்களில் நீராடவோ, கோவிலுக்கோ மொத்தமாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஓரளவு வயதான பின்பு அந்தப் பெண்கள் அந்தப்புரத்திலிருந்து வெளியற்றப்படுவார்கள். அந்தப்புரத்திலிருந்து பெண்கள் வெளியேறினாலும், வேறு யாருடன் தொடர்பு வைத்திருந்தாலும் மரண தண்டன் நிச்சயம்.   

நோய் உள்ளவர்கள்(காய்ச்சல், சளி) , மாதவிடாய் கொண்டவர்கள் கூந்தலை அள்ளி முடியக் கூடாது. அதுதான் மன்னருக்கு கொடுக்கப்படும் சமிக்கை. அந்த சமிக்கையை உணர்ந்து மன்னர் கூந்தல் அள்ளி முடியாதவர்களை தொட மாட்டார்.  நீண்ட திரைக்கு பின்னால் அமர்ந்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த ராணிக்கு எந்த வியாதி, என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் மருத்துவர் மூலம் தினமும் மன்னருக்கு தெரிவிக்கப்படும்.