Tuesday, April 27, 2010

கலித்தொகையின் காதல் சார‌ல்

ஒரு சிற்றூர். அங்கே ஒரு க‌ண்ணி. அக்க‌ண்ணி மீது காளை ஒருவ‌ன் மைய‌ல் கொண்டிருக்கிறான். அவ‌ளை சிறுவ‌ய‌து முத‌லே அவ‌னுக்குத் தெரியும். அவ‌ளிட‌ம் த‌ன் காத‌லை எப்ப‌டியும் தெரிய‌ப்ப‌டுத்தி விட‌ வேண்டும் என்று முனைகிறான். அந்த‌ க‌ட்டுக்க‌ட‌ங்காத‌ காளை செய்த‌ செய‌ல்க‌ளை த‌ன் தோழியிட‌ம் அக்க‌ண்ணி இவ்வாறு கூறுகிறாள்.

நாம் சிறுவ‌ய‌தில் தெருவில் ம‌ண‌ல் வீடு க‌ட்டி விளையாடும் போது அதை சிதைப்பான‌ல்ல‌வா ஒருவ‌ன்.கூந்த‌லில் உள்ள‌ முல்லை ம‌ல‌ரை பிய்த்து அழ‌ விட்டானே அவ‌ன். நாம் விளையாடிக் கொண்டிருந்த‌ ப‌ந்தை ப‌றித்துக் கொண்டு ஓடி ந‌ம்மை க‌த‌ற‌ விட்டானே.. அக்கள்வ‌ன் நேற்று நானும் என் தாயும் இருக்கும்பொழுது வீட்டிற்கு வ‌ந்தான். "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க
கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான். என் அன்னையும் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.

அப்போது திடீரென அவன் என் கைப்பிடிக்க நான் மருண்டு குரலெடுத்தது கேட்டு அன்னை அலறியடித்து ஓடி வ‌ந்துவிட்டாள். உட‌னே அவ‌ன் ந‌டுங்கினான். என‌க்கு அவ‌னை பார்க்க‌ பாவ‌மாக‌ இருந்த‌து. உட‌னே "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வ‌ந்த‌துமா, அதான் உங்களைக்
கூப்பிட்டேன்" என்று கூறி உண்மை நிலையை மறைத்து விட்டேன். என் அன்னையும் விக்கல நீக்க, அக்க‌ள்வ‌னின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விட்டாள். அந்தச் சமயத்தில் அவ‌ன் கடைக்கண்ணால் "கொல்வான்" போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் (புன்னகை பூக்கின்றான்)

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்

என்ன‌ வ‌ரிக‌ள்!!

கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?

பழங்காலம் தொட்டு தமிழ் மன்னர்களாகிய‌ பாண்டிய, சோழ, சேரர்களிடையேஒற்றுமை கிடையாது. ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லியும்,காட்டிக்கொடுத்தும்சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆதிக்கத்தை உண்டு பண்ணிய மொகலாயர்கள் கூட முதலில் வட நாட்டு சிற்றரசர்கள் காட்டிக் கொடுத்ததாலே இங்கு வந்தனர். அவர்கள் செய்யாத துரோகத்தையா எட்டப்பொம்மன் செய்து விட்டார்? இன்று துரோகியின் உருவகமாக எட்டப்பன்தான் சித்தரிக்கப்படுகிறார். வரலாற்றின் பக்கங்கள் என்னசொல்கின்றன?

எட்டையபுர பாளையத்தையும், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தையும் ஆண்டுவந்த தெலுங்கு மன்னர்கள் தான் முத்துக்குமார வெங்கடேஸ்வர என்ற "எட்டப்பநாயக்கர் அய்யன்" மற்றும் கட்ட பொம்மன். கட்டப்பொம்மன்(தெலுங்கில்கெட்டிபொம்மு - ‍வலிமை,போர்த்திறமை கொண்டவர்) போர்க்குணம்கொண்டவர். எட்டப்பன் அதற்க்கு நேர்மாறனவர் கலை,கூத்து என்று நாட்டம் உள்ளவர்.ஆரம்ப காலத்தில் இருவருமே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில் எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர். சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள் இருந்துள்ளது. அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர். இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும், கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார்.

ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இதன்காரணமாகவும், ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாகவும் கட்டப்பொம்மன் வரி கட்ட முடியாது என்று எதிர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல பல பாளையக்காரர்கள் ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாக வரி கட்டமுடியாது என்று எதிர்த்துள்ளார்கள். பின்னாளில் அவர் மாற்ற்ப்பட்டார் என்பது வேறு கதை.

விடயத்திற்க்கு வருவோம்..

பிரிட்டன் அரசாங்க காரியதர்சிக்கு மேஜர் பென்னர்மேன் எழுதிய ஒரு கடிதத்தில் எனக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் லுசிங்டனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் புதுக்கோட்டை தொண்டைமான்(புதுக்கோட்டை பாளையம்), தான் கட்டபொம்மன் நாயக்கரை பிடித்து வைத்திருப்பதாகவும், தாங்கள் விரைவில் வந்து அவரை பிடித்து செல்லவும் என கடிதம் எழுதியிருந்தார் என்கூறப்பட்டிருந்தது". பிரிட்டன் அரசாங்க ஏடுகளின் கூற்றுப்படி கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது தொண்டைமான் தான் எட்டப்பன் கிடையாது.

புதுக்கோட்டை அரசாங்க வலைப்பதிவில் (http://www.pudukkottai.org/places/
thirumayam/01thirumayam.html) இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது பாளையக்காரர்களிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மனும் அவரது ஊமைத்தம்பியும் அகதிகளாக புதுக்கோட்டை பாளையத்தைச் சார்ந்த காடுகளில் அலைந்து திரிந்துகொண்டிருந்தனர். திருக்களம்பூர் என்ற இடத்தில் தொண்டைமான் படைகளினால்
அவர்கள் சிறை பிடிக்கப் பட்டு திருமயம் கோட்டையில் கொஞ்ச நாள் அடைத்து
வைக்கப்பட்டு பின் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்". ஆக வரலாற்று பதிவுகளின்படி கட்டப் பொம்மனை காட்டிக்கொடுத்தது தொண்டைமான் தான்எட்டப்பன் கிடையாது. சினிமா என்ற‌ ஊடகத்தினால் ஒரு வரலாறு அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு தவறாக‌ எடுத்து செல்லப்படுகிறது என்பதற்க்கு எட்டப்பொம்மன் வரலாறு ஒரு சான்று. " " ‌ ‌ ‌ ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

கரிகால் பெருவளத்தான்

ஏற‌த்தாழ‌‌ மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன் நிக‌ழ்ந்த‌ உண்மைக் க‌தை இது.
இள‌ஞ்சேட் சென்னி என்ற‌ சோழ‌ ம‌ன்ன‌ருக்கு ஒரு புலிக்குட்டி பிற‌ந்தான்.
ந‌டை ப‌யிலும் இள‌ம் பிராய‌த்திலேயே ப‌கைவ‌ர்க‌ள் அவ‌னை தீயிட்டு கொளுத்த‌ முய‌ன்ற‌ன‌ர். காலில் க‌டுமையான‌ காய‌த்துட‌ன் உயிர் த‌ப்பி காடுக‌ளில் அலைந்து திரிந்தான். இள‌வ‌ர‌சு ப‌ட்ட‌ம் க‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌னை பிடித்து சிறையில் க‌ட்டி வைத்த‌ன‌ர்.

சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, க‌டுமையான் க‌ட்டுக் காவ‌லையும் மீறி சிறையில் இருந்து த‌ப்பினான். த‌ப்பிய‌வுட‌ன் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஒரு பெரும் ப‌டை திர‌ட்டி த‌ஞ்சைக்கு கிழ‌க்கே 20 மைல் தொலைவில் உள்ள‌ வெண்ணி என்ற‌ இட‌த்தில் சேர‌ ம‌ன்ன‌ன் பெருஞ்சேர‌லாத‌ன் த‌லைமையில் 11 சிற்ற‌ர‌ச‌ர்க‌ள் கொண்ட‌ ப‌டையை எதிர்த்து போர் புரிந்தான். போரில் பாண்டிய‌ர், ஒளிய‌ர்க‌ள், வேளிர்க‌ள், அறுவ‌ள‌ர், வ‌ட‌வ‌ர், மேற்க‌த்திய‌ர் உட்ப‌ட‌ 11 அர‌ச‌ர்க‌ளையும் தோற்க‌டித்து பெருவெற்றி கொண்ட‌ அந்த‌ புலிக்குட்டி வேறு யாரும‌ல்ல‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளால் போற்றப‌டுப‌வ‌னும், க‌ல்லையும் க‌ளிம‌ண்ணையுமே கொண்டு மூவாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ நிலைத்து நிற்க‌கூடிய‌ வ‌லிமையான‌ க‌ல்ல‌ணையை க‌ட்டிய‌ க‌ரிகாலன் தான்.

சோத‌னைக‌ள் அடுக்க‌டுக்காக‌ ஆட்கொண்ட‌போதும் அத‌னை த‌க‌ர்த்து வெற்றி
கொண்ட‌ க‌ரிகால‌னை 3000 ஆண்டுக‌ள் க‌ழித்து நினைவு கொள்கிறோம். த‌ப்பிப்ப‌து க‌டின‌ம் என்று சிறையிலே இருந்திருந்தால் க‌ல்ல‌ணை ஏது?
காவிய‌ங்க‌ள் போற்றும் க‌தாநாய‌க‌ன் ஏது?

வீரத்தின் உச்சம்

குழந்தை இறந்து பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாளால் கீறிப் புதைக்கும் வீர மரபைக் கொண்டது ந‌மது தமிழ் இனம். அவ்வினத்தில் வீரத்தின் உச்சமாக சொல்லப்பட்ட சில செயல்களை உங்களிடம் பகிர்கிறேன்..

நூழிலாட்டு:
ஒருவன் தன்னிடம் போர்க்கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எரிகிற
வேலையே தன் ஆயுதமாக் பறித்துக் கொண்டு தன்னை சூழ்கிற பல பகைவர்களை தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பில் தைத்துள்ளதாயினும் அவ்வேலையே உருவி எதிரிகளை அழிப்பதுதான் நூழிலாட்டு.

"களம்கழுமிய படைஇரிய
உளம்கிழித்தவேல் பறித்துஓச்சின்று"

தன் மார்பில் பதிந்த வேலை எடுத்து பகைவரது படைகளை சிதறடித்தான் என்பது பொருளாகும்.

எருமை மறம்:
பெரும்போரில் தன்னாட்டு படைவீரர்கள் புறமுதுகிட்டு ஒடுகின்ற நிலையிலும் சினங்கொண்டு தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றலுக்கு பெயர் தான் எருமை மறம்.

"கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேல்ஊன்றி
வாள்வெள்ளம் தன்மேல் வர"

"நடுங்கத்தக்க போரில் படைவீரர்கள் வெள்ளமென புறமுதிகிட்டு ஓடத் கடுமையான் வீரன், பகைவரது வாள் வெள்ளம் போல் தன்மீது பாய்ந்தும் பின்னிடாது யானை பிணக்குவியலிடையே வேலை ஊன்றி நெருப்பு விழிப்பது போல விழித்து நின்றான்"

அட்டையாடுதல்
வீரனுடைய உடலை அம்புகளும், வேலும், வாட்களும் விடாமல் தாக்கி உயிரை பிரித்தாலும், உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் உடல் இரண்டாகப் பிளந்தாலும், நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரத்தைதான் அட்டையாடுதல் என்பர்.

"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை"

பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் நிலை.

ஏம எருமை
வீரன் ஒருவன் தன கைவேலைப் பகைவரின் களிறு(யானை) மீது எறிந்துவிட்டு ஆயுதம் ஏதுமின்றி தன உடல் வலிமையாலே போர் செய்து வேல்லுதலை ஏம எருமை என்பார்கள்.

"குடைமயங்கிய வாள்அமருள்
படைமயங்கப் பாழிகொண்டன்று "

வேலைக் களிற்றின்மீது பாய்ச்சிய வீரன் தன் தோள்களையே கொம்பாகக் கொண்டு எருதுபோல் பாய்ந்து போரிட்டு வெற்றி கொண்டான்என்பது பொருளாகும்.

வல்வில் வேட்டம்:
ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களில் பாய்ந்து அவற்றை துளைத்து செல்வதுதான் வல்வில் வேட்டம்.

"வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? "

வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவன் யாரோ? என்று வியப்பதாக உள்ளது இப்பாடல்.

நவகண்டம் ‍‍/ அரிகண்டம்
தான் நினைத்த செயல் நடை பெற வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு
காரணத்திற்க்காக தனது உடலின் எட்டு பாகங்களை வாளால் துண்டித்து விட்டு ஒன்பதாவது முறை தன் வலது கையினால் தலையை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவதற்க்கு நவகண்டம் என்று பெயர்.

அரிகண்டம்
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர்.

இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம்கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக்
கொண்டு இறப்பார்.

இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு.
1.வலிமையானஎதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்றதருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப் பட்டது.

2.சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப் பட்டது.

3.நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க
வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடுக்கும் பட்சத்தில் அந்த்க் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல்
சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச் சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

ஆனால் பிற்க்காலங்களில் கோவில் கட்டுவதற்க்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக மேல் சாதிக்காரர்களால் கீழ் சாதிக் காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப் படுத்தப் பட்டார்கள். இதில் கீழ் சாதி பெண்களும், குழந்தைகளும் கூட விதிவிலக்கல்ல.