Tuesday, April 27, 2010

வீரத்தின் உச்சம்

குழந்தை இறந்து பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாளால் கீறிப் புதைக்கும் வீர மரபைக் கொண்டது ந‌மது தமிழ் இனம். அவ்வினத்தில் வீரத்தின் உச்சமாக சொல்லப்பட்ட சில செயல்களை உங்களிடம் பகிர்கிறேன்..

நூழிலாட்டு:
ஒருவன் தன்னிடம் போர்க்கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எரிகிற
வேலையே தன் ஆயுதமாக் பறித்துக் கொண்டு தன்னை சூழ்கிற பல பகைவர்களை தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பில் தைத்துள்ளதாயினும் அவ்வேலையே உருவி எதிரிகளை அழிப்பதுதான் நூழிலாட்டு.

"களம்கழுமிய படைஇரிய
உளம்கிழித்தவேல் பறித்துஓச்சின்று"

தன் மார்பில் பதிந்த வேலை எடுத்து பகைவரது படைகளை சிதறடித்தான் என்பது பொருளாகும்.

எருமை மறம்:
பெரும்போரில் தன்னாட்டு படைவீரர்கள் புறமுதுகிட்டு ஒடுகின்ற நிலையிலும் சினங்கொண்டு தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றலுக்கு பெயர் தான் எருமை மறம்.

"கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேல்ஊன்றி
வாள்வெள்ளம் தன்மேல் வர"

"நடுங்கத்தக்க போரில் படைவீரர்கள் வெள்ளமென புறமுதிகிட்டு ஓடத் கடுமையான் வீரன், பகைவரது வாள் வெள்ளம் போல் தன்மீது பாய்ந்தும் பின்னிடாது யானை பிணக்குவியலிடையே வேலை ஊன்றி நெருப்பு விழிப்பது போல விழித்து நின்றான்"

அட்டையாடுதல்
வீரனுடைய உடலை அம்புகளும், வேலும், வாட்களும் விடாமல் தாக்கி உயிரை பிரித்தாலும், உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் உடல் இரண்டாகப் பிளந்தாலும், நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரத்தைதான் அட்டையாடுதல் என்பர்.

"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை"

பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் நிலை.

ஏம எருமை
வீரன் ஒருவன் தன கைவேலைப் பகைவரின் களிறு(யானை) மீது எறிந்துவிட்டு ஆயுதம் ஏதுமின்றி தன உடல் வலிமையாலே போர் செய்து வேல்லுதலை ஏம எருமை என்பார்கள்.

"குடைமயங்கிய வாள்அமருள்
படைமயங்கப் பாழிகொண்டன்று "

வேலைக் களிற்றின்மீது பாய்ச்சிய வீரன் தன் தோள்களையே கொம்பாகக் கொண்டு எருதுபோல் பாய்ந்து போரிட்டு வெற்றி கொண்டான்என்பது பொருளாகும்.

வல்வில் வேட்டம்:
ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களில் பாய்ந்து அவற்றை துளைத்து செல்வதுதான் வல்வில் வேட்டம்.

"வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? "

வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவன் யாரோ? என்று வியப்பதாக உள்ளது இப்பாடல்.

நவகண்டம் ‍‍/ அரிகண்டம்
தான் நினைத்த செயல் நடை பெற வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு
காரணத்திற்க்காக தனது உடலின் எட்டு பாகங்களை வாளால் துண்டித்து விட்டு ஒன்பதாவது முறை தன் வலது கையினால் தலையை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவதற்க்கு நவகண்டம் என்று பெயர்.

அரிகண்டம்
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர்.

இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம்கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக்
கொண்டு இறப்பார்.

இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு.
1.வலிமையானஎதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்றதருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப் பட்டது.

2.சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப் பட்டது.

3.நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க
வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடுக்கும் பட்சத்தில் அந்த்க் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல்
சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச் சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

ஆனால் பிற்க்காலங்களில் கோவில் கட்டுவதற்க்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக மேல் சாதிக்காரர்களால் கீழ் சாதிக் காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப் படுத்தப் பட்டார்கள். இதில் கீழ் சாதி பெண்களும், குழந்தைகளும் கூட விதிவிலக்கல்ல.

No comments: