Monday, June 21, 2010
சங்ககாலத்தில் மது(கள்)
Saturday, June 19, 2010
ஏகாந்த அமைதியை நோக்கி...
நெஞ்சை துளைத்துச் சென்ற உன் விழிவீச்சில்
சத்தமில்லாமல் சாய்க்கப்பட்டது என் இதயம்..
கட்டுக்கடங்கா ஆசைகள் பல்கி பெருகி
பிரபஞ்ச வீதிகளில் இன்னிசையுடன் பயணமிட
இதுவரை உடல் உணர்ந்திடாத உணர்வுகள்
இன் அதிர்வுகளய் உடலெங்கும் பரவி தழுவ
யாரையும் தீண்டாத தென்றல் ஒன்று எனைமட்டும்
தீண்டிவிட்டதான இறுமாப்பில் கலித்து கூத்தாட
சொல்லவெண்ணா சிந்தைகளின் செறிவால் எழும் இதயத்தின் இரைச்சல்
என்னுள்ளே ஒங்கி ஒலித்து அடங்கி ஒடுங்க
ஆசைக்கும் அறிவுக்குமான போரில் நான்
தாக்கப்பட்டு காயப்பட்டு உடல் சிதைந்து உணர்விழந்து
ஏகாந்த அமைதியை நோக்கி என்னுயிர் எங்கோ பறக்க
முடிவில்லாமல் பயணிக்கிறேன்................
Monday, June 14, 2010
அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி!!!
இக்கால கட்டத்தில் தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வளவு வலிமை இருந்த போதும் ஏன் தமிழகம் இவன் குடையின் கீழ் வரவில்லை? எந்த சக்தி இவனை தடுத்தது? தமிழக மன்னர்களுடன் போர் ஏதும் நடந்ததா? போரில் இவன் தோற்கடிக்கப்பட்டானா?அக்கால கட்டத்தில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தமிழ் அரசன் யார்? நீண்ட நாட்களாக என்னை குடைந்து கொண்டிருந்த கேள்வி?
ஆனால் சமீபத்தில் கா.அப்பாத்துரை அவர்களின் "தென்னாட்டு போர்க்களங்கள்" என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில் கூறப்பட்டிருந்த செய்திகள் எனக்கு மிகப் புதிதாக இருந்தது. நாம் மௌரியர்களையும், குப்தர்களையும் தெரிந்திருந்த அளவு இளஞ்சேட்சென்னியையும், நெடுஞ்செழியனையும் தெரிந்திருக்கவில்லை அல்லது நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் நாம் இல்லை. அந்த அளவுக்கு ஆரியம் நம்மை சிதைத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது வேதனைதான் விஞ்சுகிறது.
அந்நூலில் சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த போரில் அசோக படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது.
புகார் என்ற காவிரி பூம்பட்டிணத்தை தலைநகராக கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும் பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன் உஜ்ஜயினியிலிருந்து முதலில் கலிங்கத்தை கைப்பற்றினான். கலிங்கத்தை வெற்றி பெற்றதும் கோசர்களை கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான். அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனை கோசர்கள் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான "பாழி"யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்க்கு கோட்டையாக்கி கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள் திதியனையும் படிப்படியாக தாக்கினர்.
ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன் அவர்களை முறியடித்து துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சம்யம் வரை மோரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில் ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மோரியப் பேரரசைத் தட்டி எழுப்பின. அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர்(இதைப்பற்றிய தகவல்கள் இலக்கியத்தில் காணக் கிடைக்கிண்றன).
மோரியப் படைகள் துளுவத்தில் தங்கி காட்டாறு போல் தமிழகத்தை வந்து தாக்கின. இனிமேலும் சிற்றரசர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளை திரட்டினான். இப்போரில் மோரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன். மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப் படைகளும் இப்போரில் ஈடுப்டுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களை சிதறடித்தனர்.
அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்க்கு துரத்திச் சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும் வரை போரிட்டான். தமிழகத்தை போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சி புகழ் பரப்ப முனைந்தான் எனக் கருதலாம்.
இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்
"எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை"
Sunday, June 13, 2010
ஆறலை கள்வர்கள்
குறுந்தொகையில் என்னை கவர்ந்த ஒரு வார்த்தை. சங்க இலக்கியத்தில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல்லாடல்
ஆறு + அலை + கள்வர் - வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்
பாலை நிலமனிதர்களாகிய இவர்களுக்கென்று ஒரு நிலையான தொழில் கிடையாது . வறட்சி நிலமான பாலையில் விவசாயம் ஏதும் செய்ய இயலாத நிலையில் கொள்ளை அடிப்பதும் வழிப்பறி செய்வதும்தான் இவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. போர்க் காலங்களில் படை வீரர்களாக செயல்பட்டு, வெற்றி கிட்டினால் எதிரி நாட்டில் கொள்ளை அடிப்பதும் இவர்களது வேலை. இவர்களின் வழிபாட்டுத் தெய்வமாக “கொற்றவை” என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.
கொற்றவை என்பதற்கு ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் எனபது பொருளாகும். போரின் போதும் வேட்டையின் போதும் வழி நடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கொற்றவை தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். ஆறலை கள்வர்கள் பசுக்களை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் அச்சம் தரத்தக்க இப் பெண் தெய்வத்தை வணங்கியே செல்வர். பிற்கால மன்னர்கள் போருக்கு போகும்போது கொற்றவையை வணங்குவதை வழ்க்கமாக கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஓராயிரம் காலம் கொற்றவையை மக்கள் வணங்கி வந்துள்ளனர். பின் எப்படி முருகன் அந்த இடத்திற்கு வந்தார் என்பது புதிராகவே உள்ளது. இதுவும் ஆரியர்களின் தாக்கமாக இருக்கலாம். ஆரியர்களால் தமிழர் இழந்தவைகளில் இதுவும் ஒன்று
Tuesday, April 27, 2010
கலித்தொகையின் காதல் சாரல்
நாம் சிறுவயதில் தெருவில் மணல் வீடு கட்டி விளையாடும் போது அதை சிதைப்பானல்லவா ஒருவன்.கூந்தலில் உள்ள முல்லை மலரை பிய்த்து அழ விட்டானே அவன். நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை கதற விட்டானே.. அக்கள்வன் நேற்று நானும் என் தாயும் இருக்கும்பொழுது வீட்டிற்கு வந்தான். "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க
கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான். என் அன்னையும் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.
அப்போது திடீரென அவன் என் கைப்பிடிக்க நான் மருண்டு குரலெடுத்தது கேட்டு அன்னை அலறியடித்து ஓடி வந்துவிட்டாள். உடனே அவன் நடுங்கினான். எனக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. உடனே "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வந்ததுமா, அதான் உங்களைக்
கூப்பிட்டேன்" என்று கூறி உண்மை நிலையை மறைத்து விட்டேன். என் அன்னையும் விக்கல நீக்க, அக்கள்வனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விட்டாள். அந்தச் சமயத்தில் அவன் கடைக்கண்ணால் "கொல்வான்" போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் (புன்னகை பூக்கின்றான்)
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்
என்ன வரிகள்!!
கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
எட்டையபுர பாளையத்தையும், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தையும் ஆண்டுவந்த தெலுங்கு மன்னர்கள் தான் முத்துக்குமார வெங்கடேஸ்வர என்ற "எட்டப்பநாயக்கர் அய்யன்" மற்றும் கட்ட பொம்மன். கட்டப்பொம்மன்(தெலுங்கில்கெட்டிபொம்மு - வலிமை,போர்த்திறமை கொண்டவர்) போர்க்குணம்கொண்டவர். எட்டப்பன் அதற்க்கு நேர்மாறனவர் கலை,கூத்து என்று நாட்டம் உள்ளவர்.ஆரம்ப காலத்தில் இருவருமே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில் எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர். சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள் இருந்துள்ளது. அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர். இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும், கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார்.
ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இதன்காரணமாகவும், ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாகவும் கட்டப்பொம்மன் வரி கட்ட முடியாது என்று எதிர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல பல பாளையக்காரர்கள் ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாக வரி கட்டமுடியாது என்று எதிர்த்துள்ளார்கள். பின்னாளில் அவர் மாற்ற்ப்பட்டார் என்பது வேறு கதை.
விடயத்திற்க்கு வருவோம்..
பிரிட்டன் அரசாங்க காரியதர்சிக்கு மேஜர் பென்னர்மேன் எழுதிய ஒரு கடிதத்தில் எனக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் லுசிங்டனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் புதுக்கோட்டை தொண்டைமான்(புதுக்கோட்டை பாளையம்), தான் கட்டபொம்மன் நாயக்கரை பிடித்து வைத்திருப்பதாகவும், தாங்கள் விரைவில் வந்து அவரை பிடித்து செல்லவும் என கடிதம் எழுதியிருந்தார் என்கூறப்பட்டிருந்தது". பிரிட்டன் அரசாங்க ஏடுகளின் கூற்றுப்படி கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது தொண்டைமான் தான் எட்டப்பன் கிடையாது.
புதுக்கோட்டை அரசாங்க வலைப்பதிவில் (http://www.pudukkottai.org/places/
thirumayam/01thirumayam.html) இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது பாளையக்காரர்களிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மனும் அவரது ஊமைத்தம்பியும் அகதிகளாக புதுக்கோட்டை பாளையத்தைச் சார்ந்த காடுகளில் அலைந்து திரிந்துகொண்டிருந்தனர். திருக்களம்பூர் என்ற இடத்தில் தொண்டைமான் படைகளினால்
அவர்கள் சிறை பிடிக்கப் பட்டு திருமயம் கோட்டையில் கொஞ்ச நாள் அடைத்து
வைக்கப்பட்டு பின் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்". ஆக வரலாற்று பதிவுகளின்படி கட்டப் பொம்மனை காட்டிக்கொடுத்தது தொண்டைமான் தான்எட்டப்பன் கிடையாது. சினிமா என்ற ஊடகத்தினால் ஒரு வரலாறு அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு தவறாக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்க்கு எட்டப்பொம்மன் வரலாறு ஒரு சான்று. " "
கரிகால் பெருவளத்தான்
இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னருக்கு ஒரு புலிக்குட்டி பிறந்தான்.
நடை பயிலும் இளம் பிராயத்திலேயே பகைவர்கள் அவனை தீயிட்டு கொளுத்த முயன்றனர். காலில் கடுமையான காயத்துடன் உயிர் தப்பி காடுகளில் அலைந்து திரிந்தான். இளவரசு பட்டம் கட்ட வேண்டிய அவனை பிடித்து சிறையில் கட்டி வைத்தனர்.
சிறையில் இருந்தபடியே தன் எண்ணங்களை கூர்தீட்டி, கடுமையான் கட்டுக் காவலையும் மீறி சிறையில் இருந்து தப்பினான். தப்பியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரும் படை திரட்டி தஞ்சைக்கு கிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள வெண்ணி என்ற இடத்தில் சேர மன்னன் பெருஞ்சேரலாதன் தலைமையில் 11 சிற்றரசர்கள் கொண்ட படையை எதிர்த்து போர் புரிந்தான். போரில் பாண்டியர், ஒளியர்கள், வேளிர்கள், அறுவளர், வடவர், மேற்கத்தியர் உட்பட 11 அரசர்களையும் தோற்கடித்து பெருவெற்றி கொண்ட அந்த புலிக்குட்டி வேறு யாருமல்ல சங்க இலக்கியங்களால் போற்றபடுபவனும், கல்லையும் களிமண்ணையுமே கொண்டு மூவாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்ககூடிய வலிமையான கல்லணையை கட்டிய கரிகாலன் தான்.
சோதனைகள் அடுக்கடுக்காக ஆட்கொண்டபோதும் அதனை தகர்த்து வெற்றி
கொண்ட கரிகாலனை 3000 ஆண்டுகள் கழித்து நினைவு கொள்கிறோம். தப்பிப்பது கடினம் என்று சிறையிலே இருந்திருந்தால் கல்லணை ஏது?
காவியங்கள் போற்றும் கதாநாயகன் ஏது?