Tuesday, December 28, 2010
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மையா?? மென்மையா??
"துடியன் பாணன் பறையன் கடம்பன்
இந்நான்கல்லது குடியுமிலவே”
துடியன் - துடி என்னும் தோல் கருவியை இசைக்கும் குடியினர்
பாணர் - சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளையும் செய்யவல்ல மற்றும் அவற்றையே தொழிலாக கொண்ட ஒரு குடியினர்
பறையன் - கிளர்ந்தெழும் உடல் அசைவுகளை உருவாக்கும் இசையை இசைக்கும் மற்றும் பறை மூலம் தகவல் சொல்லும் ஒரு குடியினர்
கடம்பன் - கடம்பு மரத்தைச் சின்னமாகக் கொண்ட அரச குடியினர்
துடியன்,பாணன்,பறையன் மற்றும் கடம்பன் என்ற நான்கு குடிகளும் உயர்ந்த குடிகள் என்கிறார். ஆனால் இன்று இக்குடிகளுள் பறையர் என்ற குடியைத் தவிர மற்ற குடிகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுவும் இன்று தாழ்ந்த குடிகளாக பறையர்கள் கருதப்படுகிறார்கள்.
மற்றைய மூன்று குடிகளும் முற்றிலும் அழிந்து போனார்களா? அல்லது அழிக்கப்பட்டர்களா ? அல்லது வேறு குடிகளாக திரிந்து போனார்களா? அப்படியே திரிந்து போனாலும் அதற்க்கான தெளிவான வரலாற்று எச்சங்கள் எதுவுமில்லையே? இவை மட்டுமின்றி நாகர், வேளிர், மாயர், இயக்கர்...இன்னும் பிற குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றது.இவர்கள் என்ன ஆனார்கள்? ஈராயிரம் ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் ஆரியர்கள் பெருத்த மாற்றமின்றி இன்று வரையிலும் தனித்துவத்தை பேணுவது எப்படி? பார்ப்பனர்கள் போர் புரிந்தார்கள் என்று எங்குமில்லையே?
வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்வது வன்மை குணம் கொண்ட குடிகளா??? மென்மை குணம் கொண்ட குடிகளா??? இங்கும் "தகுதியானவை தப்பிப் பிழைக்கும்" என்கிற டார்வின் கோட்பாடு செல்லுமோ??!!
Friday, November 26, 2010
கடை திறமினோ
இது புலவிக்கு மருந்தென மனம்வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிறவா மடவீர் கடைதிற மின்திறன்"
துயில் - தூக்கம்
கடைகள் திறமினோ - கதவுகளைத் திறவுங்கள்
புலவி - ஊடல் - காதலில் செய்யும் பொய்க்கோபம்
கூர்நயனக் - பொய் உறக்கம் கொள்கின்ற கண்
தலைவன் கலிங்கத்துப் போரில் கலந்து திரும்பி வீடு வர காலம் தாழ்த்ததினால் தலைவி கோபம் கொண்டு அவனோடு ஊடல் கொள்கிறாள். தலைவன் அவள் ஊடல் நீக்க வழி தெரியாமல் தவித்து மதி மயங்கும் மாலை நேரத்தில் வீடு செல்கிறான். அப்பொழுது தலைவி தூங்கி கொண்டிருப்பது போல் நடிக்கிறாள். தலைவி துயில் கொள்கிறாள் அவள் ஊடல் நீக்க இதுதான் சரியான தருணம் என நினைத்து அவள் மெல்லிய பாதங்களை வலி நீங்குமாறு பற்றுகிறான்.காலைப் பிடித்தாயிற்று இனி என்ன கூடல் தானே? தலைவியும் மனமிரங்கி ஊடல் நீங்கி தலைவனுடன் கூடல் கொண்டால் என்பது பொருள்.
இந்த பாட்டில் அப்படி என்ன வில்லங்கம் இருக்குனு கேக்குறீங்க?
//இது புலவிக்கு மருந்தென மனம் வைத்தடியிற் கைத்தலம் வைத்தலுமே//
அடியில் கைத்தலம் வைத்தலுமே - இதற்க்கு வேறு அர்த்தமும் உண்டு
"சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலியெழ ஒலியெழப்
பனிமொழி யவர்கடை திறமினோ"
சுரிகுழல் - நெளிந்த கூந்தல்
பரிபுர - சிலம்புகள் அணிந்த நிர்த்த பதம் வைத்து நடனஞ் செய்கின்ற
பனிமொழி - குளிர்ந்த மொழி - இனிய மொழி
நீண்ட நெடிய நெளிந்த கூந்தல் அசைவுற, தூக்கம் கலைந்து எழும் அழகிய மயில் போல சிலம்புகள் அணிந்த மெல்லிய பாதத்தில் சின்ன அடி வைத்து நடனஞ் செய்கின்ற போது எழும் ஒலியைப் போல குரலைக் கொண்ட இனிய மொழியை பேசுபவளே கதவை திறவாயா?? கலிங்கத்துப் பரணி புகழ் கேட்க...
கூந்தல் அசைவதும்,சிலம்பொலி எழுவதும்,இனிய மொழி பேசுவதும் கலவிப் போர் புரியுங்கால் மகளிரின் இயல்பாக கூறப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------
"சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
ஒருகை கீழ் அலைசெய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்துவரு
தெரிவை மீர்கடைகள் திறமினோ"
ஓர் அழகிய காலை நேரம் வஞ்சி ஒருத்தி மஞ்சத்திலிருந்து துயில் எழுகிறாள். அவள் தூங்கும்பொழுது சுருண்டு நெளிந்த கூந்தல் அவிழ்ந்து, வெண்ணிற உடலோடு கூடிய ஆடை கலைந்து கிடக்கிறது. எழுந்தவள் ஒரு கையால் அவிழ்ந்து நின்ற கூந்தலைத் தாங்கினாள், மற்றொரு கையால் நெகிழ்ந்து நின்ற ஆடையை பற்றினாள். அப்படியே இரண்டடி எடுத்து வைக்கிறாள்.. அக்காலை நேரத்திலும் அவள் முகம் நிலவென் மலர்ந்து நிற்கிறது...உறக்கத்திலும் கூட அவள் முகமலர்ச்சி....
இவைதான் சொற்களின் ஓவியமோ!!!
Tuesday, October 19, 2010
உயிர் கொல்கிறாய் !!
கரம் தீண்டாமல்
இடை தழுவாமல்
இதழ் பருகாமல்
கண்ணாலே கள்வெறி ஏத்தி
செவ்வரி விழிவழியே
உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!
கலிங்கத்துப் பரணி - நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
“நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு
அக்கானகத்தே உயிர்பறிப்பீர்”
காஞ்சிக்கும்(பழமையான தமிழ் நகரம்) வடமலைக்கும்(இமயமலைக்கும்) நடுவே வேடனை விட்டு, அக்காட்டிலே அவனது உயிரை பறிப்பீராக(கொல்லுவீராக). இது வெளிப்படையான் அர்த்தம்.
இதில் மறைந்திருக்கும் பொருள் என்னவெனில்,"நல்லஅணிகலன் மற்றும் மாலை அணிந்தகொங்கைகளுக்கும் நடுவே இல்லாத இடமாகிய இடுப்பில் மன்மதனை விட்டு, மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால் அவனைக் இன்பத்தில் தோய்த்து எடுப்பீராக(கொல்லுவீராக)"
நக்காஞ்சி- மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
வடமலை - மாலை அணிந்தகொங்கைகள்(மார்புகள்)
நடுவில் - நடுவுஇல் - நடுஇடம் அல்லாத
வெளி - இடுப்பு
வேடனை - வேள்தனை - மன்மதனை
அக்கானகத்தே - கான்நகத்து - மணம் பொருந்தியமலை போன்ற கொங்கைகளால்
Saturday, September 4, 2010
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ"
ஏதேச்சையாக இந்தப் கலிங்கத்துப் பரணி பாடலை படிக்க நேர்ந்தது. மிகவும் ரசிக்க வைத்தது. நீங்களும் பாருங்களேன்.
காஞ்சியை ஆண்ட குலோத்துங்கச் சோழன் காஞ்சியில் இருந்து கொண்டு கலிங்கம் மீது போர் தொடுக்க ஆணையிட, அவன் ஆணையால் சோழப்படைகள் கலிங்கத்தை அழித்தனவாம். மேம்போக்காகப் பார்த்தால் இதுதான் பொருள். ஆனால் இதற்க்கு இன்னொரு பொருளும் கூறலாம்.
காஞ்சி - மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
கலிங்கம் - உடை
புணர்ச்சிக்(கலவி) காலத்தில் இடையில் அணிந்த ஆபரணம் அப்படியே இருக்க, இடையணிந்த உடை மட்டும் உலைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். கொஞ்சம் வில்லங்கமாத்தான் இருக்கு...
Monday, August 2, 2010
உதிரத்தில் கலந்த உறவே...
என் இதயமே!
இதயமேந்தும் துடிப்பே!
என் விழியே!
விழிகாக்கும் இமையே!
என் குரலே!
குரல்கொடுக்கும் ஒலியே!
என் வினையே!
வினைதூண்டும் சிந்தையே!
என் உருவே!
உருவார்க்கும் கருவே!
என் வாசமே!
வாசம்உணரும் சுவாசமே!
என் கனவே!
கனவைத்தாங்கும் கற்பனையே!
என் உணர்வே!
உணர்வைத்தழுவும் உடலே!
--------------------------------------------------------------------------------------------------------
இவள்..!!
கார்வண்ண முகிலோ!
பால்வண்ண துகிலோ!
கவிபாடும் குயிலோ!
தோகைவிரித்தாடும் மயிலோ!
அணைதாவும் புனலோ!
நதிமேவும் நாணலோ!
இயற்கைசூடும் எழிலோ!
நதிகூடும் கடலோ!
வெம்மைநீக்கும் நிழலோ
வாடைபோக்கும் தனலோ
பிறைதாங்கிய நுதலோ
பூவாங்கிய குழலோ
கார்கால சாரலோ!
இள்வேனிற் தென்றலோ!
தமிழ் எண்களின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்த தமிழ் எண்களை தமிழகத்துடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்த அராபியர்கள் கொண்டு போயினர்.அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்று கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்.அவர்களுக்கு கிடைத்த அன்றைய வடிவமே இன்றைய எண் வடிவம்.
இன்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அராபி எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு இந்த எண்களின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்று கூறுகின்றனர்.அரபி எண்கள் என்றும்,இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறி கூறப்படும் எண்கள் பழைய தமிழ் எண்களே என்பது மேலே உள்ள படத்தை நோக்கின் உணரப்படும்
Source : Dinamani.com
Monday, June 21, 2010
சங்ககாலத்தில் மது(கள்)
Saturday, June 19, 2010
ஏகாந்த அமைதியை நோக்கி...
நெஞ்சை துளைத்துச் சென்ற உன் விழிவீச்சில்
சத்தமில்லாமல் சாய்க்கப்பட்டது என் இதயம்..
கட்டுக்கடங்கா ஆசைகள் பல்கி பெருகி
பிரபஞ்ச வீதிகளில் இன்னிசையுடன் பயணமிட
இதுவரை உடல் உணர்ந்திடாத உணர்வுகள்
இன் அதிர்வுகளய் உடலெங்கும் பரவி தழுவ
யாரையும் தீண்டாத தென்றல் ஒன்று எனைமட்டும்
தீண்டிவிட்டதான இறுமாப்பில் கலித்து கூத்தாட
சொல்லவெண்ணா சிந்தைகளின் செறிவால் எழும் இதயத்தின் இரைச்சல்
என்னுள்ளே ஒங்கி ஒலித்து அடங்கி ஒடுங்க
ஆசைக்கும் அறிவுக்குமான போரில் நான்
தாக்கப்பட்டு காயப்பட்டு உடல் சிதைந்து உணர்விழந்து
ஏகாந்த அமைதியை நோக்கி என்னுயிர் எங்கோ பறக்க
முடிவில்லாமல் பயணிக்கிறேன்................
Monday, June 14, 2010
அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி!!!
இக்கால கட்டத்தில் தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வளவு வலிமை இருந்த போதும் ஏன் தமிழகம் இவன் குடையின் கீழ் வரவில்லை? எந்த சக்தி இவனை தடுத்தது? தமிழக மன்னர்களுடன் போர் ஏதும் நடந்ததா? போரில் இவன் தோற்கடிக்கப்பட்டானா?அக்கால கட்டத்தில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தமிழ் அரசன் யார்? நீண்ட நாட்களாக என்னை குடைந்து கொண்டிருந்த கேள்வி?
ஆனால் சமீபத்தில் கா.அப்பாத்துரை அவர்களின் "தென்னாட்டு போர்க்களங்கள்" என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில் கூறப்பட்டிருந்த செய்திகள் எனக்கு மிகப் புதிதாக இருந்தது. நாம் மௌரியர்களையும், குப்தர்களையும் தெரிந்திருந்த அளவு இளஞ்சேட்சென்னியையும், நெடுஞ்செழியனையும் தெரிந்திருக்கவில்லை அல்லது நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் நாம் இல்லை. அந்த அளவுக்கு ஆரியம் நம்மை சிதைத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது வேதனைதான் விஞ்சுகிறது.
அந்நூலில் சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த போரில் அசோக படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது.
புகார் என்ற காவிரி பூம்பட்டிணத்தை தலைநகராக கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும் பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன் உஜ்ஜயினியிலிருந்து முதலில் கலிங்கத்தை கைப்பற்றினான். கலிங்கத்தை வெற்றி பெற்றதும் கோசர்களை கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான். அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனை கோசர்கள் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான "பாழி"யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்க்கு கோட்டையாக்கி கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள் திதியனையும் படிப்படியாக தாக்கினர்.
ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன் அவர்களை முறியடித்து துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சம்யம் வரை மோரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில் ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மோரியப் பேரரசைத் தட்டி எழுப்பின. அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர்(இதைப்பற்றிய தகவல்கள் இலக்கியத்தில் காணக் கிடைக்கிண்றன).
மோரியப் படைகள் துளுவத்தில் தங்கி காட்டாறு போல் தமிழகத்தை வந்து தாக்கின. இனிமேலும் சிற்றரசர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளை திரட்டினான். இப்போரில் மோரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன். மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப் படைகளும் இப்போரில் ஈடுப்டுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களை சிதறடித்தனர்.
அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்க்கு துரத்திச் சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும் வரை போரிட்டான். தமிழகத்தை போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சி புகழ் பரப்ப முனைந்தான் எனக் கருதலாம்.
இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்
"எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை"
Sunday, June 13, 2010
ஆறலை கள்வர்கள்
குறுந்தொகையில் என்னை கவர்ந்த ஒரு வார்த்தை. சங்க இலக்கியத்தில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல்லாடல்
ஆறு + அலை + கள்வர் - வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்
பாலை நிலமனிதர்களாகிய இவர்களுக்கென்று ஒரு நிலையான தொழில் கிடையாது . வறட்சி நிலமான பாலையில் விவசாயம் ஏதும் செய்ய இயலாத நிலையில் கொள்ளை அடிப்பதும் வழிப்பறி செய்வதும்தான் இவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. போர்க் காலங்களில் படை வீரர்களாக செயல்பட்டு, வெற்றி கிட்டினால் எதிரி நாட்டில் கொள்ளை அடிப்பதும் இவர்களது வேலை. இவர்களின் வழிபாட்டுத் தெய்வமாக “கொற்றவை” என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.
கொற்றவை என்பதற்கு ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் எனபது பொருளாகும். போரின் போதும் வேட்டையின் போதும் வழி நடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கொற்றவை தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். ஆறலை கள்வர்கள் பசுக்களை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் அச்சம் தரத்தக்க இப் பெண் தெய்வத்தை வணங்கியே செல்வர். பிற்கால மன்னர்கள் போருக்கு போகும்போது கொற்றவையை வணங்குவதை வழ்க்கமாக கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஓராயிரம் காலம் கொற்றவையை மக்கள் வணங்கி வந்துள்ளனர். பின் எப்படி முருகன் அந்த இடத்திற்கு வந்தார் என்பது புதிராகவே உள்ளது. இதுவும் ஆரியர்களின் தாக்கமாக இருக்கலாம். ஆரியர்களால் தமிழர் இழந்தவைகளில் இதுவும் ஒன்று
Tuesday, April 27, 2010
கலித்தொகையின் காதல் சாரல்
நாம் சிறுவயதில் தெருவில் மணல் வீடு கட்டி விளையாடும் போது அதை சிதைப்பானல்லவா ஒருவன்.கூந்தலில் உள்ள முல்லை மலரை பிய்த்து அழ விட்டானே அவன். நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை கதற விட்டானே.. அக்கள்வன் நேற்று நானும் என் தாயும் இருக்கும்பொழுது வீட்டிற்கு வந்தான். "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க
கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான். என் அன்னையும் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.
அப்போது திடீரென அவன் என் கைப்பிடிக்க நான் மருண்டு குரலெடுத்தது கேட்டு அன்னை அலறியடித்து ஓடி வந்துவிட்டாள். உடனே அவன் நடுங்கினான். எனக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. உடனே "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வந்ததுமா, அதான் உங்களைக்
கூப்பிட்டேன்" என்று கூறி உண்மை நிலையை மறைத்து விட்டேன். என் அன்னையும் விக்கல நீக்க, அக்கள்வனின் தலையையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விட்டாள். அந்தச் சமயத்தில் அவன் கடைக்கண்ணால் "கொல்வான்" போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் (புன்னகை பூக்கின்றான்)
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்
என்ன வரிகள்!!
கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
எட்டையபுர பாளையத்தையும், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தையும் ஆண்டுவந்த தெலுங்கு மன்னர்கள் தான் முத்துக்குமார வெங்கடேஸ்வர என்ற "எட்டப்பநாயக்கர் அய்யன்" மற்றும் கட்ட பொம்மன். கட்டப்பொம்மன்(தெலுங்கில்கெட்டிபொம்மு - வலிமை,போர்த்திறமை கொண்டவர்) போர்க்குணம்கொண்டவர். எட்டப்பன் அதற்க்கு நேர்மாறனவர் கலை,கூத்து என்று நாட்டம் உள்ளவர்.ஆரம்ப காலத்தில் இருவருமே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில் எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர். சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள் இருந்துள்ளது. அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர். இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும், கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார்.
ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இதன்காரணமாகவும், ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாகவும் கட்டப்பொம்மன் வரி கட்ட முடியாது என்று எதிர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல பல பாளையக்காரர்கள் ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாக வரி கட்டமுடியாது என்று எதிர்த்துள்ளார்கள். பின்னாளில் அவர் மாற்ற்ப்பட்டார் என்பது வேறு கதை.
விடயத்திற்க்கு வருவோம்..
பிரிட்டன் அரசாங்க காரியதர்சிக்கு மேஜர் பென்னர்மேன் எழுதிய ஒரு கடிதத்தில் எனக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் லுசிங்டனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் புதுக்கோட்டை தொண்டைமான்(புதுக்கோட்டை பாளையம்), தான் கட்டபொம்மன் நாயக்கரை பிடித்து வைத்திருப்பதாகவும், தாங்கள் விரைவில் வந்து அவரை பிடித்து செல்லவும் என கடிதம் எழுதியிருந்தார் என்கூறப்பட்டிருந்தது". பிரிட்டன் அரசாங்க ஏடுகளின் கூற்றுப்படி கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது தொண்டைமான் தான் எட்டப்பன் கிடையாது.
புதுக்கோட்டை அரசாங்க வலைப்பதிவில் (http://www.pudukkottai.org/places/
thirumayam/01thirumayam.html) இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது பாளையக்காரர்களிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மனும் அவரது ஊமைத்தம்பியும் அகதிகளாக புதுக்கோட்டை பாளையத்தைச் சார்ந்த காடுகளில் அலைந்து திரிந்துகொண்டிருந்தனர். திருக்களம்பூர் என்ற இடத்தில் தொண்டைமான் படைகளினால்
அவர்கள் சிறை பிடிக்கப் பட்டு திருமயம் கோட்டையில் கொஞ்ச நாள் அடைத்து
வைக்கப்பட்டு பின் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்". ஆக வரலாற்று பதிவுகளின்படி கட்டப் பொம்மனை காட்டிக்கொடுத்தது தொண்டைமான் தான்எட்டப்பன் கிடையாது. சினிமா என்ற ஊடகத்தினால் ஒரு வரலாறு அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு தவறாக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்க்கு எட்டப்பொம்மன் வரலாறு ஒரு சான்று. " "
கரிகால் பெருவளத்தான்
இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னருக்கு ஒரு புலிக்குட்டி பிறந்தான்.
நடை பயிலும் இளம் பிராயத்திலேயே பகைவர்கள் அவனை தீயிட்டு கொளுத்த முயன்றனர். காலில் கடுமையான காயத்துடன் உயிர் தப்பி காடுகளில் அலைந்து திரிந்தான். இளவரசு பட்டம் கட்ட வேண்டிய அவனை பிடித்து சிறையில் கட்டி வைத்தனர்.
சிறையில் இருந்தபடியே தன் எண்ணங்களை கூர்தீட்டி, கடுமையான் கட்டுக் காவலையும் மீறி சிறையில் இருந்து தப்பினான். தப்பியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரும் படை திரட்டி தஞ்சைக்கு கிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள வெண்ணி என்ற இடத்தில் சேர மன்னன் பெருஞ்சேரலாதன் தலைமையில் 11 சிற்றரசர்கள் கொண்ட படையை எதிர்த்து போர் புரிந்தான். போரில் பாண்டியர், ஒளியர்கள், வேளிர்கள், அறுவளர், வடவர், மேற்கத்தியர் உட்பட 11 அரசர்களையும் தோற்கடித்து பெருவெற்றி கொண்ட அந்த புலிக்குட்டி வேறு யாருமல்ல சங்க இலக்கியங்களால் போற்றபடுபவனும், கல்லையும் களிமண்ணையுமே கொண்டு மூவாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்ககூடிய வலிமையான கல்லணையை கட்டிய கரிகாலன் தான்.
சோதனைகள் அடுக்கடுக்காக ஆட்கொண்டபோதும் அதனை தகர்த்து வெற்றி
கொண்ட கரிகாலனை 3000 ஆண்டுகள் கழித்து நினைவு கொள்கிறோம். தப்பிப்பது கடினம் என்று சிறையிலே இருந்திருந்தால் கல்லணை ஏது?
காவியங்கள் போற்றும் கதாநாயகன் ஏது?
வீரத்தின் உச்சம்
நூழிலாட்டு:
ஒருவன் தன்னிடம் போர்க்கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எரிகிற
வேலையே தன் ஆயுதமாக் பறித்துக் கொண்டு தன்னை சூழ்கிற பல பகைவர்களை தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பில் தைத்துள்ளதாயினும் அவ்வேலையே உருவி எதிரிகளை அழிப்பதுதான் நூழிலாட்டு.
"களம்கழுமிய படைஇரிய
உளம்கிழித்தவேல் பறித்துஓச்சின்று"
தன் மார்பில் பதிந்த வேலை எடுத்து பகைவரது படைகளை சிதறடித்தான் என்பது பொருளாகும்.
எருமை மறம்:
பெரும்போரில் தன்னாட்டு படைவீரர்கள் புறமுதுகிட்டு ஒடுகின்ற நிலையிலும் சினங்கொண்டு தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றலுக்கு பெயர் தான் எருமை மறம்.
"கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேல்ஊன்றி
வாள்வெள்ளம் தன்மேல் வர"
"நடுங்கத்தக்க போரில் படைவீரர்கள் வெள்ளமென புறமுதிகிட்டு ஓடத் கடுமையான் வீரன், பகைவரது வாள் வெள்ளம் போல் தன்மீது பாய்ந்தும் பின்னிடாது யானை பிணக்குவியலிடையே வேலை ஊன்றி நெருப்பு விழிப்பது போல விழித்து நின்றான்"
அட்டையாடுதல்
வீரனுடைய உடலை அம்புகளும், வேலும், வாட்களும் விடாமல் தாக்கி உயிரை பிரித்தாலும், உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் உடல் இரண்டாகப் பிளந்தாலும், நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரத்தைதான் அட்டையாடுதல் என்பர்.
"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை"
பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் நிலை.
ஏம எருமை
வீரன் ஒருவன் தன கைவேலைப் பகைவரின் களிறு(யானை) மீது எறிந்துவிட்டு ஆயுதம் ஏதுமின்றி தன உடல் வலிமையாலே போர் செய்து வேல்லுதலை ஏம எருமை என்பார்கள்.
"குடைமயங்கிய வாள்அமருள்
படைமயங்கப் பாழிகொண்டன்று "
வேலைக் களிற்றின்மீது பாய்ச்சிய வீரன் தன் தோள்களையே கொம்பாகக் கொண்டு எருதுபோல் பாய்ந்து போரிட்டு வெற்றி கொண்டான்’ என்பது பொருளாகும்.
வல்வில் வேட்டம்:
ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களில் பாய்ந்து அவற்றை துளைத்து செல்வதுதான் வல்வில் வேட்டம்.
"வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? "
வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவன் யாரோ? என்று வியப்பதாக உள்ளது இப்பாடல்.
நவகண்டம் / அரிகண்டம்
தான் நினைத்த செயல் நடை பெற வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு
காரணத்திற்க்காக தனது உடலின் எட்டு பாகங்களை வாளால் துண்டித்து விட்டு ஒன்பதாவது முறை தன் வலது கையினால் தலையை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவதற்க்கு நவகண்டம் என்று பெயர்.
அரிகண்டம்
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர்.
இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் / அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக்
கொண்டு இறப்பார்.
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு.
1.வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப் பட்டது.
2.சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப் பட்டது.
3.நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவது.
5.ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க
வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடுக்கும் பட்சத்தில் அந்த்க் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
6.ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல்
சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச் சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.
ஆனால் பிற்க்காலங்களில் கோவில் கட்டுவதற்க்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக மேல் சாதிக்காரர்களால் கீழ் சாதிக் காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப் படுத்தப் பட்டார்கள். இதில் கீழ் சாதி பெண்களும், குழந்தைகளும் கூட விதிவிலக்கல்ல.